மதுபோதையில் மற்றொரு கார் மீது மோதல்: நடிகர் சக்தி வாசு கைது!

பிரபல திரைப்பட இயக்குனர் பி.வாசுவின் மகனும், நடிகரும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவருமான சக்தி வாசு, மதுபோதையில் ஓட்டிவந்த தனது காரை மற்றொரு கார் மீது மோதினார். இதனால் அவரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஜாமீனில் விடுவித்தனர்.

கோபாலபுரத்தில் வசித்துவரும் சக்தி வாசு, இன்று (08-01-2019) மதியம் சூளைமேடு இளங்கோவடிகள் தெருவில் தனது  நண்பர் ஒருவரைப் பார்க்க தனது சொகுசுக் காரில் நண்பர் ஒருவருடன் சென்றுள்ளார். குறுகலான அந்தச்சாலையில் முன்னே செல்வம் என்பவர் ஓட்டிச் சென்ற மாருதி ஆல்டோ காரை முந்திச் செல்ல முயன்றபோது அதில் மோதினார்.

இதையடுத்து அவர் நிற்காமல் தப்பிச் செல்ல முயன்றார். அப்போது காரின் உரிமையாளர் சத்தம் போடவே பொதுமக்கள் சக்தி வாசுவின் காரை மடக்கிப் பிடித்தனர். காருக்குள் நடிகர் சக்தி வாசு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சூளைமேடு போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த சூளைமேடு போலீஸார் சக்தி வாசுவிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சக்தி வாசு மது அருந்தியிருந்தது தெரியவந்தவுடன் அவரை அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாரிடம் சூளைமேடு போலீஸார் ஒப்படைத்தனர். அண்ணா நகர் போலீஸார் சக்தியை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு அவர் மது அருந்தியிருந்தது உறுதி செய்யப்பட்டது.

பின்னர் அவரை காரைவிட்டு இறங்கி காவல் நிலையத்துக்கு அழைத்தபோது காரைவிட்டு இறங்க சக்தி மறுத்தார். அவரை போலீஸார் சமாதானப்படுத்தி காவல் நிலையம் அழைத்துச் சென்று அவரிடமிருந்த லைசென்ஸ், காரின் சாவி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். அவர் ஐபிசி மீது பிரிவு 279 மற்றும் மோட்டார் வாகனச்சட்டம் 185-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

பின்னர் அவரை சொந்த ஜாமீனில் விடுவித்தனர். அவரது காரும் லைசென்ஸும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜராகி அபராதத்தை கட்டி காரை பெற்றுக்கொள்ளலாம் என போலீஸார் கூறி அனுப்பி வைத்தனர். மதுபோதையில் காரோட்டி விபத்து ஏற்படுத்தியதால் அவரது ஓட்டுநர் உரிமம் ஆறுமாதம் ரத்து செய்யப்படும் என தெரிகிறது.