இளையராஜா பயங்கரவாதியா? தேங்காய் துணுக்கு வெடிகுண்டா?

கோவில் பிரசாதத்துடன் விமானத்தில் பயணம் செய்யக் கூடாது என பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, பெங்களூரு விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு, ஒரு மணி நேரம் காக்க வைக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

இளையராஜா தன் மகன் கார்த்திக் ராஜா மற்றும் குடும்பத்தினருடன் கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள சில கோவில்களுக்குச் சென்று சாமி கும்பிட்டுவிட்டு, சென்னை திரும்புவதற்காக பெங்களூரு விமான நிலையம் வந்தார்.

அங்கிருந்த விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர், ஸ்கேனர் உதவியுடன் இளையராஜாவின் பையை சோதனை செய்தார். அப்போது பைக்குள் சில தேங்காய் துணுக்குகள் இருப்பதை ஸ்கேனர் காட்டியது.

தேங்காய் துணுக்குகளுடன் விமான நிலையத்துக்குள் போகக் கூடாது என்று அதிகாரி சொல்ல, இது கோவில் பிரசாதம் என்று இளையராஜா சொல்ல, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அருகிலிருந்த கார்த்திக் ராஜா இதை படம் பிடிக்க, அதை பார்த்த அதிகாரி ஆத்திரமடைந்தார். எடுத்த படங்களை அழிக்குமாறு அவர் கட்டளையிட்டார். அந்த அதிகாரிக்கு இளையராஜா யார் என்றே தெரியவில்லை.

எடுத்த படங்களை கார்த்திக் ராஜா அழித்த பிறகும், இளையராஜாவையும், அவரது குடும்பத்தினரையும் உள்ளே செல்ல அனுமதிக்காமல், சுமார் ஒரு மணி நேரம் காத்திருக்க வைத்தார் அதிகாரி.

அப்போது அங்கு வந்த தொலைக்காட்சி நிருபர் ஒருவர் அதிகாரியிடம் சென்று, “இவர் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா. தேசிய விருதுகள் பல வாங்கியவர்” என்று எடுத்துச் சொன்னார்.

ஒரு மணி நேர வாக்குவாதங்களுக்குப் பிறகு, இளையராஜாவையும், அவரது குடும்பத்தினரையும் விமான நிலையத்துக்குள் செல்ல அதிகாரி அனுமதித்தார். இதனால், சென்னை செல்லும் விமானம் ஒரு மணி நேரம் காலதாமதமாக புறப்பட்டுச் சென்றது.

கோவில் பிரசாதத்துடன் விமானத்தில் பயணிக்கக் கூடாது என்று இளையராஜா பெங்களூரு விமான நிலையத்தில் தடுக்கப்பட்டு, காக்க வைக்கப்பட்ட சம்பவம், அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. “இளையராஜா என்ன பயங்கரவாதியா? அவர் கொண்டு வந்த தேங்காய் துணுக்கு என்ன வெடிகுண்டா? அவரை எப்படி இப்படி அசிங்கப்படுத்தலாம்?” என்று கொந்தளிக்கிறார்கள் அவர்கள்.