தமிழக விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டியதாக மோடி மீது போலீசில் புகார்!

அனைத்து  விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கொரடாச்சேரி போலீசில் பிரதமர் நரேந்திர மோடி மீது புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதி மன்றம் உத்தரவிட்டும், அரசிதழ் ஆக்கப்பட்டு 4 ஆண்டுள் ஆகியும், பிரதமர் நரேந்திர மோடி அதனை ஏற்க மறுக்கிறார். கடந்த ஆண்டு (2016-17) தண்ணீரை பெற்று தர மோடி மறுத்ததால் தமிழகத்தில் இதுவரையிலும் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை, அதிர்ச்சி மரணம் அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் வரலாறு காணாத வறட்சியால் குளம், குட்டைகள், ஏரி உள்ளிட்ட நீர் ஆதாரங்கள் முற்றிலும் வறண்டுள்ளன.

குடிநீரின்றி பெண்கள் காலி குடங்களுடன் அலைகிறார்கள். இதனை உணர்ந்த உச்சநீதிமன்றம் உடனடியாக 2000 கனஅடி தண்ணீரை விடுவித்து தமிழக மக்களை பாதுகாக்க பல முறை உத்திரவிட்டும் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மறுத்து வருகிறார்.

இது முற்றிலும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். 400 விவசாயிகள் தற்கொலைக்கு பிரதமரே தூண்டுகோலாக இருந்துள்ளார். எனவே, அவர் மீது தற்கொலைக்கு தூண்டியது மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்து. உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

இவ்வாறு அவர் புகாரில் கூறியுள்ளார்.

இதற்கிடையே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.ஆர்.பாண்டியன் தலைமையில் திருவாரூர்- நீடாமங்கலம் இடையே உள்ள குளிக்கரையில் போராட்டம் நடந்தது. பி.ஆர்.பாண்டியன் மற்றும் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் 250 பேர் கைது செய்யப்பட்டனர்.