“விவசாயி களுக்கு ஆதரவான முழு அடைப்பு போராட்டம் வெற்றி!” – ஜி.ராமகிருஷ்ணன்

தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை தள்ளுபடி செய்யக் கோரியும், ஜப்தி நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியத்தை உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கேற்ப உடனடியாக அமைத்திட மத்திய அரசை வலியுறுத்தியும், வறட்சி மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வலியுறுத்தியும் தமிழகத்தில் விவசாயிகளும், விவசாய சங்கங்களும் பல்வேறு அமைப்புகளும் போராடி வருகின்றன. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியிலும் தமிழக விவசாயிகள் 40 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வந்துள்ளனர்.

இந்நிலையில், போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும் திமுக, சிபிஐ(எம்), காங்கிரஸ், சிபிஐ, விடுதலைச்சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஏப்ரல் 25-ம் தேதி முழு அடைப்புப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்திருந்தன. இந்த அறைகூவலை ஏற்று அரசியல் கட்சிகளும், வணிகர் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன.

இன்று நடைபெற்ற போராட்டம் நூறு சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளது. கடைகள், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. ஆட்டோ, லாரிகள் ஓடவில்லை. பெரும்பாலான பேருந்துகள் இயங்கவில்லை. பெரும்பாலான ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன.

முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் ஆங்காங்கே மறியல் போராட்டமும் நடைபெற்றது. திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூரிலும், சென்னையில் சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான கே.வி. தங்கபாலு, சிபிஐ மாநிலச் செயலாளர் ஆர். முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் அனைத்து கட்சித் தலைவர்கள், தொழிற்சங்க தலைவர்கள் உள்ளிட்டு மறியலில் கலந்துகொண்டு கைதாகியுள்ளனர். மாநிலம் முழுவதும் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மாபெரும் முழு அடைப்பு போராட்டத்தை வெற்றிபெறச்செய்த அனைத்து தொழிற்சங்க அமைப்புகளுக்கும், வணிகர்களுக்கும், ஆதரவளித்த பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு விவசாய அமைப்புகள் அனைவருக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள்” என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.