“டி.டி.வி. தினகரன் யார் என்றே எனக்கு தெரியாது”: சுகேஷ் சந்திரசேகர் பேட்டி!

“எனது கடந்தகால குற்ற பின்னணி அடிப்படையில் என்னை பலிகடா ஆக்கி உள்ளனர். டிடிவி தினகரன் யார் என்றே எனக்கு தெரியாது” என்று டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இரட்டை இலை சின்னம் பெற்றுத் தர அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனிடம் ரூ.50 கோடி பேரம் பேசியதாக, 50க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகளில் தொடர்புடைய சுகேஷ் சந்திரசேகர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தன்னை உயர் நீதிமன்ற நீதிபதி என பொய்யாக டி.டி.வி.தினகரனிடம் சுகேஷ் சந்திரசேகர் அறிமுகம் செய்துகொண்டதாகவும், “தலைமை தேர்தல் ஆணையத்தில் மூத்த அதிகாரிகள் 2 பேரை எனக்கு நன்றாக தெரியும். அவர்கள் இருவருக்கும் தலா ரூ.20 கோடி வீதம் ரூ.40 கோடி கொடுக்க வேண்டும்.  எனக்கு ரூ.10 கோடி தர வேண்டும். ஆக மொத்தம் ரூ.50 கோடி வேண்டும். நீங்கள் ரூ.50 கோடி தந்தால் உங்களுக்கு என்னால் இரட்டை இலை சின்னம் பெற்றுத் தர முடியும்“ என்று பேரம் பேசியதாகவும், இதில் ரூ.10 கோடி கைமாறியுள்ளதாகவும் டெல்லி போலீஸ் தரப்பு கூறுகிறது.

இதன் அடிப்படையில் அது டி.டி.வி.தினகரனை டெல்லிக்கு வரவழைத்து கடந்த 4 நாட்களாக விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர், டிடிவி தினகரன் யார் என்றே தனக்கு தெரியாது என கூறியுள்ளார். டெல்லி நீதிமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

என் மீதான வழக்குகளின் அடிப்படையில் என்னை கைது செய்துள்ளனர். நான் எந்த குற்றமும் செய்யவில்லை.

இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் நான் எந்த தவறும் செய்யவில்லை. கடந்த கால குற்ற பின்னணி அடிப்படையில் என்னை பலிகடா ஆக்கி உள்ளனர்.

டிடிவி தினகரன் யார் என்றே எனக்கு தெரியாது

இவ்வாறு சுகேஷ் சந்திரசேகர் கூறியுள்ளார்.