ஸ்டார் – விமர்சனம்
நடிப்பு: கவின், லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், மாறன், காதல் சுகுமார், நிவேதிதா ராஜப்பன், தீப்ஸ், ராஜா ராணி பாண்டியன், சஞ்சய் ஸ்வரூப், தீரஜ் மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: இளன்
ஒளிப்பதிவு: எழில் அரசு.கே
படத்தொகுப்பு: பிரதீப் இ.ராகவ்
இசை: யுவன் சங்கர் ராஜா
தயாரிப்பு: ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் & ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா
தயாரிப்பாளர்கள்: பி.வி.எஸ்.என்.பிரசாத், ஸ்ரீநிதி சாகர்
வெளியீடு: எஸ்எஸ்ஐ புரொடக்ஷன்ஸ்
பத்திரிகை தொடர்பு: யுவராஜ் (யுவி கம்யூனிகேஷன்ஸ்)
சென்னை மாநகரை நன்கு அறிந்தவரா நீங்கள்? ‘ஹாலிவுட்’ சாயலில் ‘கோலிவுட்’ என்று கம்பீரமாக அழைக்கப்படும் கோடம்பாக்கத்தையும், அதைச் சுற்றியுள்ள வடபழனி, சாலிகிராமம் உள்ளிட்ட பகுதிகளையும் வலம் வந்து ஊன்றி கவனித்திருக்கிறீர்களா? இங்குள்ள பெரும்பாலான டீக்கடைகளில், உணவகங்களில், பழக்கடைகளில், தையற்கடைகளில், பெட்ரோல் பங்க்குகளில், போட்டோ ஸ்டூடியோக்களில், இன்னும் இவை போன்ற சிறு சிறு வணிக ஸ்தலங்களில் வேலை செய்பவர்களுடன் பேசிப் பார்த்திருக்கிறீர்களா? அவர்களில் பெரும்பாலோர், ‘The universe always falls in love with a stubborn heart; உறுதி கொண்ட உள்ளத்தை, கடவுளாகிய பிரபஞ்சம் ஒருபோதும் கைவிடாது’ என்ற ஆழமான நம்பிக்கையுடன், ஒரு ரஜினிகாந்தாகவோ, விஜய்யாகவோ, அட்லீஸ்ட் ஒரு வடிவேலாகவோ அல்லது ஒரு மணிரத்னமாகவோ, ஷங்கராகவோ, அட்லீஸ்ட் ஒரு அட்லியாகவோ திரையுலகில் ஜொலிக்க வேண்டும் என்ற இலட்சியக்கனவுடன் வெளியூர்களிலிருந்து சென்னைக்கு ஓடி வந்தவர்களாகவும், வயிற்றுப்பாட்டுக்காக இங்கே சிறுசிறு வேலைகளைச் செய்துகொண்டே திரையுலகில் வாய்ப்புத் தேடுபவர்களாகவும் இருப்பார்கள். வயது முதிர்ந்து இளமையைத் தொலைத்த வேறு சிலரோ, நம்பிக்கை இழந்து, சினிமாக்கனவு கரைந்து, ‘மரத்திலிருக்கும் பலாக்காயை விட கையிலிருக்கும் களாக்காயே மேல்’ என்று தங்களைத் தாங்களே தேற்றிக்கொண்டு, இருக்கிற வேலையிலேயே இருந்துகொண்டு, மனைவி, குழந்தை என செட்டில் ஆகி வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருப்பார்கள். இந்த இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர் தான் ஸ்டில்ஸ் பாண்டியன் எனப்படும் போட்டோகிராபர் பாண்டியன் (லால்).
தமிழ்த் திரையுலகில் பெரிய நடிகராகப் புகழடைய வேண்டும் என்ற பெருங்கனவுடன் சென்னைக்கு ஓடி வந்து, விடாமுயற்சியுடன் முயன்றும் சாதிக்க முடியாமல், சாதாரண ஸ்டில் போட்டோகிராபராக செட்டில் ஆகிவிட்டவர் தான் பாண்டியன். இவரது மனைவி கமலா (கீதா கைலாசம்). இவர்களுக்கு ஒரு மகள்; ஒரு மகன். பாண்டியனின் அம்மாவும் இவர்களோடு வாழ்ந்துவருகிறார்.
நிரந்தர வருமானம் இல்லாமல், குடும்ப வாழ்க்கை, வறுமையில் தட்டுத்தடுமாறி ஓடிக்கொண்டிருக்கும் நிலையிலும், தன்னால் சாதிக்க முடியாததை தன் மகன் கலையரசன் (கவின்) மூலம் சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தில், மகனுக்கு சிறு வயதிலிருந்தே நடிப்பின் மீது ஆர்வத்தை ஊட்டுகிறார் பாண்டியன். கலையரசனும் படிப்பைவிட நடிப்பு மீது மிகுந்த நாட்டம் கொண்டவராக. பள்ளிக் கல்ச்சுரல்ஸில் பங்கேற்று, பாராட்டு பெறுகிறார்.
நடிகராகும் கனவுக்கு உறுதுணையாக இருக்கும் என்ற எண்ணத்தில் விஸ்காம் படிக்க கலையரசன் ஆசைப்படுகிறார். “எங்களைப் போல் நிரந்தர வருமானம் இல்லாமல் நீயும் கஷ்டப்பட வேண்டுமா? விஸ்காம் வேணாம். இஞ்சினியரிங் படி” என்று அம்மா கமலா வற்புறுத்த, வேறு வழியில்லாமல் பொறியியல் கல்லூரியில் சேருகிறார். அங்கு கவலையறியா சக மாணவ நண்பர்கள் மற்றும் காதலியும் சக மாணவியுமான மீரா மலர்க்கொடி (பிரீத்தி முகுந்தன்) ஆகியோர் தரும் உற்சாகத்தில் நடிப்பு, நடனம், அவ்வப்போது சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தேடல் என நாட்களைக் கழிக்கிறார்.
கல்லூரிப் படிப்பை முடித்தபின், நடிப்பு பயிற்சி பயில விண்ணப்பத்துடன் மும்பை செல்கிறார் கலையரசன். அவர் நடித்துக் காட்டுவது மன நிறைவைத் தராததால் நடிப்பு பயிற்சி அளிக்கும் நிபுணர் சன்னி வர்மா (சஞ்சய் ஸ்வரூப்) அவரை பயிற்சி பெற தேர்வு செய்யாமல் நிராகரித்துவிடுகிறார். என்ன செய்வது என தெரியாமல் கலையரசன் தவித்து நிற்கையில், அவருடைய பணத்தை கொள்ளையன் பறித்துச் சென்றுவிட, திக்கற்றவராய் மும்பை பிளாட்பாரத்தில் பல்வேறு இன்னல்களினூடே வாழ்ந்து, ஆறு மாத கால தொடர் முயற்சிக்குப் பின் நடிப்பு பயிற்சி நிபுணர் சன்னி வர்மாவால் தேர்வு செய்யப்பட்டு, நடிப்பு பயிற்சி பெற்று, வீடு திரும்புகிறார்.
அவருக்கு பிரபல இயக்குநரிடமிருந்து பெரிய படம் ஒன்றில் நடிக்க அழைப்பு வருகிறது. கனவு நனவாகப் போகிறது என்ற மகிழ்ச்சியில், படப்பிடிப்புக்காக காரில் ஹைதராபாத் செல்லும்போது, வழியில் ஏற்படும் பயங்கர சாலைவிபத்து அவரது வாழ்க்கையைப் புரட்டிப்போடுகிறது. பலத்த காயங்கள் அவரது முகத்தையும், கனவையும் சிதைக்கின்றன. நடிப்புக்கு பழுதுபடாத முகம் அவசியம் என்ற நிலையில், காயங்கள் ஏற்படுத்திய தழும்புகள் அவரது முகத்தில் நிரந்தரமாக தங்கிவிடுகின்றன. இனி நடிகர் ஆக முடியவே முடியாது என்று கலங்கி நிற்கையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, அவரது காதலி மீரா மலர்க்கொடி அவரைவிட்டு பிரிந்து சென்றுவிடுகிறார்.
இத்தனை இன்னல்களுக்கு நடுவே, அவற்றை எதிர்த்து நின்று, கலையரசன் ’ஸ்டார்’ ஆகி சாதித்தாரா? அல்லது அவரது அப்பா பாண்டியனைப் போல பாதியிலேயே சினிமா இலட்சியத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு யதார்த்த வாழ்க்கைக்குத் திரும்பினாரா? என்பன போன்ற கேள்விகளுக்கு எமோஷனலாக விடை அளிக்கிறது ‘ஸ்டார்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
திரைப்பட நடிகராகி சாதிக்க வேண்டும் என்ற லட்சியதீபத்தை அணையாமல் காத்துவரும் கலையரசன் என்ற கதாபாத்திரத்தில் கவின் நடித்திருக்கிறார். எப்பாடு பட்டாவது திரையுலகிற்குள் நுழைந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில், சென்னையில், ஏக்கத்துடன் முயன்றுகொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான நிஜ இளைஞர்களின் உணர்வுகளை அச்சு அசலாகப் பிரதிபலிக்கும் வகையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கல்லூரி நாட்களில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று லவ்வர் பாயாக அசத்துபவர், மும்பையில் பணமின்றி பரிதவிக்கும் காட்சி, விபத்தில் சேதமான தன் முகத்தை தானே கண்ணாடியில் பார்த்து அழும் காட்சி என அடுத்தடுத்து உருக்கமாக நடித்து பார்வையாளர்களின் மனங்களை கலங்கச் செய்திருக்கிறார். ‘டாடா’ படத்தின் மூலம் ’பிராமிஸிங் ஆக்டர்’ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, பார்வையாளர்களை விழியுயர்த்தி பார்க்க வைத்த கவின், இந்த ‘ஸ்டார்’ படத்தின் மூலம் ’நம்பிக்கைக்குரிய நட்சத்திரம்’ என்ற அந்தஸ்தை பெற்று, தலைநிமிர்த்திப் பார்க்க வைத்திருக்கிறார். தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகள் கவின்.
நாயகனின் கல்லூரிக்கால காதலி மீரா மலர்க்கொடியாக பிரீத்தி முகுந்தனும், நாயகனின் காதல் மனைவி சுரபியாக அதிதி போஹங்கரும் நடித்திருக்கிறார்கள். இந்த இரண்டு கதாநாயகிகளின் கதாபாத்திரங்கள் உப்புக்குச் சப்பாணி போல் இல்லாமல், திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் முக்கிய கேரக்டர்களாக வடிவமைக்கப்பட்டு, நடிப்பதற்கு இருவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வாய்ப்பை இருவரும் சரியாகப் பயன்படுத்தி, உணர்வுப்பூர்வமான நடிப்பை அளித்திருக்கிறார்கள்.
நாயகனின் அப்பா ஸ்டில்ஸ் பாண்டியனாக லால் நடித்திருக்கிறார். தன்னால் சாதிக்க முடியாததை தன் மகன் மூலம் சாதிக்க முயலும் ஏராளமான அப்பாக்களை அவர் மிகவும் இயல்பாக பிரதிபலித்திருக்கிறார். தன் மகனுக்கு நல்ல அப்பாவாக மட்டுமல்ல, நல்ல தோழனாகவும் இருந்து, அவரது கனவு மெய்ப்பட உறுதுணையாக நின்று பார்வையாளர்களை நெகிழச் செய்திருக்கிறார். அவரது மனைவி கமலாவாக வரும் கீதா கைலாசம் அவ்வப்போது வெளிப்படுத்தும் ‘மிகை நடிப்பு’ எனப்படும் ’ஓவர் ஆக்டிங்’கை கொஞ்சம் கம்மி பண்ணியிருக்கலாம்.
நாயகனால் மாமா என அன்புடன் அழைக்கப்படும் அன்வர் பாயாக வரும் மாறன், நடிப்பு பயிற்சி அளிக்கும் நிபுணர் சன்னி வர்மாவாக வரும் சஞ்சய் ஸ்வரூப், நடிகர் சுகுமாராகவே திரையில் தோன்றும் காதல் சுகுமார், நாயகி சுரபியின் அப்பாவாக வரும் ராஜா ராணி பாண்டியன், செல்வியாக வரும் நிவேதிதா ராஜப்பன், குலாபியாக வரும் தீப்ஸ், ஆபீஸ் பாயாக வரும் தீரஜ் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.
’பியார் பிரேமா காதல்’ என்ற வெற்றிப்படத்தை இயக்கி தமிழ் திரையுலகில் அறிமுகமான இயக்குநர் இளன், இந்த ‘ஸ்டார்’ திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். தன் வாழ்க்கையிலும், தன் அப்பாவின் வாழ்க்கையிலும் நடந்த சில உண்மைச் சம்பவங்களோடு, சுவாரஸ்யமான சில கற்பனைச் சம்பவங்களையும் இணைத்து, யதார்த்தத்துக்கு நெருக்கமாகவும், கமர்ஷியலாகவும் திரைக்கதை அமைத்து, படத்தை விறுவிறுப்பாக நகர்த்திச் சென்றுள்ளார். கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிப்புக் கலைஞர்களை தேர்வு செய்து, அவர்களிடம் இயக்குநர் திறமையாக வேலை வாங்கியிருப்பது படத்தின் நேர்த்தியை உயர்த்தியுள்ளது. படத்தின் முதல் பாதியை பள்ளி – கல்லூரிக் கால லூட்டிகளைக் கொண்டு கலகலப்பாகவும், இரண்டாம் பாதியை உள்ளத்தை உருக்கும் எமோஷனலாகவும் வடிவமைத்திருப்பதன் மூலம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்திழுத்து ரசிக்க வைப்பதில் இயக்குநர் வெற்றி பெற்றுள்ளார். “நடிப்பால் எதை வேண்டுமானாலும் மறக்கடிக்கலாம்” என்ற அழுத்தமான கருத்தை அழகான படைப்பாகக் கொடுத்தற்காக இயக்குநர் இளனை பாராட்டலாம்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் வரும் பாடல்களை திரையரங்குகளில் பார்வையாளர்கள் ஆரவாரத்துடன் ரசிப்பது கண்கொள்ளாக் காட்சி. பின்னணி இசையில் அவர் ஒரு ‘ராஜா’ங்கமே நடத்தியிருக்கிறார்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையைப் போலவே எழில் அரசு.கே ஒளிப்பதிவும், பிரதீப் இ.ராகவ் படத்தொகுப்பும் இயக்குநரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளன.
‘ஸ்டார்’ – கவின், இளன், யுவன் கூட்டணியின் ஜொலிக்கும் நட்சத்திரம்! கண்டு களிக்கலாம்!