பிரமிக்க வைக்கும் ‘இந்தியன் 2’ விளம்பர சாகசம்: துபாய் வானத்தை வசப்படுத்திய சேனாபதி!

ஊழலைச் சகிக்க முடியாமல், ஊழல் பேர்வழிகளைத் தீர்த்துக்கட்டிய ‘இந்தியன் தாத்தா’ சேனாபதி, 28 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே ஆக்ரோஷத்துடன் மீண்டும் வருகிறார்…

1996-ல் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி, மகத்தான வெற்றியைப் பெற்று சாதனை படைத்த திரைப்படம் ‘இந்தியன்’. அதில் சுபாஷ் சந்திர போஸின் ‘இண்டியன் ஆர்மி’ என்ற சுதந்திரப்போர் படையில் இணைந்து பணியாற்றிய சேனாபதி என்ற ‘இந்தியன் தாத்தா’வாக உலக நாயகன் கமல்ஹாசன் நடித்திருந்தார். லஞ்ச ஊழல் முறைகேட்டை எள்ளளவும் பொறுத்துக்கொள்ள முடியாத நேர்மையாளரான அந்த கதாபாத்திரம் பெரிதும் சிலாகித்துப் பேசப்பட்டது.

இப்போது அதே சேனாபதி, ‘இந்தியன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ’இந்தியன் 2’ திரைப்படம் மூலம் மீண்டும் வெள்ளித் திரைக்கு ‘கம் பேக்’ கொடுக்க தயாராகி வருகிறார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், ’இந்தியன் தாத்தா’ என்ற சேனாபதியாக கமல்ஹாசன் நடித்திருக்கும் இந்த ’இந்தியன் 2’ திரைப்படத்தை பிரபல பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். இம்மாதம் (ஜூலை) 12ஆம் தேதி உலகெங்கும் திரைக்கு வரவிருக்கும் இப்பெருமைமிகு படைப்பில் கமல்ஹாசனுடன் எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, ப்ரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

ஏற்கெனவே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்துக்கு மேலும் எதிர்பார்ப்பை எகிற செய்வதற்காக, கமல்ஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர், பூமியின் எட்டுத் திக்கும் நாடு நாடாக சென்று, விளம்பரப்படுத்தும் பணியை சிறப்பாக செய்து வருகிறார்கள்.

இந்த புரமோஷனுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல, யுனைட்டெட் அராப் எமிரேட்ஸ் நாட்டில் உள்ள துபாய் நகரி்ன் பாம் சுமைரா கடலுக்கு மேல் உள்ள வான்வெளியில், ’ஸ்கை டைவ்’ என்று சொல்லப்படும் விமானத்தில் இருந்து குதிக்கும் ’ஸ்கை டைவ்’ வீரர்கள், சேனாபதி இடம் பெற்றுள்ள ’இந்தியன் 2’ பட்த்தின் பிரமாண்ட போஸ்டரை, மிகப்பெரிய கொடி போல நடுவானில் பறக்க விட்டபடி தரையிறங்கி வந்து பிரமிப்பூட்டியிருக்கிறார்கள். இந்த சாகச வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.

வீடியோ: