ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி படத்தில் நடிக்கும் பழம்பெரும் தென்னிந்திய நடிகை!

உலகப் புகழ் பெற்ற ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி, இந்தியாவை பின்புலமாகக் கொண்டு உருவாக்கி வரும் “பியாண்ட் த கிளவுட்ஸ்” (Beyond The Clouds) படத்தில் தென்னிந்தியாவின் பழம்பெரும் நடிகை ஜி.வி.சாரதா முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஜீ ஸ்டூடியோஸ் (Zee Studios) மற்றும் ஐகேண்டி பிலிம்ஸ் (Eyecandy Films) நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை, இந்திய திரையுலக ரசிகர்கள் மட்டுமல்லாது, உலகளவில் கண்டு ரசிக்கும் வகையில், அண்ணன் – தங்கை பாசத்தை மையப்படுத்தி திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் மஜித் மஜிதி.

கர்நாடக மாநில நாடக உலகில் கோலோச்சிய மறைந்த குப்பி வீரண்ணாவின் வாரிசான சாரதா, ஏராளமான நாடகங்களில் நடித்ததுடன், சுமார் 60 திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியவர் ஆவார். பல பக்க வசனங்களை சரளமாக பேசவும், உணர்வுபூர்வமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தவும் வல்லவரான சாரதா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் ஜும்ப்பா எனும் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இது குறித்து பேசிய சாரதா, 15 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைப்படத்தில் நடிப்பது மகிழ்ச்சியை அளிப்பதாகவும், அதுவும், தான் “திரையுலக கடவுள்” போன்று கருதும் மஜித் மஜிதி படத்திலேயே நடிப்பது மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பன்முக திறமை கொண்ட மஜித் மஜிதியின் தேர்ந்த படக்குழுவினருடனும், தயாரிப்பு நிறுவனங்களான ஜீஸ்டூடியோஸ், ஐகேண்டிஃபிலிம்ஸ் ஆகியவற்றுடனும் இணைந்து பணியாற்ற இருப்பது மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

சாரதா மீண்டும் நடிப்புலகிற்கு திரும்பியது குறித்து பேசிய ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் ஐகேண்டிஃபிலிம்ஸின் அதிகாரபூர்வ தகவல் தொடர்பாளர்கள், “இப்படத்தில் சாரதாவை நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டாலும், மற்ற நடிகர்-நடிகைகளைப் போல் அவரும் ஸ்க்ரீன் டெஸ்ட், நேர்முக தேர்வு உள்ளிட்ட பல கட்டங்களை கடந்த பிறகே ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவரது நடிப்புத்திறன் இப்படத்திற்கு மேலும் சிறப்பு சேர்ப்பதாக அமையும் என்று தெரிவித்தனர்.

இப்படத்திற்காக நடிகை சாரதாவை உடல் எடையை குறைக்குமாறு இயக்குனர் மஜித் மஜிதி கேட்டுக் கொண்டுள்ளதாகவும், அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்ததாகவும தயாரிப்பு நிறுவன தகவல் தொடர்பாளர்கள் தெரிவித்தனர்

 

Read previous post:
0
Actress Catherine Tresa Photo Gallery

Catherine Tresa Photoshoot Stills

Close