“தேர்தலில் அதிமுகவை தெறிக்க விடுவோம்!” – விஜய் மக்கள் இயக்கம்

விஜய் படங்களுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்த அதிமுக அரசிற்கு பாடம் புகட்டும் வகையில், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக விஜய் மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் திருச்செந்தூரில் நடந்தது. இக்கூட்டத்திற்கு அந்த இயக்கத்தின் மாவட்ட தலைவர் பில்லா ஜெகன் தலைமை வகித்தார்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் அதிமுக ஆட்சியில் விஜய் படம் வெளியாகும் நேரத்தில் தேவையில்லாத இடையூறுகளும், சச்சரவுகளும் வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டது என்றும், இதனால், விஜய்க்கு நெருக்கடி கொடுத்தவர்களுக்கு இந்த சட்டப்பேரவை தேர்தலில் சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்திறகுப்பின் பில்லா ஜெகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல் விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு அளித்தது. இதனால் அதிமுக அரசு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

இதனைத் தொடர்ந்து கடலூரில் தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் ஓடோடிச் சென்று ஏராளமான உதவிகளை செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அதிமுக அரசு 2011 முதல் 2016 வரையிலான விஜய் படங்களை வெளியிட தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தது.

எனவே 2016 சட்டப்பேரவை தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் 6 தொகுதிகளிலும் அவை வெற்றி பெற நாங்கள் அயராது பாடுபடுவோம். தேர்தலில் அதிமுகவை தெறிக்க விடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்

இதன்பின்னர் பில்லா ஜெகன் தலைமையில் விஜய் ரசிகர்கள் ஊர்வலமாக திருச்செந்தூர் திமுக தேர்தல் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு திருச்செந்தூர் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனை சந்தித்து, சால்வை அணிவித்து அவர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

 திருச்செந்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் நடிகர் சரத்குமார் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.