“தேர்தல்களத்தில் ‘கோ 2’ விழிப்புணர்வை ஏற்படுத்தும்!” – நிக்கி கல்ராணி 

தமிழகத்தின் தற்போதைய  டார்லிங்  நிக்கி கல்ராணி தான்.  தன்னுடைய முதல் படமான ‘டார்லிங்’ படத்தில்  பேயாக நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் வெகுவாக பெற்ற நிக்கி, தற்போது ‘கோ 2’ திரைப்படத்தில்  பத்திரிகையாளராக அவதாரம் எடுத்துள்ளார்.

RS இன்போடைன்மென்ட் எல்ரட் குமார் தயாரித்து, சரத் இயக்கி இருக்கும் இந்த படத்தில் பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ் மற்றும் பால சரவணன்  ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

லியான் ஜேம்ஸ் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் பாடல்கள் ரேடியோவிலும், ஐ டியுன்ஸிலும் தொடர்ந்து முதல் வரிசையை பிடித்து வருகிறது. படத்திற்கு நல்ல துவக்கமாக அமைந்திருக்கும் இந்த பாடல்களின் வெற்றி தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என்கிறார் நிக்கி கல்ராணி.

சட்டப்பேரவை தேர்தல் களம் பிஸியாக உள்ள தமிழகத்தில், வாக்குப்பதிவுக்கு 3 நாட்களுக்கு முன்னால், அதாவது மே 13ஆம் தேதி வெளியாகும் ‘கோ 2’ திரைப்படம் கண்டிப்பாக மக்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று சொல்கிறார் நிக்கி.

“தேர்தல் நெருங்கி வரும் இந்த பரபரப்பான  சூழ்நிலையில், அரசியலையும், ஊடகத்தையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘கோ 2’ திரைப்படம் நிச்சயம் மக்களின் மனதில் ஒரு விழிப்புணர்வையும், மாற்றத்தையும் ஏற்படுத்தும்.

“ஒரு படத்தில் நடித்த வேடத்தில் மீண்டும் நடிக்க எனக்கு ஆர்வம் கிடையாது. அப்படி புதுப்புது வேடங்களையும், பலபல கதாபாத்திரங்களையும் நான் தேடிச் சென்றபோது எனக்கு கிடைத்த ஒரு சிறந்த வாய்ப்பு தான் ‘கோ 2’.

“இந்த படத்தில் பத்திரிகையாளர் வேடத்தில்  நடிக்கும் நான், அந்த கதாபாத்திரம் தத்ரூபமாக அமைய பல நிஜ பத்திரிகையாளர்களைப் பார்த்து அவர்களின் நடை, உடை, பாவனை மற்றும் அவர்களின் பேச்சுத் திறன், கேள்வி எழுப்பும் விதம், அவ்வளவு ஏன், அவர்கள் எப்படி தங்களின் மைக்கை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது முதற்கொண்டு அனைத்தையும் கற்று கொண்டேன். என்னுடைய உழைப்பிற்கு ஏற்ற பலனை மக்களிடத்தில் நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

அழகு மட்டுமே ஒரு நடிகைக்கு ஆதாரமாய் இருக்க முடியாது. உழைப்பும் திறமையும்  மிக மிக முக்கியம். மே 13 ஆம் தேதி  படம்  வெளிவரும் நாளை  மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்று கூறுகிறார் அழகாக  தமிழ் பேசும் நிக்கி கல்ராணி.