“சேரனின் காலம் தமிழ்சினிமாவில் முடிந்துவிட்டது!”
பெரும்பாலான தமிழர்கள் செய்வதைத்தான் சேரனும் செய்திருக்கிறார். ‘தமிழப்புத்தி’ என்பதே மற்றவர்களிடம் தவறுகளைத் தேடி, குற்றம் சாட்டி, தனது தவறுகளை மறந்தும், மறைத்தும் விடுவதுதான்.
திருட்டுத்தனமான முறையில் இணையத்தில் திரைப்படங்கள் வெளியாவது, தமிழ்ச் சினிமாவுக்கு மட்டும் உள்ள பிரச்சனை அல்ல. இது உலகம் முழுவதும் உள்ள ஒரு பிரச்சனை.
ஹாலிவூட் சினிமாப் படங்களையும் திரைக்கு வந்து சில நாட்களிலேயே, இணையத்தில் பார்த்துவிட முடியும். ஆனால் அவர்கள் யாரும் சேரன் போன்று புலம்பிக்கொண்டு திரிவதை நான் கேள்விப்பட்டது இல்லை.
இணையத்திலும், சீடிக்களிலும் படங்கள் வெளியாகின்ற பிரச்சனையைத் தாண்டி, தமது படங்களை திரையரங்கில் ஓட வைப்பதில் அவர்கள் கவனத்தோடு செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் போன்றவர்கள்கூட ‘திருட்டு விசிடி’ பிரச்சனை பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வது இல்லை. சினிமா என்கின்ற வியாபரம் தனது காலவோட்டத்தில் சந்தித்தே ஆக வேண்டிய பிரச்சனைகளில் இதுவும் ஒன்று என்கின்ற புரிதல் அவர்களுக்கு உண்டு.
மக்கள் திரையரங்கில் சென்று பார்க்கக்கூடிய படங்களை எடுப்பதில் தமிழ்த் திரைத்துறையினர் கவனம் செலுத்த வேண்டும். நடிகர், நடிகைகளுக்கு அள்ளிக் கொடுப்பதைக் குறைத்து, அந்தப் பணத்தை மற்றைய தொழில்நுட்ப விடயங்களிற்கு செலவளிக்க வேண்டும்.
சினிமா என்பது ஒரு காட்சி ஊடகம் என்பதை இயக்குனர்கள் சரியாக உணர்ந்துகொண்டு செயற்பட வேண்டும். அகன்ற திரையில் பார்க்கவேண்டிய காட்சிகளை உருவாக்குவது எப்படி என்கின்ற வித்தையைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஆனால் இதை எல்லாம் செய்யாமல், சேரன் போன்றவர்கள் விரக்தியில் புலம்புவதில் அர்த்தம் இல்லை. தமது படங்கள் ஓடாததற்கு தமது தரப்பில் என்ன தவறுகள் உள்ளன என்பதை ஆராய வேண்டும்.
இயக்குனர் சேரன் சிறப்பான பங்களிப்பை தனது காலத்தில் தமிழ்ச் சினிமாவிற்கு செய்திருக்கிறார். ஆனால் அவரது காலம் தமிழ்ச் சினிமாவில் முடிந்துவிட்டது. சினிமாவின் மாற்றங்களுக்கும், வேகத்திற்கும் ஏற்றபடி சேரன் தன்னை மாற்றிக்கொள்ளவும், வளர்த்துக்கொள்ளவும் இல்லை. இனி அவரால் முன்பு போல் வெற்றிப் படங்களை தர முடியாது. இதுதான் உண்மையான பிரச்சனை.
உணர்ச்சி பொங்கவும், கண்ணீர் விட்டும் பேசக்கூடிய சேரன், தனது சக இயக்குனர் சீமான் செய்வதை போன்று ‘ஈழ வியாபாரம்’ செய்யப் போயிருந்தால், பொருளாதார ரீதியாக நன்றாக வந்திருப்பார். ஆனால் இப்பொழுது தனது வாயால் அதையும் கெடுத்துக்கொண்டார்.
சின்ன திரையில் சீரியல்கள் இயக்கப்போவதே அவருக்கு இப்போது எஞ்சியுள்ள ஒரே வழி.
– வி.சபேசன்
சமூக-அரசியல் விமர்சகர்
Courtesy: thetimestamil.com