தப்பிச்சென்ற நடிகர் அருண் விஜய்யை பிடிக்க தனி போலீஸ் படை!

அ.தி.மு.க.விலிருந்து சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு மாறியவர் நடிகர் விஜயகுமார். இவரது மகனும், நடிகருமான அருண் விஜய் தனது மனைவி ஆர்த்தியுடன், நடிகை ராதிகாவின் மகள் ரேயானின் திருமண பார்ட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கலந்துகொண்டார்.

இந்த பார்ட்டியில் அளவுக்கு அதிகமாக மது அருந்திய அருண் விஜய், போதை தலைக்கேறிய நிலையில், மனைவியை காரில் ஏற்றிக்கொண்டு வீடு நோக்கி புறப்பட்டார். முழு மப்பில் கார் ஓட்டி வந்த அவர், வழியில் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையம் முன்பு நின்றிருந்த போலீஸ் வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார்.

இந்த விபத்தில் போலீஸ் வாகனத்தின் வலது பக்கம் பின்புறம் சேதமடைந்தது. மோதியவுடன் காரின் ஸ்டேரிங்கில் இருந்த பலூன் விரிந்ததால் அருண் விஜய் காயமின்றி தப்பினார். இந்த விபத்து தொடர்பாக நுங்கம்பாக்கம் போலீசார் அருண் விஜய்யிடம் விசாரணை நடத்திவிட்டு, அவரை பாண்டிபஜார் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைப்பதற்காக அழைத்தனர்..

“போலீஸ் வாகனத்தில் வருவதற்கு கூச்சமாக உள்ளது. நான் எனது தந்தையின் இன்னோவா காரில் வருகிறேன்” என சொல்லியதன் பேரில் போலீசார் முன் செல்ல அருண் விஜய் பின்னால் சென்றார். ஆனால் அவர் பாண்டிபஜார் போலீஸ் நிலையம் செல்லும் வழியில் தப்பிச் சென்றுவிட்டார். இது போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கமிஷனர் ராஜேந்திரன் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். உளவுத்துறை போலீசார் விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. அருண் விஜய் போதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியபோது போக்குவரத்து உதவிக்கமிஷனர் ஜெகதீசன் இரவு ரோந்தில் இருந்துள்ளார் என்றும், சம்பவ இடத்துக்கு சென்று அவர் விசாரணை நடத்தவில்லை எனவும், அலட்சியமாக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் அருண் விஜய்யை வேண்டுமென்றே போலீசாரே தப்பிக்க வைத்து அவருக்கு ஆதரவாக செயல்பட்டதாக புகார்கள் எழுந்தன. தனக்கு விபத்து என கேள்விப்பட்டதும், தனது தாய் மயங்கி விழுந்து விட்டதாகவும் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்து விட்டு வருவதாகவும் கூறிவிட்டு சென்றவர் அப்படியே போய் விட்டார் என போலீசார் தரப்பில் அதிகாரிகளுக்கு விளக்கம் தரப்பட்டதாகவும் தெரிகிறது.

இதனையடுத்து போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு உதவிக்கமிஷனர் ஜெகதீசன் மற்றும் இன்ஸ்பெக்டர் சதீஷ் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். அத்துடன், தப்பிச் சென்ற அருண்விஜய்யை பிடிக்க தனி போலீஸ் படை அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.