பிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்: ஜெயலலிதா இரங்கல்

தமிழ் திரையுலகின் முதல் செய்தி தொடர்பாளர் (பிஆர்ஓ) ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார். அவருக்கு வயது 88.

வயோதிகத்தால் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அவரது உயிர் பிரிந்தது.

முதன்முதலில், ஃபிலிம் நியூஸ் பத்திரிகையில் அவர் எடுத்த திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் வெளிவந்தன. இதனால் ஆனந்தன், ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் என்றே பின்னாளில் அழைக்கப்பட்டார்.

தென் இந்திய திரை வர்த்தக கூட்டமைப்பின் பத்திரிகையில் பணியாற்ற ஆனந்தனுக்கு கிடைத்த வாய்ப்பு அவருக்கு ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தித் தந்தது.

திரைப்பட ஸ்டூடியோக்களை வலம்வந்த ஆனந்தன் குறுகிய காலத்தில் நிறைய திரைப்படங்கள் குறித்த தகவல்கள், புகைப்படங்களை திரட்டினார். தனது கடின முயற்சியால் 6000 படங்கள் பற்றிய அரிய தகவல்களை அவர் திரட்டினார்.

சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா, சிவகுமார், கமல்ஹாசன் ஆகியோரது நடிப்பில் வெளியான பல்வேறு திரைப்படங்களில் இருந்தும் புகைப்படங்களை திரட்டி ஒரு பிரம்மாண்ட கண்காட்சி நடத்தினார். அந்த கண்காட்சி திரையுலகில் ஆனந்தனுக்கு நல்லதொரு பெயரும், பெருமையும் பெற்றுத் தந்தது.

கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அவர் பெற்றிருக்கிறார்.

தமிழ் சினிமா குறித்து ஒரு புத்தகத்தை வெளியிட வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் கனவாக இருந்தது. 2003-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் நிதியுதவியுடன் 1930-ம் ஆண்டு முதலான தமிழ் சினிமாக்கள் குறித்த ஒரு தொகுப்பினை ஆனந்தன் புத்தகமாக வெளியிட்டார்.

தமிழ் திரைப்படத் துறையின் வரலாற்றைப் பதிவு செய்தவர்களில் மிக முக்கியமானவர். தமிழ் சினிமா தொடர்பான பல அரிய ஆவணங்கள் மற்றும் தகவல்களை சேகரிப்பதற்கே தன் வாழ்நாளின் பெரும்பகுதியை இவர் அர்ப்பணித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரைப்படங்கள் குறித்த பல்வேறு புள்ளிவிவரங்களின் களஞ்சியமாக இருந்த அன்னாரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் இரங்கலைப் பதிவு செய்து வருகின்றனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழ்த் திரை உலகின் வரலாற்று ஆசிரியர் என்றும், நடமாடும் நூலகம் என்றும் பெருமை பெற்ற திரு.’பிலிம் நியூஸ்’ ஆனந்தன், உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். சினிமா உலகில் நீண்ட கால அனுபவம் உள்ள திரு ‘பிலிம் நியூஸ்’ ஆனந்தன், சினிமா தொடர்பான அனைத்து விவரங்களையும், புகைப்படங்களையும் தொகுத்துள்ளார். தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் செய்தியாளராக பணியாற்றியபோது, தமிழ் சினிமா குறித்த விவரங்களை சேகரிக்க ஆரம்பித்து, அதையே உணர்வுபூர்வ பணியாக மேற்கொண்டார். எவரிடமும் இல்லாத வகையில் அனைத்து விவரங்களையும் இவர் தொகுத்து வைத்திருந்தார். இதன் காரணமாகவே, கலா பீடம், கலைச்செல்வம், கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். 2002-ம் ஆண்டு எனது தலைமையிலான அரசு, திரு ‘பிலிம் நியூஸ்’ ஆனந்தன் சேகரித்து வைத்திருந்த விவரங்கள், புத்தகங்கள், புகைப்படங்கள் போன்ற சேகரிப்புகளை அரசு வாங்கி பாதுகாத்திட பத்து லட்சம் ரூபாய் வழங்கியது. மேலும், திரு ‘பிலிம் நியூஸ்’ ஆனந்தன் எழுதிய ‘சாதனை படைத்த தமிழ் திரைப்பட வரலாறு’ என்னும் நூலை வெளியிடுவதற்கு நிதி உதவி வழங்கியது. திரு.’பிலிம் நியூஸ்’ ஆனந்தனின் இழப்பால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், திரை உலகத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.