‘காலச்சுவடு’ ஆசிரியர் கண்ணனின் கயவாளித்தனம்!

‘காலச்சுவடு‘ கண்ணனுக்கு மிக்க நன்றி. வெகுஜன பத்திரிகையாளர்களின் (தன்)மானத்தை காப்பாற்றிவிட்டார்.

தமிழினி எழுதிய(தாக சொல்லப்படும்) ‘ஒரு கூர்வாளின் நிழலில்‘ நூலை சமீபத்தில் ‘காலச்சுவடு‘ பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அந்த நூலின் பின்அட்டையில் ஒரு குறிப்பு உள்ளது. அதன் கீழே ‘தமிழினி’ என்றும் அச்சிடப்பட்டுள்ளது. அதாவது, தமிழினியே அக்குறிப்பை எழுதியது போன்ற தோற்றத்தை அந்த நூல் ஏற்படுத்தியிருக்கிறது.

0a1

இந்நிலையில், அந்த பின்அட்டைக்குறிப்பு, 2009ம் ஆண்டு ‘காலச்சுவடு‘ இதழிலேயே பிரேமா ரேவதி எழுதிய கட்டுரை ஒன்றில் இடம்பெற்றிருந்த வாசகம் என்றும், அதை எழுதியது தமிழினி அல்ல என்றும் தீபச்செல்வன் தன் முகநூல் பக்கத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

இதற்கு ‘காலச்சுவடு‘ கண்ணனும் தன் முகநூல் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அதை படித்தபின் ஏற்பட்ட நிம்மதிக்கு அளவேயில்லை.

‘காலச்சுவடு‘க்கு பொறுப்பாசிரியர்கள் மாறியிருக்கிறார்கள். ஆனால், ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் கண்ணனே 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறார். அப்படியிருக்க, தான் ஆசிரியராக இருக்கும் இதழில் வெளியான கட்டுரை ஒன்றின் பகுதியை – தனது பதிப்பகம் சார்பில் வெளிவரும் நூலின் பின்அட்டையில் – அந்த நூல் ஆசிரியரின் பெயரில் வெளியிட மகா துணிச்சல் வேண்டும்!

“தமிழினியின் கணவர் அளித்த குறிப்பைத்தான் அப்படியே வெளியிட்டிருக்கிறோம்” என்கிறார் கண்ணன்.

எனில், அதை படிக்கும்போது – தன் பத்திரிகையில் வெளியான இன்னொருவரின் கட்டுரை வாசகங்களை இது நினைவுப்படுத்துகிறதே என்று அவருக்கு தோன்றவில்லை!

அப்பாடா என நிம்மதி ஏற்பட்டது இந்த இடத்தில்தான்.

பொதுவாக சிறுபத்திரிகை அல்லது தீவிர இலக்கிய இதழ்களின் ஆசிரியர்கள், “எதையும் படிக்காமலேயே வெகுஜன இதழ்கள் கட்டுரைகளை பிரசுரம் செய்கின்றன” என குற்றம்சாட்டுவார்கள். வெகுஜன இதழ்களின் ஆசிரியர்களை முட்டாள்கள் என இகழ்வார்கள்.

அப்படியல்ல, தீவிர இலக்கிய பத்திரிகைகளை நடத்துபவர்களும், அதன் ஆசிரியர்களும்கூட எதையுமே – தங்கள் பத்திரிகைகளில் வெளியாகும் கட்டுரைகளைக்கூட – படிப்பதில்லை என்பதை நாசுக்காக கண்ணன் அறிவித்திருக்கிறாரோ என்று தோன்றுகிறது!

நன்றி கண்ணன்.

ஸ்வீட் எடு. கொண்டாடு. நாம் அனைவரும் ஒரே இனம்தான்!

 – கே.என்.சிவராமன்

 (குறிப்பு: பதிவு கே.என்.சிவராமனுடையது. தலைப்பு நம்முடையது.)

                                                          # # #

தமிழினி சார்ந்து பல தோழர்கள் அவருடனான தங்களது அனுபவத்தினை பகிர ஆரம்பித்திருக்கிறார்கள். இதில் காலச்சுவடும், அதன் பின்னணியில் இயங்குபவர்கள், இதை ஆதரிப்பவர்களின் முகங்களும் அம்பலப்படுகின்றன.

தோழர். Siva Sinnapodi அவர்களின் பதிவில் இருந்து…

“..தமிழினி எனக்கு நன்கு அறிமுகமானவர் சமாதான காலத்திலும் சரி சிறையிலிருந்து விடுதலையாகி வந்த பின்பும் பல தடவைகள் இணைய வழி தொடர்பாடல் மூலம் அவர் என்னுடன் உரையாடியிருக்கிறார். இந்த உரையாடல்களின்போது அவர் எந்த சந்தர்ப்பத்திலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ, தமிழீழ தேசியத் தலைவரையோ, அல்லது இயக்கத் தளபதிகளையோ தனிப்பட்ட முறையில் அவர் குற்றம் சாட்டியதுமில்லை, கொச்சைப்படுத்தியதுமில்லை…..”

தமிழினியோடு ஏதோ தாங்கள் மட்டுமே பேசியதாக எழுதிச் செல்பவர்கள் இதையும் படித்தால் நல்லது.

அவர் மேலும் எழுதியவற்றிலிருந்து…

“……விடுதலைப்புலிகள் மீதான வன்மம், விடுதலைப் போராட்டத்துக்கு செல்லும் பெண்களை இழிவுபடுத்தும் ஆணாதிக்க சிந்தனை மரபு என்பன இந்த நூல் வெளியீட்டின் பின்னணியில் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. தமிழினியின் பெயரால் இந்த இரண்டு இலக்குகளை நோக்கி காய் நகர்த்தப்பட்டிருப்பதாகவே நான் பார்க்கிறேன். பொதுவாக பிரபலமான ஒருவரின், அதுவும் மக்களின் விடுதலைக்காக தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்த ஒருவரின் அனுபவக் குறிப்பை அவரது மரணத்தின்பின் வெளியிடும்போது பல தரப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு அறிஞர் குழுவின் மேற்பார்வையில் வெளியிடுவதுதான் முறையாகும். உலகெங்கும் இது தான் நடைமுறையாக இருந்திருக்கிறது. தமிழினியின் இந்த நூல் வெளியீட்டில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை……”

இம்மாதிரியான நடைமுறைகளை எல்லாம் பின்பற்றும் நாகரிகமும், அரசியலும், அறமும் காலச்சுவடுவிடம் என்றுமே இருந்ததில்லை.

”…..சில தமிழ் தேசியர்கள் இது தமிழினி எழுதியதல்ல, திட்டமிட்ட இடைச்செருகலுக்கு உட்படுத்தப்பட்டது என்கிறார்கள். அதற்கு உதாரணமாக அந்த நூலின் பின்புற அட்டையில் வேறொருவர் முன்பு எழுதிய குறிப்பு ஒன்று தமிழினியின் பெயரில், தமிழினி எழுதியதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘இது இந்த நூலை வெளியிட்ட பதிப்பகம் செய்த தவறு. இது தற்செயலாக நடந்தது’ என்று இன்னொரு சாரார் வாதாடுகின்றனர். ஒரு கத்துக்குட்டி பதிப்பகம் இந்த வேலையை செய்திருந்தால் இதை தற்செயலாக நடந்த தவறு என்று ஒத்தக்கொள்ளலாம். தன்னை பிரபலமான பதிப்பகம் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு பதிப்பகம் இதை செய்திருப்பதை தற்செயலானது என்ற வரையறைக்குள் அடக்க முடியாது…”

காலச்சுவடு போன்ற நேர்மையற்ற பதிப்பகங்களை புறக்கணிக்கும் அறம் நம் படைப்பாளிடம் வருதல் மக்கள் அரசியலுக்கு வலுச்சேர்ப்பதாக இருக்கும். செய்வார்களா எனத் தெரியவில்லை.

– திருமுருகன் காந்தி

மே 17 இயக்கம்