உ.பி.யில் மாயாவதி, அகிலேஷ் தொகுதி உடன்பாடு: பாஜக, காங்கிரஸ் தோல்வி உறுதியானது!

வரும் மக்களவை தேர்தலில் உத்தரபிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 38 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இதனை மாயாவதி, அகிலேஷ் இருவரும் இன்று  அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

வரும் மக்களவை தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் வலிமையான கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வியூகம் அமைத்து வருகின்றன. இதன் ஒரு கட்டமாக, உத்தரபிரதேசத்தில் எதிரும் புதிருமாக இருந்த பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் மக்களவை தேர்தலில் கைகோத்துள்ளன.

உத்தரபிரதேசத்தில் கடந்த மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 80 இடங்களில் பாஜக கூட்டணி 73 இடங்களில் வென்று பெரும் சாதனை படைத்தது. எனவே வரும் மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டுமென்றால் வலிமையான கூட்டணி அமைக்க பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் நடவடிக்கை எடுத்து வந்தன.

இந்த நிலையில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பகுஜன்சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோர் லக்னோவில் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இருவரும் கூறியதாவது

சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் தலா 38 தொகுதிகளில் போட்டியிடும் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி, சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் மட்டும் எங்கள் கூட்டணி சார்பாக வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம். ஆனால், பிரதமர் நரேந்திர தாமோதருக்கு எதிராக நிச்சயம் வேட்பாளரை நிறுத்துவோம்.

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸூக்கு செல்வாக்கு இல்லை. அக்கட்சியின் வாக்குகள் எங்கள் அணிக்கு வருவதற்கு வாய்ப்பில்லை. எனவே அக்கட்சிக்கு கூடுதலாக எந்த தொகுதியையும் ஒதுக்க நாங்கள் விரும்பவில்லை. அவர்கள் எங்கள் கூட்டணியில் இணையாவிட்டாலும், இந்த 2 தொகுதிகளில் நாங்கள் வேட்பாளர்களை நிறுத்தப் போவதில்லை.

எஞ்சியிருக்கும் இரு தொகுதிகளை சிறு சிறு கட்சிகளுக்கு அளிக்க உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாயாவதி – அகிலேஷ் தொகுதி உடன்பாடு காரணமாக உத்தரபிரதேசத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளின் தோல்வி உறுதியாகிவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.