“திரைக்கதை”யை நேர்த்தியாக எழுத காவல்துறைக்கு சில யோசனைகள்!
ஆரூர்தாஸ் தெரியுமா? பழைய வசனகர்த்தா. பிரபலமானவர். திரைக்கதாசிரியர்தான். ஆனால் நம்மூரில்தான் திரைக்கதை என்ற டைட்டிலுக்கு கீழ் இயக்குநர் பெயர் வரவில்லையெனில் அந்த இயக்குநர் கற்பிழந்தவர் என கருதிவிடும் நம்பிக்கை இருக்கிறதே! அதனால்தான் ஆரூர்தாஸ் வெறும் வசனகர்த்தாவாக அறியப்படுகிறார். விஷயம் தெரிந்தவனுக்கு தெரியும் வசனம் எழுதுபவன்தான் திரைக்கதை எழுதுபவனும் என்று. அந்த காலத்தில் வசனத்திலும் திரைக்கதையிலும் ஆரூர்தாஸ்தான் தாதா. நிறைய வசனங்கள் இருக்கும். செந்தமிழ் வசனங்கள்தான்.
ஆரூர்தாஸ் காலத்தில் இருந்து மெல்ல சினிமா மாற ஆரம்பித்தது. சினிமாவுக்கான மொழியும் திரைக்கதையும் மாற தொடங்கியது. காட்சி மொழியை திரைக்கதை ஆக்கினார்கள். மகேந்திரன், பாரதிராஜா போன்றோரை இந்த காலகட்டத்தின் ஜாம்பவான்கள் என சொல்லலாம். இவர்களின் பாணி திரைக்கதை தமிழ் சினிமாவுக்கு புது ரத்தம் பாய்ச்சியது. இதே காலத்தில் பாக்யராஜ் போன்ற திரைக்கதாசிரியர்களும் தங்கள் வசனங்களால் பேர் பெற்றார்கள். எழுபதுகளின் பிற்பகுதி காலம். திரைக்கதை உத்திகள் பல புதிதாக கையாளப்பட்டன. பாக்யராஜை திரைக்கதையின் ஜித்தன் என கூறுவார்கள். அவர் எடுக்கும் கதைகளும் சரி அவற்றுக்கான திரைக்கதைகளும் சரி அத்தனை சுவாரஸ்யம் கொண்டிருக்கும்.
80களின் பிற்பகுதியில் மணிரத்னம் அறிமுகமாகி தமிழ்சினிமாவை வேறொரு தளத்துக்கு கொண்டு சென்றார். இவர் தன் படங்களில் பல எழுத்தார்களை வசனம் எழுத வைத்தார். அதாவது திரைக்கதை. பாலகுமாரன், சுஜாதா, ஜெயமோகன் போன்றவர்கள்.
கமல்ஹாசன் தன் படங்களில் பலவற்றுக்கு சுஜாதா, பாலகுமாரன் போன்றவர்களை பயன்படுத்தியிருந்தாலும் காமெடி பாணி படங்களுக்கென மெளலி, க்ரேஸி மோகன் போன்றவர்களை பயன்படுத்தினார். அவரே திரைக்கதாசிரியராகவும் பணியாற்றி அபூர்வ சகோதரர்கள், தேவர்மகன் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார்.
தவிர சுபா, செல்வராஜ், எஸ்.ராமக்கிருஷணன் போன்ற இன்னபிறரும் திரைக்கதை எழுதியிருக்கிறார்கள். போலவே கிரேஸி மோகனும் காமெடி ரகத்தில் பிரமாதப்படுத்தியவர். கமல் மற்றும் ரஜினி போன்றோருடன் சேர்ந்து இவர் அடித்த ஹிட்டுகள் பல.
ஆரம்ப காலகட்டங்களில் திரைக்கதை நாடகத்தன்மை கொண்டிருந்தது. சம்பவங்களின் தொகுப்பும் நீண்ட கதையாடலுமாக இருந்தது. நாளடைவில் வடிவமாற்றம் கண்டு பாக்யராஜ் காலத்தில் 2 ஆக்ட் வடிவத்தையும் சுஜாதா காலத்தில் 3 ஆக்ட் வடிவத்தையும் தற்போது நான் லீனியர் வடிவத்தையும் வந்தடைந்திருக்கிறது.
2 ஆக்ட் வடிவம் என்பது முதல் பாதி முழுவதுக்கும் கதைக்குள் போகாமலே, கதாபாத்திரங்களை நிறுவவும் வெறும் சுவாரஸ்யமான காட்சிகளை காட்டவும் பயன்படுத்திவிட்டு, இடைவேளை விடும்போது ஒரு முடிச்சு விழும் வகை. அந்த முடிச்சுதான் கதையின் தொடக்கமாக இருக்கும். அந்த முடிச்சு அவிழ்வதுதான் படத்தின் முடிவாக இருக்கும்.
3 ஆக்ட் வடிவம் என்பதில் கதை என்னவென்பதற்கான பொறியை படத்தின் ஆரம்பத்திலேயே கொடுத்துவிட வேண்டும். அதற்கு பின், கதாபாத்திரங்களை நிறுவுவதன் ஊடாக கதை பின்னி 45 நிமிடங்களில் ஒரு முடிச்சும் அதற்கான தீர்வை நோக்கிய பயணத்தில் அடுத்த 45 நிமிடங்களில் இன்னொரு முடிச்சுமாக விழுந்து க்ளைமேக்ஸில் அவை தீர்த்துவைக்கப்படும்.
நான் லீனியர் படங்களில் நிறைய திருப்புமுனைகள் இருக்கும். நிறைய ட்ராக்குகள் இருக்கும். பெரும்பாலான இந்த திருப்புமுனைகள் கதையை முன்னும் பின்னுமாக காட்டி, தேவையானவற்றை மறைத்து, தேவைப்படும் நேரங்களில் வெளிப்படுத்தி, அதிர்ச்சி ஏற்படுத்தும் உத்தி. இது இப்போது பரவலாக வரவேற்பை பெற்று வருகிறது.
திரைக்கதை சொல்லிக் கொடுக்கும் நிறைய நிறுவனங்கள் இருக்கின்றன. புத்தகங்கள் கிடைக்கின்றன. தமிழ் சினிமாவில் உள்ளவர்கள் பெரும்பாலும் ஹாலிவுட் பாணியை விரும்புவதால் ஆன்லைன் டுட்டோரியல்கள், மென்பொருள்கள் அவர்களின் தேவைக்கு பயன்படுகின்றன. அறிவையும் வளர்க்க உதவுகின்றன.
திரைக்கதை கற்றுக்கொள்ள எளிய வழி ஒரு படத்தை போட்டுவிட்டு, கையில் பேப்பர் பேனாவுடன் உட்கார்ந்துகொள்ள வேண்டும். டைட்டில் தொடங்கி, காட்சி எண், காட்சியின் சூழல், பங்குபெறும் பாத்திரங்கள், வசனங்கள், பொழுது போன்றவற்றை பார்த்து பார்த்து எழுத வேண்டும். முடித்த பிறகு, அதை திரும்ப வாசித்து பார்க்கும்போது திரைக்கதாசிரியர் பயன்படுத்தியிருக்கும் நுட்பங்கள் பேப்பரில் உயிர்பெறுவதை காணலாம். சுவாரஸ்யமான வழியும்கூட.
தோல்வியான திரைக்கதைகளையும் படிக்க வேண்டும். தோற்ற படங்களை பார்த்தும் கற்க வேண்டும். அப்போதுதான் நாமும் தவறு செய்யாமல் இருக்க முடியும்.
ஒரு திரைக்கதை தோற்றுப் போகும் என்பதற்கான சிறந்த அடையாளம் அடுத்து என்ன காட்சி வரும் என்பதை எளிதாக யூகித்து விடுவதே. இன்றைய பார்வையாளர்கள் ரொம்பவும் தெளிவு. வெளிநாட்டு படங்கள் பலவற்றை பார்த்து, தொழில்நுட்பங்களில் இருந்து திரைக்கதை வரை கரைத்து குடித்திருக்கிறார்கள். ஆகவே அவர்களை வெல்ல வேண்டுமென்றால் ரொம்பவே மெனக்கெட வேண்டும். இல்லையெனில் அடுத்த காட்சி என்னவென்பதை எளிதாக யூகித்துவிடுவார்கள். படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே அடுத்து என்ன நடக்கும் என ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்துக் கொண்டிருப்பார்கள்.
குற்றமே தண்டனை போன்ற, உடனே வெளியாகக்கூடிய படங்களின் திரைக்கதையையோ சம்பவங்களையோ எடுத்து பயன்படுத்தினால் மாட்டிக்கொண்டு விடுவோம். படம் ரிலீஸ் ஆனதும் உண்மை தெரிந்துவிடும். திருட வேண்டும் என முடிவு செய்துவிட்டால் நிறைய பழைய நல்ல படங்கள் உள்ளன. வெளிநாட்டு படங்கள் பல உள்ளன. அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுத்து சேர்க்கும்போது திரைக்கதை புதிதாக தெரியும். மக்களுக்கும் பெரிய அளவில் சந்தேகம் ஏற்படாது.
முக்கியமாக, நடிகர் நடிகைகளை கேட்டு திரைக்கதை எழுதாதீர்கள். அவர்களுக்கு நடிப்புதான் வரும். திரைக்கதை தெரியாது. அதற்கென எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். பெரும்பாலும் எழுத்தாளர்கள் தமிழ் சினிமாவில் மதிக்கப்படுவதில்லை. ஆகையால் தேடவே வேண்டாம். சுலபமாக கிடைத்துவிடுவார்கள். அவர்களை கலந்தாலோசிக்கலாம்.
அடுத்த திரைக்கதை கண்டிப்பாக வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்.