“காதல் மணம் புரிந்தவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து காட்ட வேண்டும்”: சிவகுமார் அறிவுரை!

நடிகர் சிவகுமாரின் 75வது பிறந்த நாள் விழா மற்றும் ‘Golden Moments of Sivakumar in Tamil Cinema’ புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிவகுமார், அவரது மகன்களும் நடிகர்களுமான சூர்யா, கார்த்தி மற்றும் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் சிவகுமார் பேசியதாவது:

சினிமா என் அம்மா. அவள் என்னைக் கைவிடமாட்டாள். என்னுடைய 150வது படத்தில் தான் 1 லட்ச ரூபாய் சம்பளமே வாங்கினேன். ஒரு நடிகனுக்கு முகம் நன்றாக இருக்கும்போதே, நடிப்பை நிறுத்திவிட வேண்டும் என்பதால் நடிப்பை நிறுத்திவிட்டேன்.

நான் பெரிய நடிகன் என்று எப்போதுமே சொல்லிக் கொண்டதில்லை. வாழ்க்கையில் நிறைய கஷ்டப்பட்டு தான் இந்நிலைக்கு வந்திருக்கிறேன். என்னுடைய 14 வயது முதல் 24 வயதிற்குள், வாழ்க்கை முழுவதும் வரைந்திருக்க வேண்டிய ஓவியங்களை வரைந்து முடித்துவிட்டேன். இதனை நான் கர்வத்துடனும், பெருமையுடனும் சொல்லிக் கொள்வேன்.

எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வந்த பத்திரிகையாளர்கள், எனது மகன்களுக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். சூர்யாவின் காதல் திருமணம் பற்றியும் எழுதினார்கள். அது நடந்தது. அவர்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். அது போதும் எனக்கு.

இப்போதெல்லாம் பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணம் மாறி விட்டது. பெரும்பாலான திருமணங்கள் அடுத்த நாள் காலையில் பிரிந்து விடுகிறது. காலப்போக்கில் பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணம் என்பதே இருக்காது. இனிமேல் காதல் திருமணங்கள் தான் ஜெயிக்கும்.

ஆண் – பெண் இருவரும் ஒரே இடத்தில் பணிபுரியும்போது பழகுகிறார்கள். அப்படிக் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள், சந்தோஷமாக வாழ்ந்து காட்ட வேண்டும். அப்படிப்பட்டவர்களை நான் கையெடுத்துக் கும்பிடத் தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு சிவகுமார் பேசினார்.