“ஜெயலலிதா மருத்துவ பலத்தாலும் மனோ பலத்தாலும் மீண்டு வருவார்!” – வைரமுத்து

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 37 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், இன்று திரைப்பட இயக்குனர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து ஆகியோர் அப்போலோ மருத்துவமனைக்கு வந்து ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைரமுத்து, “தமிழக முதலமைச்சர் என்ற முறையிலும், நான் சார்ந்த கலைத் துறையின் மூத்த கலைவாணி என்ற முறையிலும், அவரது உடல்நிலை பற்றி விசாரிக்க வந்தேன். அவர் நலமாக இருப்பதாக நண்பர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர். போராட்டங்களால் சூழப்பட்ட வாழ்க்கைக்கு சொந்தக்காரர் முதலமைச்சர் ஜெயலலிதா. அவர் மருத்துவ பலத்தாலும் மனோ பலத்தாலும் மீண்டு வருவார். முதல்வர் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்தார்.