“4 மாதங்களாக சுவாதியுடன் பழகிவந்தேன்”: ராம்குமார் வாக்குமூலம்!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்போசிஸ் மென்பொறியாளர் சுவாதியை கொலை செய்த கொலையாளி ராம்குமார் நேற்று இரவு நெல்லையில் கைது செய்யப்பட்டார்.

அப்போது, அவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர், தென்காசி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் அவரை நெல்லை அரசு மருத்துவமனையில்  போலீசார் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு கழுத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பின்னர் ராம்குமார் சில நிமிடங்கள் பேசினார் பின்னர் மயக்க நிலையை அடைந்தார்.

அப்போது ராம்குமார் போலீசாரிடம் கூறியதாவது:-

நெல்லை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் படித்தேன். படிப்பை முழுமையாக முடிக்கவில்லை. சென்னை சூளைமேட்டில் தங்கி இருந்து ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தேன். அப்போதுதான் சுவாதியின் அறிமுகம் கிடைத்தது. கடந்த 4 மாதங்களாக அவருடன் பழகி வந்தேன்.

நான் வேலைக்கு நடந்து செல்வது வழக்கம். அதே நேரத்தில் சுவாதியும் வேலைக்கு புறப்பட்டு வருவார். அப்போது இருவரும் பேசிக் கொள்வோம். சுவாதியிடம் நான் நட்பாக பழகினேன். நாளடைவில் நான் அவரை காதலிக்க தொடங்கினேன்.

இந்நிலையில் பொறியியல் படிப்பை முடிக்காதவன் என்றும், துணிக் கடையில் வேலை செய்பவன் என்றும் அறிந்ததும் சுவாதி  என்னிடம் பேசுவதை தவிர்த்தார். அப்போது அவரிடம் சென்று எனது காதலை சொன்னேன். ஆனால் அவர் என்னை உதாசீனமாக பேசினார். தொடர்ந்து என்னை சந்திப்பதை தவிர்த்தார்.

காலையில் வேலைக்கு செல்லும்போது சுவாதியை அவரது தந்தை ரயில் நிலையத்திற்கு அழைத்து வந்தார். அதனால் வழியில் அவரை சந்தித்து பேச முடியவில்லை. எனவே நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு சென்று 2 முறை அவரிடம் பேசினேன். அப்போது காதலை ஏற்றுக்கொள்ளும்படி சுவாதியிடம் கெஞ்சினேன். ஆனால் அவர் ‘உனக்கும், எனக்கும் பொருந்தாது; என் பின்னால் சுற்றாதே’ என திட்டினார். இதனால் எனக்கு அவர் மீது ஆத்திரம் ஏற்பட்டது. அவரை கொலை செய்ய வேண்டும் என திட்டமிட்டேன். எனது பையில் புத்தகங்களுடன் அரிவாளை மறைத்து வைத்துக்கொண்டு 2 நாட்களாக சுவாதியை பின் தொடர்ந்தேன்.

 கடந்த 24-ம் தேதி காலை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி ரயிலுக்கு காத்திருந்தபோது அவரிடம் சென்று மீண்டும் எனது காதலை ஏற்றுக்கொள்ளும்படி கெஞ்சினேன். அப்போதும் அவர் மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பினேன்’ என தனிப்படை போலீசாரிடம் ராம்குமார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.