“முதல்வர் ஜெயலலிதா 7 – 10 நாட்களில் வீடு திரும்புவார்!”

எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் அ.தி.மு.க. அமைச்சராக இருந்தவரும், தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இருப்பவருமான டாக்டர் ஹெச்.வி.ஹண்டே, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக வியாழனன்று சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார்.

மருத்துவமனைக்குள் சென்று வந்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரை அருகில் இருந்து கவனிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர் அமெரிக்காவுக்கு மேல் சிகிச்சைக்காகச் சென்றார். அப்போது அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக தென்கொரியாவில் இருந்து இயன்முறை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். தென்கொரிய நிபுணர்கள் அவருக்கு ஒரு மாதம் சிகிச்சை அளித்தனர். அதையடுத்து உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, நாடு திரும்பிய அவர், சென்னை விமான நிலையத்தில் இருந்து வீறு நடைபோட்டு வந்தார்.

தற்போது முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையை மருத்துவர் என்ற முறையில் விசாரிப்பதற்கு வந்தேன். மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை மற்றும் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களைச் சந்தித்தேன். முதல்வரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.
சிங்கப்பூரில் இருந்து வந்துள்ள 2 பெண் இயன்முறை நிபுணர்கள் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அது நல்ல பலன் அளித்துள்ளது. முதல்வர் பூரண குணமடைந்து 7 -10 நாள்களுக்குள் வீடு திரும்புவார்.

இவ்வாறு ஹண்டே கூறினார்.

உடல்நலக் குறைபாடு காரணமாக கடந்த (செப்டம்பர்) மாதம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து 29 -வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவருக்கு சிகிச்சை அளித்துவந்த லண்டனைச் சேர்ந்த தீவிர சிகிச்சை நிபுணர் ரிச்சர்டு பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த 3 மருத்துவ நிபுணர்கள் புதனன்று (அக்டோபர் 19ஆம் தேதி) மருத்துவமனையில் இருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.

தற்போது அப்போலோ மருத்துவர்களுடன் இணைந்து, சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையைச் சேர்ந்த சீமா, மேரி ஆகிய 2 இயன்முறை நிபுணர்கள் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தேவை ஏற்பட்டால் லண்டன் மருத்துவ நிபுணர் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த நிபுணர்கள் மீண்டும் வரவழைக்கப்படுவார்கள் என்று அப்போலோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.