நதியா – இனியா நடித்த தமிழ்ப்படத்தில் ஓரினச்சேர்க்கை காட்சிகள்: தணிக்கை குழு எதிர்ப்பு!

தமிழ், மலையாளம் ஆகிய 2 மொழிகளில் ‘திரைக்கு வராத கதை’ என்ற பெயரில் புதிய திரைப்படம் தயாராகி உள்ளது. இதில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடித்துள்ளனர். நதியா, இனியா, கோவை சரளா, ஈடன், ஆர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.

பெண்ணும் பெண்ணும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதை மையக்கருவாக கொண்டு, பேய் மற்றும் அமானுஷ்யங்கள் நிறைந்த திகில் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை துளசிதாஸ் இயக்கி உள்ளார். இவர் மலையாளத்தில் பிரபல இயக்குனராக இருப்பவர். கே.மணிகண்டன் இப்படத்தை தயாரித்து உள்ளார்.

விடுதியில் தங்கி, மருத்துவமனையில் நர்ஸ் வேலை பார்க்கும் இரண்டு பெண்களுக்கு இடையே உருவாகும் ஈர்ப்பு, அவர்களுக்குள் நிகழும் ஓரினச்சேர்க்கை, இருவரும் திருமணம் செய்துகொள்ளத் தயாராகும்போது ஏற்படும் பிரச்சனைகள் ஆகியவற்றை இந்த படத்தில் காட்சிப்படுத்தியுள்ளனர்.

திரைப்பட சான்றிதழ் பெறுவதற்காக அனுப்பப்பட்ட இந்த படத்தை பார்த்த தணிக்கைக் குழு உறுப்பினர்கள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனராம். கவர்ச்சி மற்றும் ஆபாச காட்சிகள் இருப்பதால் சான்றிதழ் தர முடியாது என்று மறுத்துவிட்டனராம்.

பின்னர், தணிக்கைக் குழு உறுப்பினர்கள் ஆட்சேபித்த காட்சிகள் வெட்டி நீக்கப்பட்டதை அடுத்து, இப்படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது.