‘சென்னை 28 – II’ படப்பிடிப்பு நிறைவடைந்தது: அபிஷேக் பிலிம்ஸூக்கு தமிழக விநியோக உரிமை!

கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு,  ‘பிளாக் டிக்கெட் கம்பெனி’ சார்பில் வெங்கட் பிரபு தயாரித்து இயக்கிவரும் ‘சென்னை 28 இரண்டாம் பாக’த்தின் படப்பிடிப்பை படக்குழுவினர்  நிறைவு செய்திருக்கின்றனர்.

“முதல் பந்தையே சிக்ஸருக்கு அடிக்க கூடிய கிரிக்கெட் வீரர் விரேந்தர் சேவாக். அவருடைய பிறந்தநாளான அக்டோபர் 20ஆம் தேதி எங்கள் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடை ந்திருக்கிறோம்.. எப்படி அவருடைய சிக்ஸர் ரசிகர்களை உற்சாகப்படுத்துமோ, அதேபோல் எங்களின் ‘சென்னை 28 – II’ திரைப்படமும் தமிழ் ரசிகர்களை ‘நட்பு’ என்னும் சிக்ஸர் வாயிலாக உற்சாகத்தின் விளிம்பிற்கே எடுத்துச்செல்லும்”  என்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

இப்படத்தின் தமிழ்நாடு அளவிலான விநியோக உரிமையை, ‘அபிஷேக் பிலிம்ஸ்’ சார்பில்  வாங்கி இருக்கிறார்  ரமேஷ் கே.பிள்ளை.

“என்னுடைய பால்யகால சிநேகிதத்தை என் மனதில் மீண்டும் விதைத்த திரைப்படம் ‘சென்னை 28’.  தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தோடு நாங்கள் இணைந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி. இதுவரை நாம் ஐபிஎல் ஆட்டத்தைப் பார்த்து கொண்டாடி மகிழ்ந்தோம். தற்போது தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் விளையாடக்கூடிய ‘தெருமுனை கிரிக்கெட்’ ஆட்டத்தை கொண்டாட இருக்கிறோம்” என்கிறார் ‘அபிஷேக் பிலிம்ஸ்’ ரமேஷ் கே.பிள்ளை.