“நாம் நம்பும் பாதையில் நம் பயணத்தை மேற்கொள்வோம்!” – லட்சுமி ராமகிருஷ்ணன்

லட்சுமி ராமகிருஷ்ணன் எழுதி, இயக்கி, நடித்த ‘அம்மணி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றது. வித்தியாசமான படைப்பு என பாராட்டப்படும் இப்படம் தற்போது அமெரிக்காவில் உள்ள சான் பிரான்ஸிஸ்கோவில் திரையிடப்பட இருக்கிறது.

இது குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியதாவது:

பலதரப்பட்ட பிரச்சனைகளுக்காக நான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். அதிலும் குறிப்பாக, சினிமாவில் பெண்கள் தவறான முறையில் சித்தரிக்கப்படுவதற்காகவும், சமூக பொறுப்பை அலட்சியப்படுத்தும் செயல்களுக்காகவும்  இத்தகைய வலிமையான ஊடகம் மற்றும் சினிமாவின் மூலமாக தொடர்ந்து நான் குரல் கொடுத்து வருகிறேன்.

பெரும்பாலான பெண்கள் உட்பட பலதரப்பட்ட மக்கள் எனக்கு ஆதரவு அளித்து வந்தாலும், சிலர் என்னுடைய கருத்தையும், முயற்சியையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ‘அம்மணி’ திரைப்படத்திற்குப் பிறகு என்னுடைய குரல் பலரின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது என்பதை நான் முழுமையாக உணருகிறேன். வெற்றி – தோல்வி என்பதை தாண்டி, நாம் நம்பும் பாதையில் நம் பயணத்தை மேற்கொள்வோம்.

உலகளவில் ‘அம்மணி’ திரைப்படம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ரசிகர்களிடம் இருந்து நாங்கள் தொடர்ந்து பெற்றுவரும் கருத்துக்களும், வாழ்த்துக்களும் தான் அதற்கு சிறந்த உதாரணம்.

சான் பிரான்சிஸ்கோவில்  உள்ள ‘சான் ஜோஸ்’ நகரத்தில் அமைந்திருக்கும் ‘டௌனி சினிமாஸில்’  ‘அம்மணி’ படத்தை திரையிட இருக்கிறோம்…இதன்மூலம் திரட்டப்படும் லாபம் இந்திய கல்வி வளர்ச்சிக்காக  செயல்பட்டு வரும்  ILP எனப்படும் இந்திய கல்வியறிவு திட்டத்திற்கு வழங்கப்படும். இந்த ஏற்பாட்டை செய்துதந்த  ‘ஏ பி இன்டர்நேஷனல்’, ‘சினி கேலக்சி’ மற்றும் ‘ஸ்வரம்’  நிறுவனங்களுக்கு  எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.