“அந்த இயக்குநரின் கேள்விகள் எனக்குள் அச்சமூட்டுகின்றன!”

புதிதாக நான் எழுதயிருக்கும் இரண்டு திரைப்பட உரையாடல் நிமித்தமாய் நேற்று ஒரு இளம் இயக்குநரை சந்திக்க நேர்ந்தது.

கதை விவாதத்திற்கு பின்னே எனது கவிதை நூலை லேசாக புரட்டி பார்த்த அவர், “இதெல்லாம் யாராவது படிக்கிறாங்களா? உங்களுக்கு தெரிஞ்ச அந்த பத்து பேருக்கு மட்டும் எழுதுறீங்களா? அந்த பத்து பேராவது இந்த கவிதைகளை மதிப்பார்களா? தேன்மொழி, எங்க வீட்டில 5 குழந்தைங்க இருக்காங்க. யாருக்குமே தமிழ் தெரியாது. சென்னையில எந்த கடைக்கு போனாலும் தமிழ்ல பேசி நீங்க ஒரு உடையும் வடையும் கூட வாங்க முடியாது. ஒரு குழந்தையும் தமிழ விரும்புறது இல்ல. ரெண்டாங்கிளாஸ் புள்ள கூட வாட்ஸாப் யூஸ் பன்ணுது. இருக்கிற பத்து நிமிஷ கேப்ல கூட டெம்பிள் ரன் கேன்டி கிரஷ் விளையாடுறாங்க பசங்க. எத்தன நாவல் ஆண்டாண்டு காலமா எழுதுறாங்க இலக்கிய வட்டாரத்தில? இதுவர எத்தன நாவல் சினிமால கையாண்டிருப்பாங்க? சும்மா கவிதை கவிதைனு சினிமால பதிமூணு வருஷம் வேலபாத்தப் பிறகும் சொல்றீங்களே, தேன்மொழி? தமிழே என்னாகுமோ…? அப்ப உங்க கவிதைய எந்த கரையில சேக்கப் போறீங்க?” என்றார்.

“மெல்லத் தமிழ் இனிச் சாகும்’னு பாரதி சொல்லிட்டுப் போய் காலமாச்சு. தமிழ் மொழியை தாய் மொழியாகக் கொண்ட மனிதர்கள் இருக்கும் வரை மட்டுமல்ல, அதற்கும் பிறகும் தமிழ் என்றும் வாழும். மொழியை அழிப்பது அவ்வளவு சுலபமல்ல” என்றேன். “தமிழ் மொழி மீது நம்பிக்கை இல்லாதபோது ஆங்கிலத்தில் படம் எடுக்கலாமே” என்றேன்.

“நான் மொழியை வெறுக்கவில்லை. இங்கே யாருக்கும் அவசியப்படலனு சொல்றேன். இன்னும் ஒரு பத்து வருஷத்தில தமிழ் படங்களுக்கு கீழ சப் டைடில் ஆங்கிலத்தில போட வேண்டி வரும் போல” என்றார். “இலக்கியம், கவிதை இது ஏதாவது உங்களுக்கு சோறு போடுமா?” என்றார். “இந்த கவிதைகள் மீது இலக்கிவாதிகளாவது சரியான மரியாதை கொண்டுள்ளார்களா?” என்றார்.

ஒரு துறுப்பிடித்த ஆணியை வைத்து நடு நெற்றியில் இறக்கியது போல இருந்தது.

இலக்கியம் எனக்கு சோறு போடவே வேண்டாம். அதற்கான சரியான இடத்தை காலம் தேடித் தரும். கவிதைகளை நூற்றாண்டுகள் தாண்டிய கரங்களும் ஏற்றுக்கொள்ளும் என்பது எனது தீர்மானம். கவிதைகள் எனது உயிர். அவ் உயிரை எதுவரை தூக்கி சென்று எனதுயிர் சென்ற பின்னும் வாழ வைப்பேன் என்பது மட்டுமே என் வாழ்க்கை.

இப்படி கவிதை மட்டுமே எனது வாழ்வெனச் சாகும் என்னை இலக்கிய உலகம் எப்படிப் பார்க்கிறது…?

சினிமால வசனம், பாடல் எழுதினா நான் தீவிர இலக்கியவாதி இல்லனு எனது படைப்புகளை புறம் தள்ளுகிறது இலக்கிய உலகம். என்னோடு சம காலத்தில் எழுத வந்த எல்லா கவிஞர்களின் கவிதைகள் மேல் சில மதிப்பீடுகள் உண்டு இலக்கிய உலகிற்கு. சில சாதாரண படைப்புகளுக்கு கூட இங்கே மகுடம் சூடி மகிழும் அபத்தமும் நிலவுகிறது. எங்கும் அரசியலே மேலோங்குகிறது. எனது கவிதைகளின் தீவிர வாசகர்கள் மட்டுமே அறிந்திருக்கக் கூடும் எனது கவிதைகளின் செறிவும், இடமும், தூரமும், ஆழமும். எனில் இந்தச் சமுதாயத்தில் ஒரு மனிதனாக அந்த இயக்குநரின் கேள்விகள் எனக்குள் அச்சமூட்டுகின்றன.

சினிமாவில் நான் இயங்குவது – இலக்கியத்தில் புறக்கணிப்பையும், இன்னும் நான் தீவிர இலக்கியவாதி என்பதால் சினிமாவில் பின்னடைவையும் தான் தந்திருக்கிறது.

கவிதைகள் மட்டுமே வாழ்வென சுவாசிக்கும் என்னை கவிதைகளே ஏந்திக்கொள்ளும். இறப்பு தான் எல்லோருக்கும் முடிவு. அதன் பின்னும் வாழ்வது கவிதைகள் மட்டுமே. அந்த முடிவின்மை மேல் எனது கவிதைகளை கிடத்தும் வரை எனக்கு மரணம் சம்பவிக்காது.

இலக்கிய அரசியல், சினிமா அரசியல், உலக அரசியல், நாட்டு அரசியல் – இவையனைத்தையும் கவிஞராக எதிர்கொண்டு எந்த நாற்காலிகளுக்குள்ளும் சிக்காமல் கவிதையாக மட்டுமே வாழ்ந்துவிட்டுப் போய்விட வேண்டும்.

பல சிறந்த இலக்கியவாதிகளை கையாளாமல் சினிமா நலிவடைந்து இருக்கிறது. மிகவும் பின்தங்கியிருக்கிறது.
பல சிறந்த எழுத்தாளர்களை இலக்கிய உலகம் கண்டுகொள்ளாததால் பல நல்ல படைப்புகள் அழிக்கப்படுகின்றன, மறைக்கப்படுகின்றன.

அரசியல்வாதிகளை நான் பொருட்படுத்துவதில்லை. காரணம் அவர்கள் தந்திரக்காரர்கள். எனக்கு தந்திரம் கைவராது.

கவிஞர்களை நான் வெறுப்பதேயில்லை. காரணம் அவர்களுக்கு அரசியல் கைவராதது. அரசியலுக்குள் சிக்குண்ட கவிஞனும் நன்மையே சிந்திப்பான் அவனால் சக மனிதர்களுக்காக துயர்பட முடியுமே தவிர, தீவிர அரசியலை அவனால் நிகழ்த்த இயலாது .

அரசியலால் கவிதையை அழிக்க இயலாது
சினிமாவால் கவிதையை அழிக்க இயலாது
மொழியை யாராலும் அழிக்க இயலாது
மொழியே எங்கும் வியாபித்திருக்கிறது
மொழிக்குள் கவிதை இருக்கிறது
கவிதைகளில் பிரபஞ்சம் இருக்கிறது
கவிதையை அழிக்க இயலாது

தேன்மொழி தாஸ்