“வயது என்பது வெறும் நம்பர் தான்!”

‘காவாலா’ பாடல் ரிலீஸ் ஆனதும் வழக்கம் போல வயதை வைத்து ரஜினி மீதான வன்மங்கள் தொடங்கி விட்டன. இந்த வயசுல இதெல்லாம் தேவையா, தாத்தாவுக்கு தமன்னா கேக்குதா போன்ற விமர்சனங்களை நிறைய பார்க்கிறேன்.

ஆணாதிக்க வெறிக்கு Misogyny, இனவெறிக்கு Racism, சாதிவெறிக்கு Casteism, என்றெல்லாம் இருப்பது போல முதிய வயதை வைத்து ஒருவரை எள்ளி நகையாடுவதற்கு Ageism என்று பெயர். இதர வெறிகள் போலவே Ageism வெளிப்படுத்துவதும் தவறான விஷயம். (மேலை நாடுகளில் Ageism தண்டனைக்குரிய குற்றமாகவே கருதப்படுகிறது.)

அது ஒரு புறம் இருக்க, வயது-சார்ந்த பாகுபாடு காட்டும் ஒருவர் தன் பாமரத்தனத்தை, தன் பிற்போக்கு மனநிலையையே வெளிப்படுத்துகிறார். Ageism is an expression illiteracy and a discriminatory mindset.

காரணம், வயது என்பது ஒரு பிரச்சினையாக இருந்த காலங்கள் முன்பு இருந்தன. மருத்துவ வசதிகள், நிதி வசதிகள் இல்லாத காலங்கள் இருந்தன. சத்தான உணவுகளும் கூடக் கிடைக்காது. டயட் போன்றவை குறித்த விழிப்புணர்வுகளும் அறிவியல் அறிவும் கூட அப்போது கிடையாது. எனவே அப்போதெல்லாம் ஐம்பது வயதானாலே ஒருவர் பெரிசுதான். அவருக்கு எந்த வசதி வாய்ப்புகளும் இல்லாமல் வீட்டில் ஓரமாக பாயில் முடங்கிக் கிடப்பார். அவர் மண்டையைப் போடும் நாளை எதிர்பார்த்து குடும்பத்தில் எல்லாரும் காத்திருப்பார்கள்.

அறிவியல், பொருளாதார வளர்ச்சி காரணமாக அந்தக் காலம் பெரும்பாலும் முடிவுக்கு வந்து விட்டது. மருத்துவம் மற்றும் உணவு இன்று பெரும்பாலும் பிரச்சினையே இல்லை. கூடவே நிதி வசதியும் இருந்தால் கேட்கவே வேண்டாம். விளைவு, முதுமை என்பது இயலாமை என்ற நிலை மாறி விட்டது.

தவிர, ‘வயசானா கிருஷ்ணா, ராமான்னு இருக்கணும்,’ என்பதும் பழம்பஞ்சாங்க சிந்தனாவாதம். முதுமையில் சந்நியாசம் என்பது பண்டைய இந்தியாவின் தத்துவ அணுகுமுறை. அப்போது முதுமையில் செய்வதற்கு சுவாரசியமாக எதுவும் இருக்கவில்லை. (இளமையிலேயே கூட எதுவும் சுவாரசியமாக செய்வதற்கு அப்போது இருக்கவில்லை என்பது தனி மேட்டர்.) முதுமையில் உடலும் ஒத்துழைக்காது என்பதால் சந்நியாசம் ஒரு viable optionஆக முன்வைக்கப்பட்டிருக்கலாம். மூட நம்பிக்கைகள் நிறைந்து கிடந்த அந்த சமூகத்துக்கு ‘சும்மா இருக்கறதுக்கு பதிலா சாமியை கும்பிட்டுக்கிட்டு இருந்தா போற வழிக்கு புண்ணியம்,’ என்ற சிந்தனை அப்போது உகந்ததாக இருந்திருக்கலாம்.

இன்றைக்கு பணமும், ஆரோக்கியமும், மன உந்துதலும் இருந்தால் உங்களுக்கு வானமே எல்லை. கூடவே திறமையும் இருந்தால் உங்களுக்கு முடிவே இல்லை. எண்பது வயதைத் தாண்டியும் இளையராஜா உழைத்துக் கொண்டே இருக்கிறார். தொண்ணூறு வயதைத் தாண்டியும் கிளிண்ட் ஈஸ்ட்வுட் மற்றும் நோம் சோம்ஸ்கி போன்றோர் தத்தமது துறைகளில் உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். உடல் அனுமதிக்கும் வரை கலைஞர் எழுதிக் கொண்டும் அரசியலில் இயங்கிக் கொண்டும் இருந்தார்.

அதையேதான் ரஜினியும் செய்து கொண்டிருக்கிறார். அடுத்த மாத வீட்டு வாடகைக்கு பணம் தேவை என்ற நிலை அவருக்கு இல்லை. எனவே பணத்துக்காக உழைக்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. மார்க்கெட் காலி என்ற நிலையும் இன்னமும் வரவில்லை. இந்தியில் தேவ் ஆனந்த் கடைசி வரை நடித்துக் கொண்டும் படங்களை இயக்கிக் கொண்டும் இருந்தார். பார்க்கத்தான் ஆள் இல்லை. ஆனால் ரஜினிக்கு இன்று வரை அந்த நிலை இல்லை. முந்தா நாள் வெளியான ‘காவாலா’ பாடல் ஒன்றேகால் கோடி பார்வையாளர்களைத்தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்தடுத்து அவருக்கு படங்கள் புக் ஆகிக் கொண்டிருக்கிறன. சம்பளமாக கோடிகளில் கொட்டிக் கொடுக்க முன்னணி நிறுவனங்கள் தயாராக இருக்கிறார்கள். அவருக்கு கதை சொல்ல ஸ்கிரிப்ட் வைத்துக் கொண்டு முன்னணி இயக்குநர்கள் கியூவில் காத்திருக்கிறார்கள். அவரும் உழைக்கத் தயாராக இருக்கிறார். இத்தனைக்கும் முன்பு போலெலாம் ரஜினி இப்போது இள வயதினராக நடிப்பதில்லை. ஏறக்குறைய தனது வயதுக்கேற்ற பாத்திரங்களில்தான் நடிக்கிறார். ஜெயிலர் படத்திலும் கூட அவருக்கு தமன்னா ஜோடி அல்ல என்பது தெரிந்த விஷயம். அப்புறம் உங்களுக்கு என்னதான் பாஸ் பிரச்சினை?

என்னைப்பொருத்தவரை சாகும் தினத்துக்கு முந்தைய நாள் வரை உழைத்துக்கொண்டும், productive ஆக இருந்து கொண்டிருக்கவுமே விரும்புகிறேன். அதே நேரம் காரணமின்றி உழைத்துக்கொண்டு இராமல் என் உழைப்புக்கு சந்தையில் தேவையும் இருந்து கொண்டிருக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன். ஆகவே, 92 வயது வரை அரசியலில் கலக்கிய கலைஞர், 90 வயதைத்தாண்டி திரைப்பட இயக்கத்தில் கலக்கிக்கொண்டு இருக்கும் க்ளிண்ட் ஈஸ்ட்வுட், 94 வயதில் யூடியூப் வீடியோக்கள் வெளியிடும் நோம் சோம்ஸ்கி, 72 வயதைத்தாண்டியும் நடிப்பில் கொடி கட்டிக்கொண்டு இருக்கும் ரஜினி, 80 வயதிலும் ஹிட் பாடல்கள் போட்டுக் கொண்டிருக்கும் இளையராஜா போன்றோரைத்தான் எனக்கு ரோல் மாடல்களாக வரித்துக் கொண்டு இருக்கிறேன். ஒரு படத்தில் ரஜினியே சொல்லும் வசனம்: Age is just a number.

நீங்களும் சாதனையாளர்களாக வேண்டும், நமக்குக் கிடைத்த இந்த வாழ்க்கையை productive ஆக அமைத்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் விரும்பினால் இவர்களை ரோல் மாடல்களாக வைத்துக் கொண்டு இயங்குங்கள்.

மாறாக, 55 வயதில் பணியில் இருந்து ஒய்வு பெற்று முதியோர் இல்லத்தில் செட்டில் ஆகி கிருஷ்ணா ராமா என்று வாழ்வைக்கழிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் இலக்கு என்றால் அதற்கு இவர்கள் செட் ஆக மாட்டார்கள். ஆனால் அதற்கென்று இந்த சமூகத்தில் லட்சக்கணக்கில் ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களை நீங்கள் ரோல் மாடல்களாக வரித்துக் கொள்ளலாம்.

– ஸ்ரீதர் சுப்ரமணியம்