இனிய ’தமிழ்நாடு நாள்’ வாழ்த்துகள்!

“வடவேங்கிடம் தென்குமரி ஆயிடை

தமிழ் கூறும் நல்லுலகம்” என்கிறது, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல்காப்பியம்.

“நீலத் திரைக்கடல் ஓரத்திலே நின்று

நித்தம் தவஞ்செய் குமரி எல்லை வட

மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ்

மண்டிக்கிடக்கும் தமிழ்நாடு” என்கிறான், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ‘மதராஸ் ராஜதானி’யில் வாழ்ந்த சுப்பிரமணிய பாரதி.

இப்படி வடக்கே திருப்பதி முதல் தெற்கே குமரி வரை தமிழ்பேசும் மக்கள் பரவி வாழ்ந்த தமிழ்நாடு, சுதந்திரத்துக்குப்பின் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், தமிழின விரோதிகளாலும் தமிழின துரோகிகளாலும் கூறு போடப்பட்டு, பல நிலப்பகுதிகள் அபகரிக்கப்பட்டு, தாரைவார்க்கப்பட்டபின் எஞ்சிய நிலப்பகுதி, ‘சுருக்கப்பட்ட தற்கால தமிழ்நாடு’ என நமக்கு கையளிக்கப்பட்ட நாள் 1, நவம்பர், 1956.

அந்த வகையில் இன்று (நவம்பர் 1) ‘தமிழ்நாடு நாள்’ என்பதால், தமிழர்கள் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய ‘தமிழ்நாடு நாள்’ வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த ’சுருக்கப்பட்ட தற்கால தமிழ்நாடு’ கூட சும்மா கிடைத்துவிடவில்லை. கடும் போராட்டங்களுக்குப் பிறகுதான் இதை தக்க வைத்துக்கொள்ள முடிந்தது. இப்போராட்டங்களில் களமாடிய போராளிகளையும், இன்னுயிர் ஈந்த தியாகிகளையும் இந்நாளில் நன்றியுடன் நினைவிலேந்துவோம்.

இருப்பதைக் காப்போம்!

இழந்ததை மீட்போம்!

ராஜய்யா,

ஆசிரியர், ஹீரோநியூஸ் ஆன்லைன் டாட்காம்