“ஆருயிர் நண்பன் மோடிக்கு கறுப்புப்பணம் எழுதும் கடிதம்…!”

ஆருயிர் நண்பன் மோடிக்கு கறுப்புப்பணம் எழுதுவது

வணக்கம்.

ஒன்றும் பிரச்சனை இல்லை நண்பா, நான் பாதுகாப்பாக இருக்கிறேன். இன்று நாடு முழுவதும் உன்னையும் என்னையும் பற்றித்தான் பரபரப்பாக பேசிவருகிறார்கள். அதற்கு காரணம் கறுப்பு பணமாகிய என்னை ஒழிப்பதாக கூறி நீ எடுத்திருக்கும் நடவடிக்கை.

நீ பேசிய பேச்சுக்களையெல்லாம் கேட்டுவிட்டு நானே ஒருகணம் திகைத்து விட்டேன் நண்பா, எங்கே நீ என்னை காட்டிக் கொடுத்து விடுவாயோ என்று. ஏனென்றால் நீ பேசிய பேச்சு அப்படி.

கடந்த நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின் போதும் வெற்றி பெற்ற பிறகும் வெளிநாடுகளில் உள்ள 90 சதவீதம் கறுப்புபணமாகிய என்னை இந்தியாவிற்கு கொண்டு வந்து விடுவேன் என்று மேடைக்கு மேடை முழங்கினாய். ஒவ்வொரு குடிமகன் வங்கி கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் வரவு செய்யப்படும் என்று வார்த்தை ஜாலம் காட்டினாய். ஆட்சி பொறுப்பேற்ற 100 நாட்களுக்குள் இதை சாதித்து காட்டுவேன் என்று சபதம் ஏற்றாய்.

இதையெல்லாம் நீ உண்மையிலேயே செய்துவிடுவாய் என்று ஏதும் அறியா மக்கள் அனைவரும் நம்பி உன்னை பிரதமர் நாற்காலியில் அமர்த்தினார்கள். கறுப்பு பணமாகிய நானும் கூட எங்கே நீ உண்மையிலேயே என் மீது கை வைத்துவிடுவாயோ என்று கலங்கி கொண்டிருந்தேன். எப்போது 90 சதவீதம் கறுப்புபணம் வெளிநாட்டில்தான் இருக்கிறது என்று சொல்லிவிட்டு கறுப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் உள்நாட்டில் இருக்கும் சாமானியர்கள் பக்கம் நீ திரும்பினாயோ அப்போதுதான் எனக்கு மூச்சே வந்தது.

எனக்கு தெரியும் நீ நன்றி மறக்காதவன் என்று. உனக்கும் தெரியும் உன்னை பதவியில் அமரச் செய்ய கறுப்பு பணமாகிய நானும் கறுப்பு பண முதலைகளாகிய என்னுடைய முதலாளிகளும் எவ்வளவு உதவி செய்து இருக்கின்றோம் என்று.

நான் இல்லையென்றால் நீங்கள் கட்சி நடத்தமுடியுமா? உன்னை நீ இவ்வளவு தூரம் விளம்பரம் செய்துகொள்ள முடியுமா? கோடிக்கணக்கில் தேர்தல் செலவுகள் செய்யமுடியுமா? தேர்தல் பரப்புரைக்காக இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பறக்கத்தான் முடியுமா? என்னை பெட்டிபெட்டியாக உன்னை ஆதரிக்கும் ஊடகங்களுக்கு கொடுத்து உன் புகழை பாடச்சொல்ல முடியுமா?.

இதெல்லாம் தெரியாமல் மக்கள் நினைத்து கொண்டிருக்கிறார்கள் தாங்கள்தான் உன்னை பிரதமராக தேர்வு செய்துவிட்டோம் என்று. கறுப்புபணமாகிய நாங்கள் அல்லவா உன்னை தேர்வு செய்தோம். இதை யார் அறியாவிட்டாலும் நீ அறிவாய் என்பது எங்களுக்கும் எங்கள் முதலாளிகளுக்கும் நன்றாகத் தெரியும் நண்பா.

ஆனாலும் நீ உண்மையிலேயே பெரிய வித்தைக்காரன் நண்பா. நாங்கள் அனைவரும் உள்நாட்டில் மூட்டை மூட்டையாக பணமாகத்தான் இருக்கிறோம் என்று அப்பாவி மக்களை அழகாக நம்ப வைத்துவிட்டாய். அவர்களுக்கு என்ன தெரியவா போகிறது நான் என்றைக்கோ வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிட்டேன் என்று.

அப்படியே நான் உள்நாட்டில் இருந்தாலும் சொத்துக்களாக, தங்க நகைகளாக, அடுக்குமாடி கட்டிடங்களாக, வணிக வளாகங்களாக, கல்வி நிறுவனங்களாக, வாகனங்களாக அல்லவா நான் இருக்கிறேன். இதையெல்லாம் அறியாமல் நீ சொன்ன அனைத்தையும் நம்பி ஏதாவது நல்லது நடக்கும் என்று வங்கி வாசல்களில் கால்கடுக்க காத்து நிற்கிறார்கள் அப்பாவி மக்கள்.

என்ன, ஒரு 70 பேர்களுக்கு மேல் செத்துவிட்டதாக சொல்கிறார்கள். அதுதான் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. போனால் போகட்டும் போ. நீயும் நானும் மக்கள் கொத்துகொத்தாக சாவதை இதற்குமுன் வேடிக்கை பார்க்கவில்லையா என்ன? சில வருடங்களுக்கு முன் குஜராத்தில் பார்த்தோம், இன்று நாடு முழுவதும் பார்த்துகொண்டிருக்கிறோம் அவ்வளவுதான்.

ஆனால் நீ சரியாகத்தான் சொன்னாய் நண்பா ‘கறுப்புபணத்திற்கு எதிரான போரில் சாமானிய மக்கள்தான் படை வீரர்கள்’ என்று. படைவீரர்கள் என்றாலே பலியாடுகள்தான் என்று அறியாத ஒரு கூட்டம் உன் பேச்சை கேட்டு கைதட்டி கொண்டிருப்பதை நினைத்ததால் எனக்கு புல்லரிக்கிறது நண்பா.

அதைவிட ஒன்று சொன்னாயே ‘ஏழைகள் வீட்டில் நிம்மதியாக உறங்குகிறார்கள், நாட்டை ஏமாற்றி கொள்ளையடித்து சம்பாதித்தவர்கள் தான் வங்கி வாசலில் காத்துக்கிடக்கிறார்கள்’ என்று. திமிர்பிடித்த ஏழைகளை இதைவிட கேவலப்படுத்த முடியாது நண்பா. அருமை அருமை.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் எனது நண்பர்களான வெள்ளைப் பணம் சில பேர், ஏழைகள் கையில் இருந்தது எனக்கு பிடிக்கவில்லை நண்பா. பணமாகிய நாங்கள் பணக்காரர்களிடம் இருப்பதுதானே முறை. அதனால் தானே அவர்களுக்கு பணக்காரர்கள் என்று பெயர் வந்தது!

பாழாய்போன ஏழை மக்கள் எங்களை சம்பாதித்து சேமிப்பு என்ற பெயரில் சுருக்குப் பைகளுக்குள்ளும், கடுகு டப்பாக்களுக்குள்ளும். உண்டியலுக்குள்ளும் அடைத்து விட்டார்கள். அனைத்தையும் நீ கடினப்பட்டு மீட்டு வங்கிகளுக்கு கொண்டு வந்து விட்டாய்.

இனி அந்த வெள்ளைப்பணம் அனைத்தும் கடன் என்ற பெயரில் எங்கள் முதலாளிகளான டாடா, அம்பானி, அதானிகளிடம் வந்துவிடும். அவர்கள் அதை மீண்டும் நாடு கடத்தி கறுப்பு பணமாகிய எங்களோடு சேர்த்து விடுவார்கள். நாங்களும் ஏழைகளிடம் வெகுநாட்களாக அடைபட்டு கிடந்த வெள்ளைப்பணமாகிய எங்கள் நண்பர்களை சந்திக்க மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறோம் நண்பா.

அதைவிடு. இந்த எதிர்கட்சிகளை பார்த்தாயா நண்பா? உனக்கு எதிராக எல்லோரும் ஒன்று சேர்ந்துவிட்டார்கள். எனது நண்பனாகிய உன்னை எதிர்த்து யாராவது கேள்வி கேட்டால் என்னால் தாங்க முடியவில்லை நண்பா. நீ எங்களை காப்பாற்ற எவ்வளவு கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறாய் என்பதை அறியாமல் உன்னை எதிர்க்கிறார்கள். இதில் நகை முரண் என்னவென்றால் எங்களின் பழைய நண்பர்களான காங்கிரசும், முலாயம்சிங், மாயாவதி மற்றும் இன்ன பிறரும் சேர்ந்து கொண்டதுதான். இவர்கள் எல்லாம் கடந்த காலத்தை மறந்துவிட்டார்கள். நன்றி கெட்டவர்கள். போனால் போகட்டும் விடு. பத்து வருடமாக பிரதமராக இருந்தபோது வாய்மூடி மவுனகுருவாக இருந்த மன்மோகன்சிங் கூட உனக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பேசுகிறார். இதுவே உனது சாதனைக்கு ஒரு எடுத்துக்காட்டு நண்பா.

ஆனால் நீ எக்காரணம் கொண்டும் நாடாளுமன்ற கூட்டத்திற்கு போய்விடாதே நண்பா. அதெல்லாம் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும்தான், நமக்கெதற்கு?. அங்கே போனால் உன்னை கேள்வி மேல் கேள்வி கேட்பார்கள். அப்படியே போனாலும் அந்த கேள்விகளுக்கு நீ பதில் சொல்லிவிடாதே. உனக்கு பேச வேண்டுமென்று தோன்றினால் இருக்கவே இருக்கிறது வானொலி, காணொளி, விழா மேடைகள், கட்சி கூட்டங்கள். அங்கு மட்டும் பேசு. அங்குதான் உன்னை எதிர்த்து யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள்.

எதிர்கட்சிகள் மட்டுமா? இன்னும் உணர்ச்சியுள்ள சில ஊடகங்களும், பத்திரிக்கைகளும், பொருளாதார நிபுணர்களும், அரசியல் விமர்சகர்களும் கூட உன்னை எதிர்த்து கேள்வி கேட்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் இன்னும் உணர்ச்சி இருப்பதே எனக்கு ஆச்சர்யமாக உள்ளது நண்பா. சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுகிறார்கள் போல. அதனாலென்ன உப்பையும் ஒழித்து விட்டால் போகிறது. அடுத்து ஒன்று செய் நண்பா. நாட்டில் உப்பு, புளி, மிளகாய் போன்றவற்றை முதலில் தடைசெய். இனி எங்களுக்கு ஆதரவாக நீ எதை செய்தாலும் யாரும் உணர்ச்சியோடு கேள்வி கேட்கக்கூடாது.

ஆனால் நீ உண்மையிலேயே மூளைக்காரன்தான் நண்பா. இவர்களை அடக்குவதற்கு நீ பேசிய பேச்சுக்களை கண்டு நானே வியந்து போனேன். உன்னை எதிர்த்தவர்களை எல்லாம் தீவிரவாதிகள் என்றாய். தேச விரோதிகள் என்றாய். பாகிஸ்தானுக்கு உதவுகிறார்கள் என்றாய். அருமை நண்பா அப்படித்தான் பேசவேண்டும். தேசபக்தி முழுவதையும் நீயும் உனது கட்சிக்காரர்களும் குத்தகைக்கு எடுத்துவிட்ட பிறகு வேறு யாரும் அதைப்பற்றி பேசலாமா? இதையெல்லாம்விட முத்தாய்ப்பாக, ஏழை மக்களை ராணுவ வீரர்களோடு ஒப்பிட்டு, போட்டாயே ஒருபோடு, உச்சம்.

ஏழைகளாம் ஏழைகள்! இவர்கள் எல்லாம் இருந்தால் என்ன, இறந்தால் என்ன? தேவையில்லாமல் பூமிக்கு பாரமாக இருந்து கொண்டு நம் உயிரை வாங்குகிறார்கள். சரிவிடு, இருந்து தொலையட்டும். இவர்களும் இல்லாவிட்டால் நாம் யாரிடம் இருந்து சுரண்டுவது? ஆனால் ஒன்று நண்பா, பாகிஸ்தானுக்கு நீ நன்றி சொல்லியே ஆகவேண்டும். அந்த நாடு மட்டும் இல்லாவிட்டால் நீயும் உன் கட்சியும் அரசியல் செய்யவும் முடியாது. ஆட்சியை பிடிக்கவும் முடியாது. உன்னை எதிர்ப்பவர்களை தீவிரவாதிகளாக காட்டவும் முடியாது.

எனக்கு நீ ஒரு உண்மையை சொல்லவேண்டும் நண்பா. பெரும்பான்மையான ஏழை மக்களுக்கு எதிராக ஒரு நடவடிக்கையை எடுத்துவிட்டு அவர்களிடமிருந்தே நல்ல பெயரையும் வாங்கும் வித்தையை நீ எங்கு கற்றாய்? எப்போது கற்றாய்?

இந்த விசயத்தில் நம் அரசியல்வாதிகளே கொஞ்சம் அசந்துதான் போனார்கள். பாவம் நண்பா மக்கள். 50 நாட்களுக்கு பிறகு ஏதாவது நல்லது நடக்கும் என்று நம்பி வீதிகளில் காத்து கிடக்கிறார்கள். ஆனால் இன்னும் 50 வருடங்கள் ஆனாலும் நீ எங்களை காட்டி கொடுக்கமாட்டாய் என்பது எங்களுக்கும், எங்களின் முதலாளிகளுக்கும், உனக்கும்தானே தெரியும்!

நாங்கள் சுவிஸ் வங்கிகளிலும், மொரிசியஷ் தீவுகளிலும் இன்னபிற நாடுகளிலும் பத்திரமாக இருப்பது இந்த பாழாய் போன மக்களுக்கு தெரியவா போகிறது? அதுசரி நண்பா, 50 நாட்களுக்கு பிறகு நாட்டு மக்களுக்கு சொல்ல என்ன பதில் வைத்திருக்கிறாய்? அதற்கென்ன, நீ என்ன சொன்னாலும் இந்த பாமர மக்கள் நம்பத்தான் போகிறார்கள். நீ ஏழ்மையை ஒழிப்பாய் என்று நம்பி உனக்கு ஓட்டு போட்டார்கள். ஆனால் நீ ஏழைகளையே ஒழித்துக்கட்டி விட்டாய். உன் திறமையோ திறமை நண்பா.

என்ன ஒன்று, இந்த சிறுதொழில் செய்பவர்களும், கூலித் தொழிலாளர்களும், சில்லரை வியாபாரிகளும், விவசாயிகளும் மக்களோடு சேர்ந்து மடியப்போகிறார்கள். ஒன்றும் பாதகம் இல்லை, அப்படி நடந்தால் தானே எங்கள் முதலாளிகள் போன்ற பெரும் முதலைகள் கொள்ளை லாபம் சம்பாதிக்க முடியும்? அதுதானே நமது லட்சியம்!

நம் நாட்டில் பாதி மக்களுக்கு மேல் படிக்காதவர்களாக இருப்பதும், படித்தவர்கள் சிந்திக்கத் தெரியாதவர்களாக இருப்பதும் நமக்கு எவ்வளவு வசதியாய் போனது பார்த்தாயா நண்பா! ஏழைகளை எவ்வளவு தூரம் படிக்கவிடாமல் தடுக்கிறாயோ அவ்வளவு தூரம் நமக்கு நல்லது. மிச்ச சொச்சம் இருக்கும் பள்ளிகளையும் கல்லூரிகளையும் பெருமுதலாளிகளிடம் கொடுத்துவிடு நண்பா. அப்படி செய்தால் தான் ஏழைகளால் அங்கு எட்டிக்கூட பார்க்க முடியாது.

நீ பெரிய கில்லாடிதான் நண்பா. சந்தடி சாக்கில் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் ரூபாய் நோட்டுகளில் திணித்து விட்டாயே! பலே.. பலே! அப்படித்தான் செய்யவெண்டும் நண்பா.

இந்தியாவில் உள்ள அனைத்து பிராந்திய மொழிகளையும் படிப்படியாக அழித்துவிட வேண்டும். இந்தியையும், சமஸ்கிருதத்தையும் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் திணித்து மற்ற மொழிகளின் அடையாளத்தையே இல்லாமல் செய்துவிட வெண்டும். அதுதானே உன் லட்சியம்!

ஆனால் ஒரு எச்சரிக்கை நண்பா. இந்த எண்ணத்தோடு நீ இந்தியாவில் வேறு எங்கு வேண்டுமானாலும் போ. கர்நாடகம் போ, ஆந்திரம் போ, கேரளம் போ. ஆனால் தமிழ்நாட்டிற்கு மட்டும் போய்விடாதே. ஏனென்றால் மற்றவர்கள் எல்லாம் எப்படியோ. தமிழர்கள் மொழிக்காக உயிரையும் கொடுப்பார்கள். கொடுத்திருக்கிறார்கள். உன் இந்தி திணிப்பு எண்ணம் அங்கே ஈடேறாது. ஏற்கனவே ஒருமுறை இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அவர்கள் நேருவுக்கே பாடம் நடத்தியவர்கள். மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடி என்பதை மறந்துவிடாதே நண்பா. கவனமாய் இரு.

நல்லது நண்பா. நிறைய பேசிவிட்டேன். எங்கள் முதலாளிகளான டாடா, அம்பானி, அதானி மற்றும் பலர் உன்னை கேட்டதாகச் சொல்லச் சொன்னார்கள். நீ அவர்களுக்காக இவ்வளவு பெரிய காரியத்தை செய்ததற்கும் எங்கள் முதலாளிகள் ஏற்கனவே வங்கிகளில் வாங்கியிருந்த பல லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்ததற்கும் நன்றி தெரிவிக்க சொன்னார்கள். நீயும் எனது நண்பர்களான அருண்ஜெட்லி, அமித்ஷா போன்றவர்களை கேட்டதாகச் சொல்.

மிக்க நன்றி நண்பா.

இப்படிக்கு
என்றும் உன் பாதுகாப்புடன்,
கறுப்புபணம்.

பின்குறிப்பு:

அப்புறம் மிக முக்கியமான செய்தி நண்பா. நீ நினைத்துக் கொண்டு இருப்பதைபோல் இந்த மக்களை முட்டாள்கள் என்று எண்ணிவிடாதே. அவர்கள் எப்போதும் தங்கள் பதிலை வாக்குகள் மூலமாகத்தான் சொல்லுவார்கள். தேர்தலுக்கு இன்னும் இரண்டு வருடங்கள்தான் இருக்கிறது. அதற்குள் ஏதாவது செய்து, இம்மக்களை திசை திருப்பி பரபரப்பாகவே வைத்திரு. அட! உங்களுக்கா தெரியாது? இருக்கவே இருக்கிறது இராமர் கோயில், மாட்டுக்கறி, பொது சிவில் சட்டம், காஷ்மீர் பிரச்சனை, பற்றாக்குறைக்கு பாகிஸ்தான் வேறு…. ம்ம்… நடக்கட்டும்… நடக்கட்டும்!

SORNAKUMAR R