“ஜெயலலிதாவின் ஆத்மா ‘மகாத்மா’ ஆகிவிட்டது”: ரஜினிகாந்த் உருக்கம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் சங்கம் சார்பில் இன்று மாலை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு உருக்கமாக பேசியதாவது:

1996 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, ஜெயலலிதாவுக்கு எதிராக நான் பேசிய பேச்சு, அவரது கட்சியின் வெற்றியை பாதித்தது. ஜெயலலிதாவின் தோல்விக்கு நான் முக்கிய காரணமாக இருந்தேன். அவர் மனம் கஷ்டப்பட காரணமாக இருந்தேன்.

எனது மகள் திருமண நிகழ்ச்சிக்கு தர்மசங்கடத்துடன் ஜெயலலிதாவிடம் அப்பாயிண்மெண்ட் கேட்டேன். உடனே கிடைத்தது. வரமாட்டார் என்று முடிவெடுத்து இருந்தேன். ஆனால் அதே தேதியில் கட்சித் தொண்டர் ஒருவரின் திருமண விழா உள்ளது; இருந்தாலும் நிச்சயம் வருகிறேன் என்று கூறி, எனது அழைப்பை ஏற்று, என் மகளின் திருமணத்திற்கு வந்து அவரது மனிதாபிமானத்தை நிரூபித்தார். அப்படிப்பட்ட பொன்மனம் கொண்டவர் இப்போழுது நம்முடன் இல்லை.

வெப்பத்தாலும், அழுத்தத்தாலும் கார்பன் காலப்போக்கில் வைரமாக மாறும். அதுபோல், ஆணாதிக்க சமூகத்தில் அழுத்தப்பட்டு வைரமாக மின்னி உள்ளார் ஜெயலலிதா. அவர் போனபிறகு கோடானுகோடி மக்களின் கண்ணீரால் கோஹினூர் வைரமாக புரட்சித்தலைவரின் சமாதி அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு வயதில் தந்தையையும் இருபத்திரெண்டு வயதில் தாயையும் இழந்தார். தன்னுடைய முயற்சியால் சோதனைகளை சாதனைகளாக்கி முன்னேறி காட்டியவர் ஜெயலலிதா. துணிச்சல், எதிர் நீச்சல் போன்றவற்றை ஜெயலலிதாவிடம் கற்க வேண்டும்.

பல விமர்சனங்களையும் தடைகளையும் மீறி அதிமுகவுக்கு வெற்றிகளை குவித்தவர். இது பெண்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் முன் உதாரணம். போராட்டங்களையே வாழ்க்கையாகக் கொண்டவர் ஜெயலலிதா. எந்த நேரமும் மக்களை பற்றி சிந்தித்து ஓய்வு இன்றி உழைத்தார். பொது வாழ்க்கைக்காக தனது சொந்த வாழ்க்கையை தியாகம் செய்தவர். குருவை மிஞ்சிய சிஷ்யை ஜெயலலிதா.

உடல் நிலை சரியில்லாத நிலையிலும் தேர்தல் பிரச்சாரம் செய்து, அதிமுகவை அரியணை ஏற்றியவரை இறைவன் அழைத்துக் கொண்டார். ஜெயலலிதாவின் ஆத்மா மகாத்மா ஆகிவிட்டது. அவருடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டும். அவருக்கு கண்ணீர் அஞ்சலி.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொன்வண்ணன், மூத்த நடிகர் சிவக்குமார் உள்பட நடிகர்-நடிகைகள் பலர் கலந்து கொண்டனர்.

ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு நடிகர், நடிகைகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Read previous post:
0a1e
சென்னையை நெருங்குகிறது வர்தா ‘புயல்’: பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு!

'வர்தா' புயல் சென்னையை நோக்கி நெருங்கி வருவதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மிக கனமழையுடன் பலத்த காற்று வீசும்

Close