சென்னையை நெருங்குகிறது வர்தா ‘புயல்’: பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு!

‘வர்தா’ புயல் சென்னையை நோக்கி நெருங்கி வருவதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மிக கனமழையுடன் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை துறை. இதனால் இந்த 3 மாவட்டங்களிலும் பலத்த சேதம் ஏற்படும் என அஞ்சப்படுகிறது.

இது தொடர்பாக ஞாயிறு மாலை சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் கூறியதாவது:

வங்கக் கடலில் உருவான ‘வர்தா’ புயல் தீவிர புயலாக மாறியுள்ளது. இது சென்னையில் இருந்து 370 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 18 கிலோ மீட்டர் வேகத்தில் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. அப்பகுதியில் மணிக்கு சுமார் 140 கி.மீ வேகத்தில் காற்று வீசுகிறது. இது நாளை (திங்கள்) பிற்பகலில், வடக்கு தமிழகத்தின் கடலோரப் பகுதியில் சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடக்கக்கூடும். அப்போது மணிக்கு 60 முதல் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

இதன் காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தொடங்கி, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளில் மழை பெய்யக்கூடும். படிப்படியாக இந்த மழையின் அளவு அதிகரித்து நாளை (திங்கள்கிழமை) காலை முதல் அடுத்த நாள் காலை வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கன மற்றும் அதிகனமழை பெய்யக்கூடும். மற்ற இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடல் கொந்தளிப்புடன் காணப்படும், கடல் சீற்றமானது, இயல்பை விட ஒரு மீட்டர் அதிகமாக இருக்கக் கூடும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில், “வர்தா’  புயலால் 100 கி.மீ வேகத்தில் சென்னையில் காற்று வீசக்கூடும். கடந்த 1994-இல் சென்னையில் 100 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

நாளை ஒருநாள் மட்டும் மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். ‘வர்தா’ புயல் நாளை சென்னை அருகே கரையை கடக்க உள்ளதால் மீனவர்கள் அடுத்த 48 மணிநேரத்திற்கு கடலுக்கு செல்ல வேண்டாம்” என அறிவுறுத்தி உள்ளார்.

இதையடுத்து பொதுமக்கள் போதுமான குடிநீரை இருப்பு வைத்துக் கொள்ளுமாறும், ரொட்டி, பழங்கள், பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்களை தேவையான அளவு கையிருப்பில் வைத்துக்கொள்ளுமாறும் தமிழக வருவாய்த்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், தாழ்வான, ஏரி, குளம், ஆற்றுப் பகுதிகளி‌ல் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக மேடான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பலத்த புயல் காற்றில் வீசும் என எதிர்பார்க்கப்படுவதால் மின்கம்பிகள் அறுந்து விழ வாய்ப்புகள் இருப்பதால்‌, நடந்து செல்வோர் கவனமுடன் செல்லவும், வீடுகளில் உள்ள ஜன்னல் கதவுகளை இருக்கமாக மூடி வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வானிலை நிலவரங்கள் குறித்து தொலைக்காட்சி மற்றும் ரேடியோவை கவனித்து தெரிந்துகொள்ளு‌மாறும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.