“வானே இடிந்ததம்மா” பாடலை பாடியவர் இளையராஜா அல்ல, வர்ஷன்!

தமிழக முதலமைச்சராகவும், அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளருமாகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5ஆம் தேதி காலமானார். அவரது உடலுக்கு பொதுமக்கள், திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினார்கள். 6ஆம் தேதி மாலை ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதன்பின் கடந்த இரண்டு மூன்று தினங்களாக சமூக வலைத் தளங்களில், “வானே இடிந்ததம்மா… வாழ்வே முடிந்ததம்மா..” என்ற ‘அம்மா இரங்கல் பாடல்’ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், இந்த பாடலை இளையராஜா பாடியிருப்பதாக செய்திகள் வெளியாயின.

ஆனால், உண்மையில் இந்தப் பாடலை பாடியது இசையமைப்பாளர் வர்ஷன். இவரது குரல், இளையராஜாவின் குரல் வளத்துடன் இருப்பதால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.

‘அம்மா’ இரங்கல் பாடலை அஸ்மின் என்னும் பாடலாசிரியரின் வரிகளில், இசையமைப்பாளர் வர்ஷன் இசையமைத்து, பாடியுள்ளார்.

0a1a

இந்த பாடல் குறித்து பாடலாசிரியர் அஸ்மின் கூறும்போது, “நான் இலங்கையில் ‘வசந்தம்’ தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக பணியாற்றிக்கொண்டே திரைப்படங்களுக்கு பாடல் எழுதி வருகிறேன்.

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய்ஆண்டனி மூலம் ‘நான்’ படத்தில் பாடலாசிரியராக அறிமுகமாகும் வாய்ப்பைப் பெற்றேன். அந்தப் படத்தில் இடம் பெற்ற ‘தப்பெல்லாம் தப்பேயில்லை…’ என்ற பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்கள் மறைந்த செய்தி என்னை மிகவும் பாதித்தது. துக்கம் தாங்காமல் கவிதை ஒன்றை முகநூலில் எழுதினேன். அதை எனது நண்பரும், ‘புறம்போக்கு’ படத்தின் இசையமைப்பாளருமான வர்ஷனிடம் சொன்னேன். அவர் இதையே ஒரு இரங்கல் பாடலாக உருவாக்கலாமே என்றார்.

அம்மாவின் நல்லடக்கம் நடைபெற்ற மாலை வேளையில் எனது எழுத்தில், வர்ஷினின் இசை மற்றும் குரலில் ‘அம்மா இரங்கல் பாடல்’ – ‘அம்மா..அம்மா… வானே இடிந்ததம்மா…வாழ்வே முடிந்ததம்மா..’பாடல் முழு வடிவம் பெற்றது.

அதை என்னுடைய நண்பர்கள் அனைவருக்கும் நானும், இசையமைப்பாளர் வர்ஷனும் பகிர்ந்துகொண்டோம்.

அது அப்படியே வாட்ஸ்-அப், யூடியூப் மூலமும் வேகமாகப் பரவியது. அந்தப்பாடலைப் பாடிய வர்ஷனின் குரல் இளையராஜாவின் குரலைப் போன்று இருப்பதாக நினைத்து பலரும் அதை அவர் பாடிய பாடல் என்றே செய்திகளை வெளியிட ஆரம்பித்தார்கள்.

எங்கள் இருவருக்கும் இளையராஜா மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் உள்ளது. அவர் இசையில் ஒரு பாடலாவது எழுத வேண்டும் என்றும், அந்த இசைமேதையை வாழ்நாளில் ஒரு தடவையாவது காண வேண்டும் என்றும் ஆவலுடன் இருப்பவன் நான். அவருடைய பாடலாக ரசிகர்கள் அந்த பாடலை இதயத்தில் ஏற்றி வைத்திருப்பது எமக்குப் பெருமைதான்.

ஆனால், அந்த பாடல் இளையராஜாவின் பாடலாகவே உலகம் எங்கும் பதிவாகியிருப்பதாக, தவறான தகவல் பரவுவதாக, அதன்பின் என்னைத் தொடர்பு கொண்ட நண்பர்கள் தெரிவித்தார்கள். சில பத்திரிகை நண்பர்களும் என்னையும், வர்ஷனையும் தொடர்பு கொண்டு எங்களைப் பற்றிய விவரங்களை வெளிக்கொண்டு வந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் எங்களது நன்றி” என்றார்.

இசையமைப்பாளர் வர்ஷன் கூறும்போது, “நான் ஜனநாதன் இயக்கிய ‘புறம்போக்கு’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானேன். என்னுடைய வாழ்நாளில் முதலமைச்சர் ஜெயலலிதாவை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன். இரண்டு முறை முயற்சித்தேன். ஆனால் நடக்கவில்லை. தற்போது அம்மா இரங்கல் பாடல் மூலம் பல கோடி மக்களின் இதயங்களுக்கு சென்றிருக்கிறேன் என்று நினைக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது” என்றார்.