ஜோதிமணி மீது நடவடிக்கை: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எச்சரிக்கை!

அரவக்குறிச்சி தொகுதியில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி சுயேச்சையாக போட்டியிட்டால், அவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எச்சரித்துள்ளார்.

ராகுல் காந்தியின் ஆதரவு பெற்றவர் ஜோதிமணி. காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருப்பவர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்தவர். காங்கிரஸ் சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று பார்வையாளர்களை பயமுறுத்திவந்த விஜயதாரணி ஓரங்கட்டப்பட்ட பிறகு, சின்னத்திரையில் அவர் விட்டுச்சென்ற பணியைத் தொடர்பவர். சுமார் 9 மாதங்களுக்கு முன்பு, திமுக – காங்கிரஸ் கூட்டணி உருவாவதற்கு முன்பே, “நான்தான் அரவக்குறிச்சி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்” என்று தன்னைத் தானே அறிவித்துக்கொண்டு வாக்கு சேகரிக்கும் பணியைத் தொடங்கியவர்.

“ஆர்வக்கோளாறால் ஜோதிமணி இப்படி செய்கிறார். இதை அவர் உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பகிரங்கமாக அறிவுறுத்தினார். ஆனால் மத்திய தலைமைக்கு நெருக்கமானவர்கள் மாநிலத் தலைமையை ஒருபொருட்டாக மதிக்கத் தேவையில்லை என்ற காங்கிரஸ் கலாச்சாரப்படி, இளங்கோவனின் அறிவுறுத்தலுக்கு ஜோதிமணி செவி சாய்க்கவில்லை. அரவக்குறிச்சியில் தொடர்ந்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுவந்தார்.

இந்நிலையில், தனது கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸுக்கு 41 தொகுதிகளை தி.மு.க. ஒதுக்கியிருக்கிறது. அந்த பட்டியலில் அரவக்குறிச்சி இல்லை. அத்தொகுதியை தி.மு.க. தனக்கென வைத்துக்கொண்டது.

பட்டியல் வெளியிடப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்பிருந்தே ஜோதிமணிக்கு அரவக்குறிச்சி தொகுதியை தி.மு.க.விடமிருந்து பெற்றுத் தர ராகுல் காந்தி தொடர்ந்து முயற்சி செய்திருக்கிறார். ஆனால் தி.மு.க. தலைமை அசைந்து கொடுக்கவில்லை.

ஜோதிமணியும் விடுவதாக இல்லை. “அரவக்குறிச்சி என் சொந்த தொகுதி. அந்த தொகுதி நிச்சயம் எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தேர்தல் வேலைகளை ஆரம்பித்து செய்து வருகிறேன். அரவக்குறிச்சி தொகுதி கட்டாயம் எனக்குதான் என்று ராகுல் காந்தி உறுதிபட கூறினார். ராகுல் காந்தி அரவக்குறிச்சி தொகுதியை எனக்கு பெற்றுத்தருவார். எனவே, அரவக்குறிச்சி தொகுதியில் என் தேர்தல் பணிகள் வழக்கம்போல தொடரும்” என்றார் ஜோதிமணி.

“காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு அரவக்குறிச்சி தொகுதியைப் பெறுவதற்காக போதுமான அழுத்தம் கொடுக்கவில்லை” எனக் குற்றம்சாட்டிய ஜோதிமணி, “அரவக்குறிச்சி தொகுதியை எனக்கு பெற்றுத் தராவிட்டால் அந்த தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவேன்” என்றும் அறிவித்தார்.

இது தொடர்பாக இன்று சென்னை காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “திமுக கூட்டணியில் அரவக்குறிச்சி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படாதது ஏமாற்றம்தான். ஆனால், அந்த ஏமாற்றத்தை ஜோதிமணி தாங்கிக்கொண்டு தான் ஆக வேண்டும். இதனை பெரிதாக்காமல் அதற்கு மாறாக அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக ஜோதிமணி பிரசாரம் செய்ய வேண்டும். கட்சியை மீறி சுயேச்சையாக போட்டியிடுவேன் என ஜோதிமணி பிடிவாதமாக இருந்தால் அவர் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.