“மாணவர்களே, மீனவர்களையும் காப்பாற்ற வாங்க”: பிரிட்ஜோ முகநூல் பக்கத்தில் உருக்கமான அழைப்பு!

ஜல்லிக்கட்டுக்காக ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்திய மாணவர்கள் தங்கச்சிமடத்தில் நடைபெறும் மீனவர்களின் போராட்டத்திலும் கலந்து கொள்ளுமாறு உயிரிழந்த மீனவர் பிரிட்ஜோவின் பேஸ்புக் பக்கத்தில் அவரது நண்பர்கள் உருக்கமாக அழைப்பு விடுத்துள்ளனர்.

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் வெறித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ (21) திங்கட்கிழமை இரவு உயிரிழந்தார்.

மீனவர் பிரிட்ஜோ படுகொலையை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெறத் துவங்கியுள்ளன. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சிங்கள அரசுக்கும், இந்திய அரசுக்கும் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.

சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்றவற்றில் மீனவரின் படுகொலை குறித்து #tnfishermen, #savefishermen என்ற ஹேஷ்டேகுகளில் பகிரப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் உயிரிழந்த பிரிட்ஜோவின் பேஸ்புக் பக்கத்தில் அவரது நண்பர்கள், ” இதுவரை இலங்கை கடற்படையின் துப்பாக்கி சூட்டிற்கு 546 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். வீரவிளையாட்டுயான ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தந்த மாணவர்கள் எங்கள் மீனவர்களின் போராட்டத்தில் கலந்துகொள்ள தங்கச்சிமடம் குழந்தை இயேசு வளாகத்திற்கு வருகை தாருங்கள்” எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது சமூக ஊடகங்களில் மூலமும், வாட்ஸ் அப்களில் குறுந்தகவல்களாகவும் வைரலாக பரவி வருகிறது.