சிங்கள கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு: சைலேந்திர பாபு தகவல்!

இலங்கை கடற்படையினர் மீது மண்டபம் கடலோர காவல்படை நிலையத்தில் 302 மற்றும் 307 ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என ஏடிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை இரவு கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தமிழின விரோதிகளான சிங்கள கடற்படையினர் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியதில், பிரிட்ஜோ (21) என்ற மீனவ இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். படகின் டிரைவர் ஜெரோனுக்கு தொடையில் காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர்களுடன் படகில் சென்றிருந்த கிளிண்டஸ் என்ற மீனவர், சிங்கள கடற்படையினர் இந்திய எல்லைக்குள் நடத்திய இந்த வெறியாட்டம் குறித்து, மண்டபம் கடலோர காவல் படை நிலையத்தில் செவ்வாய்கிழமை புகார் அளித்தார்.

இது தொடர்பாக ஏடிஜிபி சைலேந்திர பாபு கூறுகையில், ”இலங்கை கடற்படையினர் மீது மண்டபம் கடலோர காவல் படை நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 302 (கொலை) மற்றும் 307 (கொலை முயற்சி) ஆகியப் பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

சிங்கள கடற்படையினர் மீது ராமேசுவரம் மற்றும் மண்டபம் காவல் நிலையங்களில் மீனவர்களை காயப்படுத்துதல், தாக்குதல், வலைகளை திருடுதல், உடமைகளை சேதப்படுத்துதல் என்ற அளவில் தான் காவல் துறையினர் வழக்குகளை பதிவு செய்து வந்தனர். சுமார் 25 ஆண்டுகள் கழித்து சிங்கள கடற்படையினர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 302-ன்படி தற்போது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Read previous post:
0
“மாணவர்களே, மீனவர்களையும் காப்பாற்ற வாங்க”: பிரிட்ஜோ முகநூல் பக்கத்தில் உருக்கமான அழைப்பு!

ஜல்லிக்கட்டுக்காக ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்திய மாணவர்கள் தங்கச்சிமடத்தில் நடைபெறும் மீனவர்களின் போராட்டத்திலும் கலந்து கொள்ளுமாறு உயிரிழந்த மீனவர் பிரிட்ஜோவின் பேஸ்புக் பக்கத்தில் அவரது நண்பர்கள் உருக்கமாக

Close