சசிகலா நியமன விவகாரம்: தினகரன் பதிலை ஏற்க தேர்தல் ஆணையம் மறுப்பு!

“அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நியமனம் குறித்த டி.டி.வி தினகரன் பதிலை ஏற்க முடியாது. அது குறித்த நோட்டீஸுக்கு சசிகலா தான் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், கடந்த டிசம்பர் 29ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா நியமனம் செய்யப்பட்டார். டிசம்பர் 31ஆம் தேதி பொறுப்பேற்றார்.

ஜெயலலிதா காலமான அன்றே முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம், சசிகலா வகையறாக்களின் நிர்பந்தம் காரணமாக பிப்ரவரி 5ஆம் தேதி தன் பதவியை ராஜினாமா செய்தார். அன்றே சசிகலா சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டு, முதல்வராகும் முயற்சியை எடுத்தார்.

இந்நிலையில், பிப்ரவரி 7ஆம் தேதி அதிமுக தலைமையை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தினார். உடனே அதிமுக பொருளாளர் பொறுப்பில் இருந்து பன்னீர்செல்வத்தை சசிகலா நீக்கினார். பொருளாளர் பொறுப்பில் இருந்து தன்னை நீக்க சசிகலாவுக்கு அதிகாரம் இல்லை என அப்போதே பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

அதன்பின், அவைத் தலைவர் மதுசூதனன், ஓ.பன்னீர் செல்வம் பக்கம் வந்தார். அவரையும் கட்சியை விட்டு சசிகலா நீக்கினார். அப்போது, சசிகலா தன்னை நீக்கும் முன் அவரை தான் நீக்கிவிட்டதாக மதுசூதனன் தெரிவித்தார்.

தொடர்ந்து, அதிமுகவின் சட்ட விதிகளை காரணம் காட்டி, சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனத்தை ஏற்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு மதுசூதனன் கடிதம் எழுதினார்.

கடந்த 14ஆம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் சசிகலா சிறைக்கு சென்றார். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்பியான வி.மைத்ரேயன் தலைமையில் 11 எம்பிக்கள் கொண்ட குழுவினர் கடந்த 16ஆம் தேதி டெல்லியில், இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்தனர். அதில் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது, கட்சியின் விதிகளுக்கு புறம்பானது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இப்புகாருக்கு பதிலளிக்கும்படி, தேர்தல் ஆணையம் சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. சசிகலா இப்போது இருக்கும் பார்ப்பன அக்ரஹார சிறைக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அந்த நோட்டீஸுக்கான பதிலை அதிமுகவின் துணை பொதுச் செயலாளர் தினகரன் அனுப்பினார். அந்த பதிலை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை என்று தற்போது அறிவித்துள்ளது.

இது குறித்து இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ”அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நியமனம் குறித்து தேர்தல் ஆணையம் அளித்த நோட்டீஸுக்கு பதில் அளித்த டி.டி.வி.தினகரன் பதிலை ஏற்க முடியாது.

தேர்தல் ஆணையத்தில் உள்ள ஆவணங்களில் அதிமுக நிர்வாகிகள் பட்டியலில் தினகரன் பெயரோ, அவரது பொறுப்பு விவரமோ இல்லை. தினகரன் அதிமுகவில் எந்த ஒரு அதிகாரபூர்வ பதவியிலும் இல்லை. கட்சியில் அதிகாரபூர்வ பதவியில் இருப்பவர் மட்டுமே பதிலளிக்க முடியும்.

நோட்டீஸுக்கு சசிகலாதான் பதிலளிக்க வேண்டும். வரும் 10ஆம் தேதிக்குள் சசிகலா கையெழுத்திட்ட பதிலை அனுப்ப வேண்டும்” என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம், சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு இன்று அனுப்பியுள்ள கடிதம்:

0a1a