வானிலை எச்சரிக்கை: தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு!

அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், ”அந்தமான் கடல் பகுதியில் கடந்த திங்கட்கிழமையன்று உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுப்பெற்றுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடமேற்கு திசையிலும், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிக்கும் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், தென் தமிழகத்தில் சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும். சென்னையில் அவ்வப்போது மழை பெய்யும்” என்றார்.

கடந்த 24 மணிநேரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் விட்டு விட்டு மழை பெய்தது.கடலூர், பண்ருட்டியில் அரை மணிநேரம் கனமழை கொட்டியது. புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

காரைக்காலில் விட்டு விட்டு மழை பெய்தது. மின் தடையும் ஏற்பட்டதால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். நெல்லை மாவட்டம் தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த தொடர் மழையால் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அருவியில் அதிக அளவில் தண்ணீர் கொட்டுவதால் பிரதான அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. நாகர்கோவில், தக்கலை, திருவட்டாறு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.