பெருமாள் முருகன் மீண்டும் எழுத்தாளராக மறுநுழைவு!

‘மாதொரு பாகன்’ நாவல் எழுதியதற்காக சாதி – மத வெறியர்களின் எதிர்ப்புக்கும், தமிழக அரசின் ஆணவ அடக்குமுறைக்கும் ஆளானார் எழுத்தாளர் பெருமாள் முருகன். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, “பெருமாள் முருகன் இறந்துவிட்டான். இனி எழுத மாட்டான்” என்று அறிவித்து ஒதுங்கினார்.

ஆனால், எழுத்துரிமைப் போராளிகள், பெருமாள் முருகனுக்கு ஆதரவாக போராடினார்கள். முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் எழுத்துரிமைக்கும், பெருமாள் முருகனுக்கும் ஆதரவாக நீதிபதிகள் சமீபத்தில் தீர்ப்பளித்தார்கள். இதனால் எழுத்துப் பணியை மீண்டும் தொடர ஒப்புக்கொண்டார் பெருமாள் முருகன்.

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 22ஆம் தேதி), பெருமாள் முருகனுடனான உரையாடல் ஒன்று டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுமார் ஒன்றரை ஆண்டுகாலமாக ஒதுங்கியிருந்த பெருமாள் முருகன், மீண்டும் எழுத்தாளராக இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இது பற்றிய ராஜன் குறை கிருஷ்ணனின் முகநூல் பதிவு:-

பெருமாள் முருகன் மீண்டும் எழுத்தாளராக மறுநுழைவு கண்ட நிகழ்வு, தில்லி தீன்மூர்த்தி பவனில் கண்ணியமாகவும், வெற்று ஆரவாரங்களற்ற திடமான மன உறுதியை அரங்கிலிருந்தோர் அனைவரும் வெளிப்படுத்தும் எழுச்சிமிக்க தருணமாகவும் அரங்கேறியது.

பெருமாள் முருகன் தன் வழக்கமான சுயமாகவே எளிமையும், எந்த பூச்சுகளுமற்ற நேரடியான பேச்சுமாக பேரழகுடன் திகழ்ந்தார். தன்னை விழாக்களுக்கும், கூட்டங்களுக்கும் பேச அழைக்க வேண்டாம் என்றும், மெளனமே தனக்கு வலிமையைத் தருவதாகவும், படைப்பெழுத்தின் மூலமே உரையாட விரும்புவதாகவும் அவர் தமிழில் வாசித்த அறிக்கையில் தெரிவித்தார். அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை ஆ.இரா.வெங்கடாசலபதி தனது கம்மிய குரலில் உணர்ச்சியுடன் படித்தார்.

பெருமாள் முருகனின் “கோழையின் பாடல்கள்” நூலை இந்தியாவின் மூத்த கவிஞர்களில் ஒருவரும், இந்திய இலக்கிய உலகின் மனசாட்சியாகவும் விளங்கும் அஷோக் வாஜ்பேயி வெளியிட்டு, இரண்டு கவிதைகளை பெருமாள் முருகன் படிக்க, அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை படித்தார்.

தமிழ் நவீன இலக்கியத்திற்கு கெளரவம் சேர்த்த ஒரு மாலையாக இருந்தது.

பெருமாள் முருகனிடம் கையெழுத்து வாங்க நின்ற வரிசையில் சென்று, அவரை அணைத்து வாழ்த்தி விடை பெற்றேன். அவர் இந்த உலகம் வியக்குமளவு நிறைய எழுதவேண்டும்; மனம் விகசிப்பு கொள்கிறது.