முன்னாள் அமைச்சரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன் மரணம்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சரும், திராவிட அரசியலின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான ஆர்.எம்.வீரப்பன் இன்று (09-04-2024, செவ்வாய்க்கிழமை) காலமானார். அவருக்கு வயது 98.

வயது மூப்பின் காரணமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ஆர்.எம்.வீரப்பன், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று பகல் அவர் காலமானார். அவருக்கு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், திரை உலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆர்.எம்.வீரப்பன், மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில், அவரது அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்தவர். அதேபோல், மறைந்த முதல்வர்களான ஜானகி, ஜெயலலிதா ஆகியோரது அமைச்சரவைகளிலும் அமைச்சராக இருந்தவர்.

அதிமுகவில் இருந்தாலும், திமுக தலைவரான கருணாநிதி மற்றும் திமுகவைச் சேர்ந்த தலைவர்களுடனும் நட்பில் இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். அதிமுகவில் இருந்து விலகிய பிறகு எம்ஜிஆர் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியவர், பின்னர் தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொண்டு விட்டார்.

திரையுலகப் பயணம்:

திரையுலகிலும் தனி முத்திரை பதித்தவர் ஆர்.எம்.வீரப்பன்.

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் கடந்த 1953-ம் ஆண்டு ‘எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்’ என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார். இதற்கு ஆர்.எம்.வீரப்பன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வெளியான முதல் படம் ‘நாடோடி மன்னன்’ (1958). இந்நிறுவனம் சார்பில் ‘அடிமை பெண்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ ஆகிய படங்கள் தயாரிக்கப்பட்டன.

தொடர்ந்து 1963-ல் எம்.ஜி.ஆரின் தாயார் பெயரில் ‘சத்யா மூவீஸ்’ என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார் ஆர்.எம்.வீரப்பன். பின்னர் எம்ஜிஆரை வைத்து, ‘தெய்வத் தாய்’, ‘நான் ஆணையிட்டால்’, ‘காவல்காரன்’, ‘ரிக்‌ஷாகாரன்’, ‘இதயக்கனி’ உட்பட பல படங்களை தனது சத்யா மூவீஸ் மூலம் தயாரித்தார்.

அதேபோல, எம்ஜிஆருக்குப் பின் ரஜினியின் தொடக்க காலக்கட்டத்தில் பல்வேறு படங்களை தயாரித்து வசூலை குவித்தது ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவீஸ் நிறுவனம். 1981-ல் வெளியான ரஜினியின் ‘ராணுவ வீரன்’ தொடங்கி, ‘மூன்று முகம்’, ‘தங்க மகன்’, ‘ஊர்க்காவலன்’, ‘பணக்காரன்’, ‘பாட்ஷா’ ஆகிய படங்களையும், கமலை வைத்து, ‘காக்கி சட்டை’, ‘காதல் பரிசு’ ஆகிய படங்களையும் தயாரித்தார். இதில் ‘பாட்ஷா’ படம் வெளியான சமயத்தில் தென்னிந்திய சினிமாவில் அதிகபட்ச வசூல் சாதனையை குவித்த படம் என்ற சாதனையை பெற்றது.

1995ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று வெளியான ‘பாட்ஷா’ வெள்ளிவிழா கொண்டாடியது. சென்னையில் 184 நாட்கள் ஓடியது. பாட்ஷா’ படத்தின் வெள்ளி விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், “இந்த விழாவில் முக்கியமான ஒரு பிரச்சினை பற்றிப் பேச விரும்புகிறேன். சமீப காலமாக, தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் வேகமாகப் பரவி வருகிறது. இதற்கு அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். தமிழக முதல்வருக்கு (ஜெயலலிதா) இதை என்னுடைய வேண்டுகோளாக வைக்கிறேன். வெடிகுண்டு, துப்பாக்கிக் கலாசாரத்தை ஒழிக்கச் சட்டம் கொண்டு வாருங்கள்” என்று பேசினார்.

ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனை மேடையில் வைத்துக்கொண்டே, தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாசாரம் பற்றி பேசியிருந்தார் ரஜினிகாந்த். இதையடுத்து ஆர்.எம்.வீரப்பன் அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ‘பாட்ஷா’வுக்குப் பிறகு அவர் திரையுலகில் பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்: 

முதல்வர் ஸ்டாலினின் இரங்கல் செய்தி:-

“திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும், எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனருமான ஆர்.எம். வீரப்பன் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். அவரது 98-வது பிறந்த நாளான கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி நேரில் அவரது இல்லத்துக்கே சென்று அவரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த நினைவுகள் நிழலாடுகின்றன. அரசியலில் மட்டுமின்றி, திரைத்துறையிலும் வரலாற்று முத்திரையைப் பதித்துள்ள ஆர்.எம்.வீரப்பன், நூறாண்டுகளும் கடந்து நிறைவாழ்வு வாழ்வார் என்ற எம் போன்ற அவரது நலம் விரும்பிகளின் எதிர்பார்ப்பு, எதிர்பாராத விதமாக நிறைவேறாமல் போயிருப்பது வருத்தமளிக்கிறது.

ஆர்.எம்.வீ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் ஆர்.எம்.வீரப்பன், பெரியார், அண்ணா, எம்ஜிஆர், மறைந்த முதல்வர் கருணாநிதி என அனைத்து தலைவர்களுடனும் நெருக்கமும், நட்பும் கொண்டிருந்தவர். எம்ஜிஆரின் மனச்சாட்சியாகவும், நிழலாகவும் கருதப்பட்ட ஆளுமையாக அரசியலில் வலம் வந்தவர். அவரது அமைச்சரவையில் இடம்பெற்று செய்தி மக்கள் தொடர்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அமைச்சராகவும் பணியாற்றிப் புகழ் பெற்றவர்.

பின்னாளில், எம்ஜிஆர் கழகம் என்று தமக்கென தனி இயக்கம் கண்டாலும், திமுகவுடனும், மறைந்த முதல்வர் கருணாநிதியுடனும் அரசியல் ரீதியாக மட்டுமின்றி, தனிப்பட்ட முறையிலும் நல்லுறவையும், நட்பையும் பேணி வந்தார். அதே அன்பையும், பரிவையும் என்னிடத்திலும் அவர் காட்டி வந்தார்.

எம்ஜிஆரின் சத்யா மூவீஸ் நிறுவனத்தைத் திறம்பட நிர்வகித்து தமிழ்த்திரையுலகுக்கு பல்வேறு வெற்றிப் படங்களைத் தந்த சிறந்த தயாரிப்பாளராகவும் அவர் திகழ்ந்தார். அத்துடன், அவரது தமிழ்ப் பற்று காரணமாக சென்னை கம்பன் கழகத்துக்கும் தலைவராகப் பொறுப்பேற்று, இலக்கியத்துறையிலும் தனது தடத்தைப் பதித்தார்.

அத்துடன், ஆழ்வார்கள் ஆய்வுமையம் என்ற அமைப்பின் தலைவராகப் பணியாற்றி, ஆன்மிகத்துறையிலும் ஈடுபாடு கொண்டவராக அவர் இருந்து வந்தார். அரசியல், திரைத்துறை, தமிழ்த்துறை, ஆன்மிகம் என்று அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்த ஆர்.எம்.வீரப்பன் , அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைத்துத் தரப்பினராலும் விரும்பப்படும் பேராளுமையாகத் திகழ்ந்தார்.

அவரது மறைவு, அரசியல் உலகுக்கு மட்டுமின்றி, அவர் இயங்கி வந்த திரையுலம், இலக்கியம், ஆன்மிகம் உள்ளிட்ட அனைத்துறைகளுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது துணைவியார், குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட இயக்கம் இருக்கும் வரை ஆர்.எம்.வீரப்பனின் புகழும் நிலைத்திருக்கும்” என்று இரங்கல் செய்தியில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் நேரில் அஞ்சலி:

மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை அப்போலோ மருத்துவமனையில் உள்ள ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு முதல்வர் இறுதி அஞ்சலி செலுத்தினார். ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல் கூறினார்.

ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு அமைச்சர் சேகர் பாபு, தயாநிதி மாறன் உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து ஆர்.எம்.வீரப்பன் உடல் தியாகராயர் நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்படுகிறது. ஆர்.எம்.வீரப்பனின் மகன்கள் வெளிநாட்டில் இருந்து வ ந்தபின்னர் நுங்கம்பாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்படவிருக்கிறது.