டபுள் டக்கர் – விமர்சனம்

நடிப்பு: தீரஜ், ஸ்மிருதி வெங்கட், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், முனிஷ்காந்த், காளி வெங்கட், சுனில் ரெட்டி, ஷாரா, கருணாகரன், யாஷிகா ஆனந்த், ஜார்ஜ் விஜய், டெடி கோகுல் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: மீரா மஹதி

ஒளிப்பதிவு: கௌதம் ராஜேந்திரன்

படத்தொகுப்பு: வெற்றிவேல்.ஏஎஸ்

இசை: வித்யாசாகர்

தயாரிப்பு: ஏர் ஃபிளிக் புரொடக்‌ஷன்ஸ்

பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்

“இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் திரையுலக நடிப்புக் கலைஞர்கள் நடித்துள்ள ஃபேன்டசி காமெடி எண்டர்டெயினர்” என்ற விளம்பரத்துடன் வெளிவந்திருக்கிறது ‘டபுள் டக்கர்’ திரைப்படம். விளம்பரப்படுத்தப்பட்டது போல் இது நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறதா? அல்லது பொறுமையைச் சோதிக்கிறதா? பார்ப்போம்…

செல்வவளம் மிக்க குடும்பத்தில் பிறந்த நாயகன் அரவிந்த் (தீரஜ்), சிறுவயதில் நிகழ்ந்த விபத்து ஒன்றில் தனது தாய், தந்தையை இழந்து விடுகிறார். அந்த விபத்தில் அரவிந்த் முகத்தில் பயங்கரத் தீக்காயம் ஏற்படுகிறது. நாளடைவில் அது மறையாத தழும்பாக, அவரது முகத்தில் ஒரு குறைபாடாக, நிரந்தரமாக இருந்து விடுகிறது. இது ஏற்படுத்தும் தாழ்வு மனப்பான்மை காரணமாக அவர் அந்த முகத்தை மறைத்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், வில்லன் ராயரின் (மன்சூர் அலிகான்) மகளான பாரு மீது அரவிந்துக்கு காதல் அரும்புகிறது. ஆனால், அவரது காதலை பாரு ஏற்க மறுத்துவிடுகிறார். இதனால் வாழ்க்கையை வெறுக்கும் அரவிந்த் தற்கொலை முயற்சியில் இறங்குகிறார். ஆனால் அவரது உயிர் பிரிவதற்கு முன்பே, கடவுளின் உலகத்திலிருந்து வரும் ரைட், லெஃப்ட் என்ற இரண்டு அனிமேஷன் கதாபாத்திரங்கள், அவரது ஆயுள் முடிந்துவிட்டதாகக் கருதி தவறுதலாக அவரின் உயிரை எடுத்து விடுகின்றன.

இந்த தவறைக் கண்டித்து, “என்னுடைய உயிரை எப்படி நீங்கள் எடுக்கலாம்?” என்று ரைட், லெஃப்ட் என்ற அனிமேஷன் கதாபாத்திரங்களிடம் அரவிந்த் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில், அவரின் உடலை யாரோ திருடிச் சென்றுவிடுகிறார்கள்.

இதனால், அரவிந்த் உயிரை, அவரைப் போலவே இருக்கும் ராஜா (தீரஜ்) என்பவரின் உடலுக்குள் தற்காலிகமாக இருக்க வைக்கும் அனிமேஷன் கதாபாத்திரங்கள் இரண்டும், தொலைந்த அரவிந்தின் உடலைத் தேடுகின்றன. அது கிடைத்ததா? பாரு மீது அரவிந்த் கொண்ட காதல் என்ன ஆனது? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘டபுள் டக்கர்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

அரவிந்த், ராஜா என்ற இருவேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் தீரஜ். காதல், வருத்தம், கோபம் உள்ளிட்ட அனைத்து உணர்வுகளையும் பார்வையாளர்களுக்குக் கடத்துவதில் வெற்றி பெற்றுள்ளார். காயத் தழும்பு முகம் கொண்ட அரவிந்த் கதாபாத்திரத்தில் அவர் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு கவனிக்க வைக்கிறது.

நாயகி பாருவாக ஸ்மிருதி வெங்கட் நடித்திருக்கிறார். அழகாக இருக்கிறார். நடிப்பதற்கு அதிக ஸ்கோப் இல்லையென்றாலும், கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.

ரைட் அனிமேஷன் கதாபாத்திரத்துக்கு காளி வெங்கட்டும், லெஃப்ட் அனிமேஷன் கதாபாத்திரத்துக்கு முனிஷ்காந்தும் குரல் கொடுத்திருக்கிறார்கள். இவர்களது குரல்கள் பார்வையாளர்களுக்கு பரிச்சயமானதாக இருப்பதால் அவை படத்துக்கு பிளஸ்-ஆக இருக்கின்றன.

வில்லன் ராயராக வரும் மன்சூர் அலிகான், போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவள்ளியாக வரும் கோவை சரளா, பிரமானந்தமாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், ராக்கெட் ரெட்டியாக வரும் சுனில் ரெட்டி, மர்டர் மணியாக வரும் ஷாரா, மூர்த்தியாக வரும் கருணாகரன், வெல்வெட் வெண்ணிலாவாக வரும் யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் பார்வையாளர்களை சிரிக்கவும், ரசிக்கவும் வைக்க முயன்றிருக்கிறார்கள். ஆனால், இவர்களை சுற்றி நிறைய கிளைக்கதைகள் பின்னப்பட்டிருப்பது சோர்வை ஏற்படுத்துகிறது.

காமெடியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் மீரா மஹதி. அதற்காக கண்ணில் சிக்கிய காமெடிக் கலைஞர்களை எல்லாம் படத்துக்குள் அள்ளிப் போட்டிருக்கிறார். அவர்கள் ஒவ்வொருவருக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என்பதற்காக கதையை எப்படியெல்லாமோ வளர்த்துச் சென்றிருக்கிறார். இதைக் குறைத்து, மொக்கைக் காமெடிகளைத் தவிர்த்து, குழப்பம் நீக்கி, சுவாரஸ்யம் சேர்த்திருந்தால் படத்தை பெரும்பாலோர் ரசித்து பாராட்டியிருப்பார்கள்.

கௌதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவும், வித்யாசாகரின் பின்னணி இசையும் காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளன.

’டபுள் டக்கர்’ – பார்க்கலாம்!