அரிதாக நிகழும் அற்புதம் – ‘பாட்ஷா’!

பாட்ஷா படத்தை தொலைக்காட்சியில் அவ்வப்போது பார்த்திருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் ஏதாவது சில பகுதிகளை விட்டிருப்பேன். முழுப் படத்தையும் துண்டு துண்டாகத்தான் பார்த்திருக்கிறேன்.  இன்று சத்யம் தியேட்டரில் முதல்முறையாக ஒரே மூச்சில்  முழுமையாகப் பார்த்தேன்.

அட்டகாசமான திரைக்கதை. மேக்கிங்கிலும் மிகவும் மெனக்கெட்டு்ருக்கிறார்கள்.  மேஜிக் மட்டுமல்ல, சிறந்த கூட்டுழைப்பின் விளைவு தான் அதை மிகப் பெரிய வெற்றி பெற்றதோடு ஒரு cult படமாகவும் ஆக்கியுள்ளது.

கதை தொடங்கும்போது நான்கு வருடமாக ஆட்டோ ஓட்டுகிறேன் என்கிறார் மாணிக்கமாக இருக்கும் பாட்ஷா. பிறகு ஃப்ளாஷ்பேக்கில் அதுவும் அன்வர் தொடர்பான ஃப்ளாஷ்பேக்கில் (ஃப்ளாஷ்பேக்குக்குள் ஒரு ஃப்ளாஷ்பேக்!) ஒரு  நாளிதழைக் காட்டுவார்கள். அதில் 1989 என்று சரியாக கணக்கிடப்பட்டு ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும். 1994ல் உருவாகி 95 ஜனவரியில் வெளியான படம் பாட்ஷா என்பதை வைத்துப் பார்த்தால் இதிலுள்ள மெனக்கெடல் புரியும்.

மாணிக்கத்தின் வீட்டுக்குக் கீழ்ப்புறம் உள்ள சுவரில் அடிமைப்பெண் படப் போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது. அந்த இடம் ஒவ்வொருமுறை காட்டப்படும்போதும் அந்தப் போஸ்டர் அங்கு உள்ளது.

படத்தின் மிகப் பெரும்பகுதி செட்களில் எடுக்கப்பட்டதுதான் என்று படித்தேன். இறுதிக் காட்சியில் ஆண்டனி, பாட்ஷா குடும்பப் பெண்களை அடைத்துவைத்திருக்கும் இடத்துக்கு வெளியே இருக்கும் சுவரில் ஏர்போர்ட் படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கும் 1993ல் வெளியான படம் ஏர்போர்ட்

அதேபோல் இறுதி சண்டைக் காட்சியில் அம்மா, மனைவி தங்கைகளைக் காப்பாற்ற தீயில் விழுந்து புரள்கிறான் மாணிக்கம். அது கொஞ்சம் ஓவர் என்றுதான் தோன்றியது. ஆனால் அடுத்த காட்சியில் கேமரா ரஜினியின் பின்னால் இருக்கையில், சட்டை கருகி பல ஓட்டைகள் விழுந்திரு்ப்பது தெரிகிறது.

இதெல்லாம் சாதாரண விஷயங்களதான். ஆனால் மசாலா படத்தில் இதையெல்லாம் யார் கண்டுகொள்ளப் போகிறார்கள் என்று நினைக்காமல் கவனித்து செய்திருப்பதில்தான் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவின் உழைப்பும் மெனக்கெடலும் பளிச்சிடுகின்றன. அவ்ற்றின் பயனே இந்தப் படத்தின் மாபெரும் வெற்றி

மாஸ் ஹீரோ படங்களுக்கே உரிய சில லாஜிக் மீறல்களைத் தவிர படத்தில் வேறு எந்தக் குறையுமே இல்லை என்று சொல்லலாம்.

22 ஆண்டுகளுக்குப் பிறகு திரையில் வெளியாகியிருக்கிறது பாட்ஷா remastered version. பொதுவாக digitalised, remastered போன்ற வார்த்தைகளை பழைய சரக்கை புதியதுபோல் விற்பதற்காக பயன்படுத்துகிறார்கள் என்றுதான் தோன்றும். ஆனால் இந்தப் படத்தை மீண்டும் வெளியிட்டிருக்கும் குழுவினர், திரையில் புதிய படம் பார்ப்பது போன்ற உணர்வைக் கிட்டத்தட்ட தந்துவிட்டார்கள்

(22 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட படம் புதிதாகத் தெரியவேண்டும் என்றால் மீண்டும் படப்பிடிப்பு நடத்தினால்தான் உண்டு. இங்கு நான் புதிது என்று குறிப்பிடுவது பழைய படம் என்ற உணர்வு தோன்றாமல் இருப்பது அல்லது பொறுத்துக்கொள்ளும் அளவில் தோன்றுவதையே).

 திரையில் எங்கும் கோடுகள், புள்ளிகள் எல்லாம் விழவில்லை. visuals கண்ணை உறுத்தவில்லை.

மேலும், புதிய படம் என்ற உணர்வைத் தர சேர்க்கப்பட்டிருக்கும் விஷயங்களும் நன்றாகப் பயன்பட்டிருக்கின்றன. ஆட்டோக்களில் Ola விளம்பர ஸ்டிக்கர்கள் வருகின்றன். அதை கிராஃபிக்ஸ் அல்லது வேறு ஏதோ தொழில்நுட்பம் மூலமாகத்தான் சேர்த்திருக்கிறார்கள் என்றாலும்  அது துருத்திக்கொண்டு தெரியவில்லை. ஆட்டோக்களில் ஒட்டப்பட்டிருப்பது போலவே இருக்கிறது.

தேவா, பின்னணி இசையில் original versionல் சில இசையில்லாத இடங்களில் இசையையும், சில இசை இருக்கும் இடங்களில் கூடுதல் இசையையும் சேர்த்திருக்கிறார். இதுபோல் சேர்க்கப்பட்ட இசைகள் இந்தக் காலகட்டத்தின் இசைபோல் பொருத்தமாகவே உள்ளது.

தியேட்டரில் இவ்வளவு கொண்டாட்டத்துடன் படம் பார்ப்பதே ஒரு சிறப்பான உணர்வாக இருந்தது. பல இடங்களில் கத்தி ஆர்ப்பரித்து தொண்டை வலிக்கிறது.

அரிதாக நிகழும் அற்புதம் பாட்ஷா. அதை இந்த புதிய வடிவில் திரையரங்கில் பார்த்து ரசிப்பது ஒரு அழகான அனுபவம்தான்.

GOPALAKRISHNAN SANKARANARAYANAN