“வரும் மக்களவை தேர்தல் இரு கொள்கைகளுக்கு இடையேயான யுத்தம்!” – ராகுல் காந்தி

எதிர்வரும் மக்களவைத் தேர்தல் இரு கொள்கைகளுக்கு இடையேயான யுத்தம். நாட்டை பிளவுபடுத்தும் சக்தியின் பக்கம் நின்றவர்கள் யார், மக்களின் ஒற்றுமை, சுதந்திரத்துக்கு பாடுபட்டவர்கள் யார் என்பது வரலாற்றில் பதிவு செய்யப்படும்” என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை முஸ்லிம் லீக்  முத்திரை கொண்டது என பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்து வருவது பெரும் சர்ச்சையானது. இதையடுத்து, மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகாரளித்தது.

இந்நிலையில், மோடிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் இரு கொள்கைகளுக்கு இடையேயான யுத்தம். ஒரு பக்கத்தில் அனைவரையும் ஒருங்கிணைக்கும் சக்தியாக காங்கிரஸ் கட்சி உள்ளது. மற்றொரு பக்கத்தில் எப்போதும் மக்களை பிளவுபடுத்த நினைக்கும் பாஜக இருக்கிறது.

நாட்டை பிளவுபடுத்தும் சக்தியின் பக்கம் நின்றவர்கள் யார்? மக்களின் ஒற்றுமை, சுதந்திரத்திற்கு பாடுபட்டவர்கள் யார் என்பது வரலாற்றில் பதிவு செய்யப்படும். ஆங்கிலேயர் காலத்தில் ஒத்துழையாமை இயக்கத்தில் சிறை சென்றவர்களுக்கு ஆதரவாக நின்றவர்கள் யார்? அரசுக்கு ஆதரவாக நடந்துகொண்டவர்கள் யார் என்பதும் நமக்கு தெரியும். அரசியல் தளங்களில் இருந்து பொய்களை அள்ளி வீசுவதன் மூலம் வரலாற்றை மாற்ற முடியாது” எனப் பதிவிட்டுள்ளார்.