“பத்திரிகையாளர் ஞாநி போன்ற கேரக்டரில் ‘நோட்டா’ படத்தில் நடிக்கிறேன்!” – சத்யராஜ்

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாரிக்கும் ‘நோட்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

இதில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி மெஹ்ரீன், நடிகர் சத்யராஜ், படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கர், ஒளிப்பதிவாளர் சாந்தா ரவி.கே.சந்திரன், இசையமைப்பாளர் சாம் சி.எஸ், கலை இயக்குநர் கிரண், எடிட்டர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா, ஸ்டைலீட் ஷ்ராவ்யா சர்மா என படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும், தயாரிப்பாளர் ஷிபு தமின்ஸ், முன்னணி இயக்குநர்கள் பா.இரஞ்சித், ராஜேஷ், டீகே, ஷாந்தகுமார், விஜய் வரதராஜ், சந்தோஷ் பி. ஜெயக்குமார் ஆகியோரும், பிரபல விநியோகஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

n8

நடிகர் சத்யராஜ் பேசுகையில், “ஞானவேல் ராஜாவின் அப்பா எம்ஜிஆர் ரசிகர். அதனால் எம்ஜிஆர் ரசிகரின் மகன் தயாரிக்கும் படத்தில் நான் முதன்முதலாக நடிக்கிறேன். இயக்குநர் ஆனந்த் சங்கர், எழுத்தாளர் கோமல் சுவாமிநாதனின் பேரன். கோமல் சுவாமிநாதன் எழுதி அரங்கேற்றிய ‘கோடுகள் இல்லாத கோலங்கள் ’ என்ற நாடகத்தில், சிவக்குமார் அவர்களின் சிபாரிசில் நடித்திருக்கிறேன். அதற்காக அவர் எனக்கு முப்பது ரூபாய் சம்பளமாக கொடுத்தார். அதில் பத்து ரூபாய்க்கு இனிப்பு வாங்கி சிவக்குமார் வீட்டிற்கு கொடுத்தேன். மற்றொரு பத்து ரூபாயை நான் எம்ஜிஆரின் ரசிகன் என்பதால் முகம் தெரியாத ஒருவருக்கு தானமாக கொடுத்துவிட்டேன். மற்றொரு பத்து ரூபாயை என்னுடைய வீட்டில் பிரேம் போட்டு வைத்திருக்கிறேன். இப்போது அவருடைய பேரன் ஆனந்த் சங்கரின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறேன். இது மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஒரேயொரு விசயத்தை நான் சொல்லிவிடுகிறேன். இந்த ‘நோட்டா’ என்ற தலைப்பை நான் சொல்லவில்லை. அவர்களாகவே யோசித்து வைத்தது. இதைவிட பொருத்தமான, கவர்ச்சியான டைட்டிலை வைக்க முடியுமா என தெரியவில்லை. இந்த படத்தில் நான் ஒரு முக்கியமான கேரக்டரில், பத்திரிக்கையாளர் ஞாநியை போன்ற ஒரு கேரக்டரில் நடிக்கிறேன். இதற்கான கெட்டப் புதிதாக இருக்கிறது.

நான் பத்து தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் தெலுங்கை கற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் தெலுங்கு திரையுலகில் உள்ள நாயகர்கள், தொழிலநுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் தமிழ் தெரிந்திருக்கிறது. அதனால் படப்பிடிப்பிற்கு இடையே தெலுங்கை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

பழைய படங்களில் 75 சதவீதம் கதை, 25 சதவீதம் தான் தொழில்நுட்பம் இருக்கும். இன்று 25 சதவீதம் தான் கதை, 75 சதவீதம் தொழில்நுட்பம் இருக்கிறது. இன்று ஒரு கதையை எப்படி எடுத்துக் காண்பிக்கவிருக்கிறோம் என்பதில் தான் வெற்றி இருக்கிறது. இதில் இயக்குநர் ஆனந்த் சங்கர் ‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’ என இரண்டு படங்களில் ஏற்கனவே நிரூபித்திருக்கிறார். அந்த வகையில் இந்த இளைய தலைமுறையினருடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

இயக்குநர் ஆனந்த் சங்கர் பேசுகையில், “தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கதையை நம்பி படமெடுப்பவர் என்பதை என்னுடைய அனுபவத்தால் தெரிந்துகொண்டேன். இவர்களால் தான் படத்தின் பட்ஜெட்டிற்கு ஏற்றாற்போல் பணியாற்ற முடியும். அதேபோல் நாயகன் விஜய் தேவரகொண்டா, ‘பெள்ளி சூப்புலு’, ‘அர்ஜுன் ரெட்டி’ என வெவ்வேறு ஜானர் படங்களில் நடித்து தன்னுடைய நடிப்பு திறமையை நிரூபித்தவர். இவரை போன்றவர்களுக்கு மொழி ஒரு பிரச்சனையேயில்லை. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, இங்கிலீஷ் என எல்லா மொழி படத்திலும் நடிக்கலாம்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி ரசிகர்களும் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டார்கள். அதனால் ‘நோட்டா’ படத்தின் மூலம் ஒரு ப்யூர் டிராமாவை தர வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த படத்தை இயக்குகிறேன். இந்த படத்தில் சத்யராஜ் அழுத்தமான கேரக்டரில் நடிக்கிறார். ஹிந்தியில் அமிதாப் பச்சன் ஏற்று நடிக்கும் கேரக்டர் போல் இருக்கும். இசையமைப்பாளர் சாம் சிஎஸ் எனக்கு போன் செய்து ஸ்கிரிப்ட் கேட்டார். அவர் ஸ்கிரிப்ட் படித்துவிட்டு பின்னணி இசையை வடிவமைத்து என்னிடம் காட்டினார். இது எனக்கு புது அனுபவமாக இருந்தது. இந்த கதைக்குள் அரசியல் நுட்பங்கள், அரசியல் நகர்வுகள் அதிகம் இடம்பெற வேண்டும். அதற்கு அரசியல் தெரிந்த ஒரு எழுத்தாளர் வேண்டும் என்று நினைத்தேன். அதனால் இணையத்தில் தொடாந்து எழுதி வரும் எழுத்தாளர் ஷான் கருப்பசாமியின் கதையை தேர்ந்தெடுத்து, அவருடன் விவாதித்து, திரைக்கதை அமைத்தோம்” என்றார்.

நடிகர் விஜய் தேவரகொண்டா பேசுகையில், “பெள்ளி சூப்புலு’ படம் வெளியான பிறகு ஏராளமானவர்கள் என்னிடம் தமிழில் நடிக்குமாறு கேட்டார்கள். ஆனால் நான் தான் மறுத்தேன். ‘அர்ஜுன் ரெட்டி’ வெளியான பிறகும் என்னை தொடர்ந்து தமிழில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அப்போது நான் எனக்கு பொருத்தமான கதை அமைந்தால் நடிக்கிறேன் என்று சொன்னேன்.

இயக்குநர் ஆனந்த், என்னை சந்தித்து கதையை சொன்னார். அப்போது நான் தொடர்ந்து இடைவிடாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் திரைக்கதையை கவனித்து கேட்க முடியவில்லை. பிறகு அவரிடம் இந்த கதையை வேறு ஒரு சமயத்தில் கேட்கிறேன் என்று சொன்னேன். பிறகு சற்று ஓய்வு கிடைத்தவுடன் இந்த கதையை முழுமையாக கேட்டேன். அற்புதமாக இருந்தது. எனக்கு ஏற்ற கதையாகவும் இருந்தது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

இந்த சமயத்தில் உங்களிடத்தில் ஒரேயொரு வாக்குறுதியை அளிக்கிறேன். இந்த படத்திற்கு நானே தமிழில் டப்பிங் பேசுவேன். அதற்குள் நான் தமிழை கற்றுக்கொள்வேன். என்னுடைய நடிப்பை என்னுடைய குரலில் தான் பார்ப்பீர்கள். தமிழ் ரசிகர்களுக்கு வாழ்த்துகள்” என்றார்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கி, சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.