“இந்திய சூழலில் இயந்திர ஓட்டுப்பதிவு நம்பிக்கைக்கு உரியதாக இல்லை!” – இயக்குனர் பா.இரஞ்சித்

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘நோட்டா ’என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

இதில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி மெஹ்ரீன், நடிகர் சத்யராஜ், படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கர், ஒளிப்பதிவாளர் சாந்தா ரவி.கே.சந்திரன், இசையமைப்பாளர் சாம் சி.எஸ், கலை இயக்குநர் கிரண், எடிட்டர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா, ஸ்டைலீட் ஷ்ராவ்யா சர்மா என படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும், தயாரிப்பாளர் ஷிபு தமின்ஸ், முன்னணி இயக்குநர்கள் பா.இரஞ்சித், ராஜேஷ், டீகே, ஷாந்தகுமார், விஜய் வரதராஜ், சந்தோஷ் பி. ஜெயக்குமார் ஆகியோரும், பிரபல விநியோகஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

n8

இயக்குநர் பா.இரஞ்சித் பேசுகையில், “ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனத்தின் ஆதரவால் தான் என் திரையுலக பயணத்தைத் தொடங்கினேன். இந்நிறுவனம் தயாரித்த ‘மெட்ராஸ்’ என்ற படம் தான் எனக்கான பாதையை தெளிவுபடுத்தியது. அதேபோல் தமிழ் சினிமாவில் ‘நோட்டா’ படமும் மிக முக்கியமான படமாக இருக்கும். ஏனெனில் படத்தின் பெயரிலேயே அரசியல் இருக்கிறது. இயக்குநர் ஆனந்த் சங்கரின் பங்களிப்பு பெரிய அளவில் இருக்கும் என்று நம்புகிறேன்.

‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் தமிழிலும் வெற்றி பெறுவார். ஏனெனில் தமிழர்கள் திறமையை மதிப்பவர்கள். இதற்கு ‘அட்டக்கத்தி’ மற்றும் ‘அருவி’ என பல உதாரணங்களை சொல்லலாம். தமிழ் ரசிகர்களை விஜய் தேவரகொண்டா தன்னுடைய நடிப்பு திறனால் திருப்திப்படுத்துவார் என நம்புகிறேன்.

இன்றைக்கு சினிமாவில் கதை சொல்வது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் கதைக்குள் அரசியல் இருப்பதும் முக்கியமாகிறது. ஏனெனில் இந்திய சூழலில், தமிழ் சூழலில் மட்டும் தான் அரசியல் சார்ந்து சிந்தித்து, செயல்படும் இளைஞர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய இளைஞர்கள் தான் எந்தவித அரசியலில் சார்ந்து இருக்கிறோம். எந்தவித அரசியலை முன்னெடுக்கிறோம் என்பதை பற்றியெல்லாம் பொதுவெளியில் விவாதிக்கிறார்கள். ஆனால் எந்த அரசியல் சரியானது என்ற தெளிவு மட்டும் கிடைக்கவில்லை. அதை நாம் பின்பற்றும் சித்தாந்தங்கள் சொல்லிக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

தேர்தல் அரசியல் மற்றும் ஓட்டு அரசியலில் எனக்கு பெரிதாக நம்பிக்கை இல்லை. ஏனெனில் இந்திய சூழலில் இயந்திர ஓட்டுப்பதிவு என்பது நம்பிக்கைக்கு உரியதாக இல்லை என்பது என்னுடைய கணிப்பு. இது குறித்த அச்சம் என்னுள் இருக்கிறது. ஒரு செல்போனை ஹேக் செய்து அதிலுள்ள தகவல்களை திருடலாம் என்ற நிலை இருக்கும்போது, எலக்ட்ரானிக் இயந்திரம் மூலம் நடைபெறும் வாக்குப்பதிவு என்பது எவ்வளவு தூரம் உண்மையானதாகவும், நம்பிக்கைக்குரியதாகவும் இருக்கும் என்ற சொல்ல முடியாது. அத்துடன் ஒரு அச்சத்தையும் இது கொடுக்கிறது. இதனால் நோட்டா என்பது முக்கியமான அதிகாரமாக இருக்கிறது. என்னுடைய சொந்த வாழ்க்கையில் கூட இரண்டு முறை நோட்டாவினை பயன்படுத்தியிருக்கிறேன். அதேபோல் இந்த படம் பெரிய அளவில் ஒரு விவாதத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசுகையில், “இயக்குனர் இரஞ்சித் தன்னுடன் யார் பழகினாலும் அவர்களுக்கும் அரசியலின் முக்கியத்துவத்தை பேசி உணர்த்திவிடுவார். என்னைப் பொறுத்தவரை ரஜினியின் அரசியல் பிரவேசத்தின் பின்னணியில் இரஞ்சித்தின் பங்களிப்பு இருக்கிறது என்று உறுதியாக நினைக்கிறேன். ஏனெனில் இரஞ்சித், தான் வாழும் இந்த சமூகத்தின் மீது பெரிதும் நம்பிக்கை கொண்டவர்.

‘இருமுகன்’ படத்தின் டீஸரைப் பார்த்து பிரமித்துப்போனேன். அதே பிரமிப்பு படத்தைப் பார்க்கும்போதும் இருந்தது. அப்போதே இயக்குநர் ஆனந்த் சங்கரை வைத்து ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என்று திட்டமிட்டேன். பல முறை சந்திப்பு நடைபெற்றது. ‘நல்லதொரு திரைக்கதை இருந்தால் சொல்லுங்கள். படம் தயாரிப்போம் என்று வாக்குறுதி கொடுத்திருந்தேன்’. அவர் இந்த கதையை என்னிடம் சொல்லி, அதனை எப்படி உருவாக்கப்போகிறேன் என்ற விவரத்தையும் தெரிவித்தபோது நான் வியப்படைந்தேன். பிறகுதான் இந்த படத்தை தொடங்கினோம்.

‘அர்ஜுன் ரெட்டி’ படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும்போது, அதன் தமிழ் ரீமேக் உரிமையை பாலா வாங்கினார். அதற்குள் அந்த படம் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் மட்டும் கிட்டத்தட்ட மூன்று கோடி ரூபாயை வசூலித்தது. ரசிகர்கள் அனைவரும் ஹீரோ விஜய் தேவரகொண்டா பர்ஃபாமென்ஸை மீண்டும் மீண்டும் ரசிக்க திரையரங்கத்திற்கு சென்றார்கள். அதனால் அவரை தமிழில் அறிமுகப்படுத்துவதை எங்கள் படநிறுவனம் பெருமிதமாக கருதுகிறது” என்றார்.