தர்பார் – விமர்சனம்

”ரஜினிகாந்த் இந்த (2020ஆம்) ஆண்டு அரசியல் கட்சி தொடங்கி, அடுத்த ஆண்டு நடைபெறும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, முதலமைச்சர் ஆவார்” என்று அவரது ஆதரவாளரான தமிழருவி மணியன் எல்லா டிவி சேனல்களிலும் முழங்கிவரும் சூழ்நிலையில், தற்போது வெளிவந்திருக்கும் ‘தர்பார்’ படம் தீவிர அரசியல் கருத்துக்களைப் பேசும் படமாக இருக்கும் என எதிர்பார்ப்போருக்கு முதலிலேயே சொல்லிவிடுகிறோம். இது அரசியல் படம் அல்ல. ஆங்காங்கே தீவிர அரசியல் கருத்துக்களை வாரி இறைக்கும் படமும் அல்ல. அதேநேரத்தில், அரசியலை எதிர்பார்த்து இந்த படத்துக்கு வரும் ரஜினியின் மன்றத்து “புள்ளிங்கோ” அப்செட் ஆகிவிடக் கூடாது என்பதற்காக, அவர்களை திருப்திப்படுத்துவதற்காக இரண்டு அரசியல் வசனங்களைத் தெறிக்க விட்டிருக்கிறார்கள்.

ஒன்று. “தமிழ்நாடு தான் என் பூர்விகம். கிருஷ்ணகிரி மாவட்டம் நொச்சிக்குப்பம் என் சொந்த ஊர்” என்று படத்தில் வசனம் பேசுகிறார் ரஜினி. (“தமிழரல்லாத, கர்நாடக மராட்டியரான ரஜினி தமிழக அரசியலில் குதிக்க்க் கூடாது” என்ற எதிர்ப்புக்குரல் எழுந்தபோது, அதை மறுத்து, 2017ஆம் ஆண்டு ரசிகர்க்ள் மத்தியில் பேசிய ரஜினி, “நான் பச்சைத் தமிழன்” என சொல்லிவிட்டு, அதற்கு ஆதாரமாக இந்த ‘நொச்சிக்குப்பம்’ மேட்டரை எடுத்துவிட்டு அப்ளாஸ் வாங்கியது நினைவுகூரத் தக்கது.)

இரண்டு. “காசிருந்தால் சிறைவாசி ஷாப்பிங் கூட போய் வரலாம்” என்றொரு வசனம் வருகிறது. பெங்களூரு சிறையில் இருக்கும் ச்சிகலாவை, பெயர் குறிப்பிடாமல் நக்கலடிக்கிறது இந்த வசனம்.

இந்த இரண்டு வசனங்களைத் தவிர, வேறு அரசியல் பூச்சு எதுவும் இல்லாத, சுத்தமான, முழுமையான போலீஸ் ஸ்டோரி இந்த ‘தர்பார்’.

மும்பை மாநகர காவல்துறை ஆணையர் ஆதித்யா அருணாசலம் (ரஜினிகாந்த்). கொலைவெறி பிடித்தவர் போல் அலையும் இவர், சட்டவிதிகள் எதையும் கடைப்பிடிக்காமல், ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் மனம்போல் கொன்று குவிக்கிறார். இது முறையற்றது என்பதால், மனித உரிமை ஆணையத்தைச் சேர்ந்தவர்கள் இவர் மீது நடவடிக்கை எடுக்க முற்படுகிறார்கள். ஆனால், அவர்களையும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணிய வைக்கிறார். ஆதித்யா அருணாசலம் தன் மகள் (நிவேதா தாமஸ்) இறந்ததிலிருந்து தான் இப்படி ஆகிவிட்டார் என்பதும், தன் மகளின் இறப்புக்குக் காரணமான கொடூரனைத் தேடித் தான் இப்படி கொலைவெறி ஆட்டம் ஆடுகிறார் என்பதும் தெரிய வருகிறது. அவரது மகள் எப்படி இறந்தாள்? அவளது இறப்புக்குப் பின்னாலிருக்கும் கொடூரன் யார்? அவனை ஆதித்யா அருணாசலம் எப்படி கண்டுபிடிக்கிறார்? எப்படி பழி தீர்க்கிறார்? என்பது தான் படத்தின் கதைச்சுருக்கம்.

0a1b

மும்பையில் தலைவிரித்தாடும் போதைமருந்து கடத்தல், பெண்கள் கடத்தல் போன்ற குற்றச்செயல்களை மையமாக வைத்து திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், இக்குற்றங்களில் ஈடுபடும் மாஃபியாக்களை துவம்சம் செய்து அழிக்கும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தை ஹீரோ ஆக்கி, அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கத் தக்க பொழுதுபோக்கு படமாக இப்படத்தை கொடுத்திருக்கிறார்.

ஸ்டைல், ஆக்‌ஷன், காமெடி என படம் முழுவதும் ரஜினி தர்பார் கொடிகட்டி பறக்கிறது. சமீபத்திய முந்தைய படங்களைக் காட்டிலும் இதில் ரஜினி இளமைத் துள்ளலுடன் நடித்துள்ளார். வசன உச்சரிப்பு, நுட்பமான அசைவுகளில் தான் கிங் என்பதை நிரூபித்துள்ளார். நாயகியைப் பார்த்தவுடன் பேச்சு வராமல் பம்முவது, பேச முடியாமல் தொண்டைக்குள் சிக்கிக்கொண்டதைப் போன்று உளறுவது, கை- கால்கள் உதறுவது, நயன்தாராவிடம் பேச ரிகர்சல் செய்வது என ரஜினிக்கான வழக்கமான நகைச்சுவை அம்சங்கள் இதிலும் உள்ளன. அவை அத்தனையையும் தனக்கே உரிய ஸ்டைலில் ரஜினி செய்யும்போது இன்னும் ரசிக்க வைக்கிறார்.

புத்திசாலித்தனமான ஐடியாக்களை வேண்டுமென்றே உதிர்த்துவிட்டு வில்லன்களின் பலத்தை அறியும் மதி நுட்பத்தையும் ரியாக்‌ஷன்களில் காட்டி அசத்துகிறார். மகள் மீதான பாசத்தில் பரிதவிக்கும்போதும், நிலைமையைச் சரிசெய்ய வெளியில் செல்ல ஸ்பிரிட்டுடன் கிளம்பும்போதும் இயல்பான தகப்பனைக் கண்முன் நிறுத்துகிறார். வில்லன் கொடுக்கும் தொல்லைகளால் அவனை எப்படி முடிப்பது என விரல்களால் வித்தை செய்யும் விதத்தில் நடிப்பில் கவர்கிறார். யோகிபாபுவை படம் முழுக்க கலாய்க்க விட்டு அப்ளாஸ் அள்ளுகிறார். பில்டப் காட்சிகள் அத்தனையிலும் அதகளம் செய்துள்ளார்.

நாயகி நயன்தாரா தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். ரஜினியின் மகளாக வரும் நிவேதா தாமஸ் தனது இயல்பான நடிப்பால் கவருவதோடு ரசிகர்களின் இதயங்களிலும் இடம் பிடித்துவிடுகிறார்.

முதன்முறையாக ரஜினியுடன் இணைந்து நடித்திருக்கும் யோகிபாபு, சும்மா தெறிக்கவிட்டுள்ளார், அவர் வரும் காட்சிகளிலெல்லாம் நம்மை சிரிக்க வைக்கிறார்.

வில்லன் சுனில் ஷெட்டி, தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். வினோதமான கத்தியுடன் வந்து வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்..

படத்திற்கு மிகப்பெரிய பலம் அனிருத்தின் பின்னணி இசை. சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைகிறது.

“தர்பார்” – அனைத்து தரப்பினருக்கும் பிடித்தமான சர்க்கரை பொங்கல்!