மசாலா படம் – விமர்சனம்

“மசாலா படம்’… தலைப்புக்கு ஏத்த மாதிரி இந்த படத்துல எல்லா சுவையும் அளவோடு கலந்து, குழந்தைகளோடு குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்கிற (ரசிக்கிற) தரமான படமாக இருக்கும். இந்த படத்துல, தகவல் தொழில்நுட்ப காதலர்களான இன்றைய இளைஞர் – இளைஞிகளின் சமூக சிந்தனையையும், சினிமாவையும், அதன் ஆயிரம் அணுகுண்டுகளுக்கு இணையான சக்தியையும், குற்றம் மட்டுமே கண்டுபிடித்து ‘லைக்’ வாங்கும் நவீனகால நக்கீரர்களையும் சிந்திக்க வைக்கும் ஒரு சரியான திரைப்படமாக இருக்கும்.”

‘மசாலா படம்’ பிரஸ் ஷோ பார்க்க வந்த செய்தியாளர்களுக்கு இப்படத்தின் படக்குழு எழுத்துப்பூர்வமாக கொடுத்த உத்தரவாதம் தான் மேலே இருக்கும் வாசகங்கள். இந்த உத்தரவாதத்தின் அடியொற்றி தான் ‘மசாலா படம்’ படக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

படத்திற்குள் ஒரு படம் எடுப்பது போல் கதை இருந்தால், அதை ‘மெட்டா வகை படம்’ என்று அழைப்பார்கள். சமீபத்தில் இந்த வகை கதையமைப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பார்த்திபனின் ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’. இப்படம் ஹிட் ஆவதற்கு ஒரு முக்கிய காரணம் இணையதள மற்றும் சமூக வலைத்தள விமர்சகர்கள். இப்படம் வெளியான அதே நாளில் ரிலீஸான மற்றொரு படம், சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கிய ‘அஞ்சான்’. இப்படத்தை இணையதள மற்றும் சமூக வலைத்தள விமர்சகர்கள் எப்படி நார் நாராய் கிழித்து தோரணமாய் தொங்கவிட்டார்கள் என்பதும், “இவர்கள் தான் ‘அஞ்சான்’ படுதோல்விக்கு காரணம்” என்று சூர்யாவும், லிங்குசாமியும் பிரஸ்மீட்டில் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்கள் என்பதும் உங்களுக்கு நினைவிருக்கும்.

ஒளிப்பதிவாளரான லஷ்மண்குமார் அறிமுக இயக்குனராக இயக்கியிருக்கும் ‘மசாலா படம்’ ஒரு ‘மெட்டா வகை படம்’ தான். ‘அஞ்சான்’ படம் வெளியான நாளை நினைவூட்டும் வகையில் இப்படக்கதை ஆரம்பமாகிறது…

பிரபல முன்னணி தயாரிப்பாளர் (வெங்கட்) பெரும் பொருட்செலவில் மசாலா படம் ஒன்றை தயாரித்து வெளியிடுகிறார். இந்த படத்தை பார்க்கும் கார்த்தி (அர்ஜூன் சோமையாஜூலு) என்ற இளைஞர், தனது சமூக வலைத்தள பக்கத்தில் “படம் படுமொக்கை” என்று பதிவிடுகிறார். இந்த பதிவு வைரலாக பரவ, படம் பார்க்க வருபவர்களின் எண்ணிக்கை குறைகிறது. இதனால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.

இந்நிலையில், கார்த்தி ஒரு விபத்தில் சிக்க, அதற்கு தயாரிப்பாளர்தான் காரணம் என்று அவர் மறுபடியும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிடுகிறார். இதுவும் வைரலாக பரவி, பரபரப்பையும் பெரிய சர்ச்சையையும் ஏற்படுத்துகிறது.

இதனால், டிவி சேனல் ஒன்று அந்த தயாரிப்பாளரையும், சமூக வலைத்தள விமர்சகர்களான கார்த்தி மற்றும் அவரது நண்பர்களையும் அழைத்து விவாத நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறது இந்த விவாதத்தின்போது. கார்த்தி மற்றும் அவரது நண்பர்களுக்கு தயாரிப்பாளர் ஒரு சவால் விடுகிறார். “படத்தை  விமர்சனம் செய்யும் உங்களால் பெரும்பான்மையான மக்கள் ரசிக்கும்படி ஒரு கதை தயார் செய்ய முடியுமா? 6 மாத காலத்திற்குள் அப்படி ஒரு கதை தயார் செய்து வந்தால், அதை நானே படமாக தயாரிக்கிறேன்” என்று கூறுகிறார்.

கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் இந்த சவாலை ஏற்றுக்கொண்டு, கதை தயாரிக்கும் பணியில் மும்முரமாகிறார்கள். யதார்த்தத்துக்கு நெருக்கமாக இருந்தால்தான் அது சினிமா என்று நம்பும் இவர்கள், தாங்கள் விரும்புகிற விதமாய் கதை பண்ணுவதற்கு நிஜ வாழ்க்கையிலிருந்து மூன்று விதமான மூன்று மனிதர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஒருவர், சினிமா பற்றி எதுவும் தெரியாத, வெகுளியான, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மணி (‘மிர்ச்சி’ சிவா). இன்னொருவர், கல்லறை தோட்டத்தை வசிப்பிடமாகக் கொண்டு, அடி-தடியையே வாழ்க்கை முறையாகக் கொண்டு பெரிய ரவுடியாக இருக்கும் அமுதன் (பாபி சிம்ஹா). மூன்றாமவர், காதலியின் பிறந்தநாளை பெரிய பார்ட்டி வைத்து கொண்டாடும் அதேவேளை, அதே நாளில், இன்னொரு பெண்ணுக்கு ‘ரூட்டு’ விடும் பிளேபாயாக இருக்கும் கிரீஷ் (கௌரவ்). இந்த மூன்று பேருடன் நெருங்கிப் பழகி, அவர்களது வாழ்க்கையிலிருந்து கதைக்குத் தேவையான அம்சங்களை திரட்டித தர ஒரு ஆள் வேண்டுமே? இதற்காக போட்டோ ஜர்னலிஸ்ட் தியாவை (லஷ்மிதேவியை) தேர்ந்தெடுக்கிறார்கள்.

இறுதியில், கார்த்திக், தியா மற்றும் அவர்களது நண்பர்கள் அந்த மூன்று விதமான மனிதர்களை பின்தொடர்ந்து, உற்றுநோக்கி, ஒரு கதையை தயார் செய்தார்களா? அதை தயாரிப்பாளர் படமாக எடுத்தாரா? வெற்றி பெற்றாரா? என்பதே மசாலா படம்.

மிர்ச்சி சிவா, ஒரு நடுத்தர வர்க்க இளைஞனாக அழகாக பளிச்சிடுகிறார். இவர் பேசும் வசனங்கள், சிறு சிறு செய்கைகள் ரசிக்கும்படியாக இருக்கிறது.

பாபி சிம்ஹா, ஏரியா ரவுடியாக நடிப்பில் மிரட்டுகிறார். அதேநேரத்தில், ஒரு ரவுடிக்குள்ளும் காதல் வந்தால் எந்த மாதிரியான உணர்வு இருக்கும் என்பதை தனது அழகான நடிப்பால் ரசிக்க வைத்திருக்கிறார்.

கௌரவ், சாக்லேட் பாயாக அழகாக இருக்கிறார். இவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை அருமையாக பதிவு செய்திருக்கிறார்.

லட்சுமி தேவிக்கு மூன்று நாயகர்களுடன் நெருங்கிப் பழக வேண்டும் என்பது போன்ற அழுத்தமான கதாபாத்திரம். அதை மிகவும் நேர்த்தியாகவும், அழகாகவும் செய்திருக்கிறார். அதேபோல், சமூக வலைத்தளங்களில் பதிவிடும் நண்பர்களாக வருபவர்களும் தங்களது நடிப்பால் வெகுவாக ரசிக்க வைக்கிறார்கள்.

மசாலா படங்களை “குப்பை” என்று சமூக வலைத்தளங்களில் எழுதி புறந்தள்ளும் விமர்சகர்களைப் பார்த்து, மசாலாபடக்காரர்கள் சார்பில் நின்று, “ஏ… விமர்சகர்களே! நீங்களெல்லாம் முட்டாள்கள்! ஒரு சினிமா கதை பண்ண துப்பு இல்லாதவர்கள்! மசாலா படங்களின் மகிமை தெரியாத மரமண்டைகள்! எங்கள் மசாலா படங்களில் கதாநாயகர்களாக நடிப்பவர்கள் தான் ‘மாஸ் ஹீரோ’க்களாகி, அரசியலில் குதித்து, ஆட்சியையும் பிடிக்கிறார்கள். எங்கள் பலம் தெரியாமல், மசாலா படங்களை குறை சொல்லாதீர்கள். ஜாக்கிரதை…” என்று பதிலுக்கு தொடை தட்டுவதாக இப்படக்கதை பின்னப்பட்டிருக்கிறது.

திரைப்படங்கள் பிரதானமாக இரண்டு வகைப்பட்டவை. ஒன்று – சத்யஜித்ரே, மிருணாள்சென், ஷியாம் பெனகல், கோவிந்த் நிஹாலினி, பி.வி.காரந்த், கிரீஷ் கேசரவல்லி, அடூர் கோபாலகிருஷ்ணன், ஜெயகாந்தன், மகேந்திரன், ருத்ரய்யா போன்றோரின் சீரியஸ் படங்கள். மற்றொன்று – எஸ்.பி.முத்துராமன், இராம.நாராயணன், கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர், முருகதாஸ் போன்றோரின் மசாலா படங்கள். இவற்றில் இரண்டாவது வகைப் படங்களுக்கு வக்கீலாகி வக்காலத்து வாங்கியிருக்கிறார் ‘மசாலா படம்’ இயக்குனர் லஷ்மண்குமார்.

திரைப்பட பார்வையாளராகிய நீங்கள் மசாலா படப் பிரியராக இருந்தால், இயக்குனர் லஷ்மண்குமார் இப்படத்தில் முன்வைக்கும் வாதங்களை கைதட்டி வரவேற்று, அவரை இடுப்பில் தூக்கி வைத்து கூத்தாடலாம். நீங்கள் சீரியஸ் படப் பிரியராக இருந்தால், அந்த வாதங்களை தகர்த்து தவிடுபொடியாக்கி, இயக்குனர் லஷ்மண்குமாரை விமர்சன வாளால் வெட்டிக் கூறு போடலாம். ஆனால், வரவேற்பதாக இருந்தாலும், விமர்சிப்பதாக இருந்தாலும், நீங்கள் ‘மசாலா படம்’ பார்த்திருந்தால் மட்டும்தான் முடியும்.

புறப்படுங்கள் ‘மசாலா படம்’ பார்ப்பதற்கு – கையில் பூங்கொத்துடன்! அல்லது கூர்மையான வாளுடன்!