கப்ஜா – விமர்சனம்

நடிப்பு: உபேந்திரா, ஸ்ரேயா, கிச்சா சுதீப், சிவராஜ்குமார் (சிறப்பு தோற்றம்), முரளி சர்மா, நவாப் ஷா,ஜான் கொக்கேன், கோட்டா சீனிவாசராவ், தேவ்கில் மற்றும் பலர்

இயக்கம்: சந்துரு

ஒளிப்பதிவு: ஏ.ஜெ.ஷெட்டி

இசை: ரவி பஸ்ரூர்

பத்திரிகை தொடர்பு: சதீஷ்குமார், சிவா (டீம் எய்ம்)

கர்நாடக மாநிலம் அமராபுரம் என்ற ஊரின் மகாராஜா வீரபகதூரின் மகள் மதுமதி (ஸ்ரேயா). அதே ஊரைச் சேர்ந்த இளைஞர் ஆர்கேஷ்வரன் (உபேந்திரா).  மதுமதியும் ஆர்கேஷ்வரனும் காதலர்கள்.

விமானப் படையில் சேர்ந்து பயிற்சி வீரராக இருக்கும் ஆர்கேஷ்வரன், விடுப்பில் சொந்த ஊருக்கு வருகிறார். காதலியைச் சந்தித்து கல்யாணத்துக்கு உறுதி கொடுத்தவர், அடுத்த சில நாட்களில் கத்தியை எடுக்கிறார். அண்ணனின் படுகொலைக்கு பழிவாங்கப்போய், அந்த ஊரின் பெரிய தாதாவாக உருவெடுக்கிறார்.

தாதா ஆர்கேஷ்வரனைப் பிடிக்க மாநில அரசு போலீஸ் படையை அனுப்ப, இன்னொரு பக்கம் துணை ராணுவப் படை முற்றுகையிடுகிறது. அது மட்டுமின்றி மற்ற தாதாக்களாலும் அவருக்கு தொல்லை.

ஆர்கேஷ்வரன், விருப்பமின்றி சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக கையிலெடுத்த வன்முறை, அவரை எங்கு கொண்டு நிறுத்தியது? சிக்கல்களை அவர் எப்படி எதிர்கொண்டார்? என்பது இப்படத்தின் கதை.

0a1c

நாயகன் ஆர்கேஷ்வரனாக நடித்திருக்கும் உபேந்திரா, மிகப் பெரிய தாதா என்பதற்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார். நல்ல உயரம், கட்டுக்கோப்பான உடல் வாகு, துடிப்பான நடிப்பு ஆகியவற்றால் நல்ல வரவேற்பைப் பெறுகிறார்.

நாயகி மதுமிதாவாக நடித்திருக்கும் ஸ்ரேயா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியுள்ள போதிலும், அழகு, கவர்ச்சி, நடனம், நடிப்பு என எதிலும் குறை வைக்காமல் எல்லாவற்றையும் நிறைவாக செய்திருக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக வரும் கிச்சா சுதீப், தனது கதாபாத்திரத்துக்கு ஏற்ப கம்பீரமாக இருக்கிறார். சிறப்புத் தோற்றத்தில் வரும் சிவராஜ்குமார் பங்கேற்றுள்ள காட்சிகளும் படத்துக்கு பலம்.

முரளி சர்மா, நவாப் ஷா, ஜான் கொக்கேன், கோட்டா சீனிவாசராவ், தேவ்கில் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை அளவாக வெளிப்படுத்தி கவனம் பெறுகிறார்கள்.

இயக்குநர் சந்துரு, உபேந்திராவை வைத்து மற்றுமொரு சுவாரஸ்யமான வெற்றிப்படமாக இதைக் கொடுத்திருக்கிறார். பழைய கதை என்றாலும் காட்சிகளில் இருக்கும் பிரமாண்டம் பார்வையாளர்களை வியக்க வைக்கிறது.

ஏ.ஜெ.ஷெட்டியின் ஒளிப்பதிவு படத்தின் பிரமாண்டத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறது.

ரவிபஸ்ரூரின் இசையில் பாடல்கள் ஓ.கே ரகம். பின்னணி இசையில் இரைச்சலை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

‘கப்ஜா’ – ஆக்‌ஷன் பிரியர்களுக்கு செம விருந்து!