ஆறாம் நிலம் – விமர்சனம்

ஐபிசி தமிழ் நடத்திய குறுந்திரைப் போட்டியில் வெற்றி பெற்ற இயக்குநர் ஆனந்த ரமணன், ஐபிசி தமிழ் தயாரிப்புக்காக இயக்கியிருக்கும் ஒன்றரை மணிநேர முழுநீள ஈழத் தமிழ் திரைப்படம் ‘ஆறாம் நிலம்.’

பழந்தமிழர்கள் தங்களது தமிழ் நிலத்தை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களாகப் பிரித்து வாழ்ந்தனர், இலக்கியம் – இலக்கணம் செய்தனர் என்பதை நாம் அறிவோம். அது என்ன ஆறாம் நிலம்?  ஐந்தாம் நிலமான பாலையைவிட திரிந்து, சீரழிந்து, துன்பமும் துயரமும் மண்டிக்கிடக்கும் அந்த ஆறாம் நிலம் எது?

அதுதான் இன்றைய தமிழீழம். 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த இறுதிப்போருக்குப் பின்னான தமிழீழம்.

போர்ச்சூழலைக் காட்டிலும் போருக்குப் பிந்தைய இன்றைய தமிழீழச் சூழல் அங்குள்ள தமிழ்மக்களை சொல்லொண்ணா துயரில் ஆழ்த்தியிருக்கிறது என்ற வலியை, வேதனையை, கசப்பான உண்மையை பார்வையாளர்களுக்கு கடத்துவதற்காக ‘ஆறாம் நிலம்’ படத்தை இயக்கியிருக்கிறார் ஆனந்த ரமணன்.

0a1d

சிங்கள இனவெறி ராணுவத்திடம் சரணடைந்த கணவர் உயிருடன் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் அவரை தேடும் மனைவி; அப்பா எப்போது வருவார்  என்ற கேள்வியுடன் காத்திருக்கும் மகள் – இந்த இரண்டு கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு ஒட்டு மொத்த தமிழ் ஈழ மக்களின் இதய வலியை நமக்கு புரிய வைத்திருக்கிறார் இயக்குனர் ஆனந்த ரமணன்.

இறுதிப்போர் முடிவுக்கு வந்த பிறகு, ஈழத்தமிழர்களை பல்வேறு வசதிகளோடு நன்றாக கவனித்துக் கொள்வதாகவும், அவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கி வருவதாகவும் சிங்கள இனவெறி அரசு தம்பட்டம் அடிக்கிறது. ஆனால்,  போரில் பதுக்கி வைக்கப்பட்ட கண்ணிவெடிகளை எடுப்பது தான் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அபாயகரமான வேலை.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் நவயுகா, அவரது மகளாக நடித்திருக்கும் தமிழரசி ஆகிய இருவரும் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். கண்ணிவெடிகளைத் தேடும் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் சிவ சாந்தகுமார் அனைவரையும் சீட்டின் நுனியில் அமர வைத்துவிடுகிறார். பின்னணி இசையில் சிந்தக்கா ஜெயக்கொடி கதையோடு பயணம் செய்ய வைத்துள்ளார்.

ஈழத்தமிழ் மக்களின் துயரங்களை கண்டும் காணாததுபோல் இருக்கும் சர்வதேச சமூகம் இந்த படத்தைப் பார்த்த பிறகாவது மனமிளகி அவர்களுக்கு நியாயம் செய்யட்டும்!