இது நம்ம ஆளு – விமர்சனம்

இதுவரைக்குமான தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிக மிக மோசமான படம் என்றால் அது சிம்பு நடித்திருக்கும் ‘இது நம்ம ஆளு’ படம்தான்.

கதை என்று எதுவுமே இல்லை. எனவே கதாபாத்திரங்களுக்கு இடையிலான முரண்பாடுகளுக்கும் வழியில்லை. ஆண்ட்ரியாவை ஏன் சிம்பு காதலித்தார்… பிரிந்தார்… என்பதற்கும் வலுவான காரணங்கள் இல்லை. நயன்தாராவை விழுந்து விழுந்து ஏன் காதலிக்கிறார் என்பதற்கும் ரீசன் இல்லை.

பாடலும் இசையும் படு த்ராபை. 137 நிமிடங்கள் முடிவதற்குள் 137 கோடி ஆண்டுகள் வாழ்ந்த அலுப்பு ஏற்படுகிறது.

பொதுவாக எந்தவொரு படம் குறித்தும் நெகடிவ் ஆக எழுதுவது பிடிக்காது. அதில் உடன்பாடும் இல்லை. எல்லா படைப்புமே பலரது கூட்டு உழைப்பை உள்ளடக்கியது என்பதில் அசாத்தியமான நம்பிக்கை உண்டு.

எனவே சரிவர சமைக்கப்படாத படங்கள் குறித்து பேசுவதைவிட தவிர்ப்பது சாலச் சிறந்தது. ஒருவகையில் அந்த படைப்பாளிகளுக்கு செய்யும் மரியாதையும் அதுதான்.

இந்த பாலிசிக்கு மாறாக ‘இது நம்ம ஆளு‘ குறித்து எழுத ஒரே காரணம் –

ப்ரேமுக்கு ப்ரேம்… ஷாட்டுக்கு ஷாட்… திரையில் தெரிந்த ரத்தக் கண்ணீர்.

கதாசிரியர் பாண்டிராஜும், ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியெமும், படத்தொகுப்பாளரும், இயக்குநர் பாண்டிராஜும் எந்த அளவுக்கு மனம் வெதும்பி போயிருக்கிறார்கள் என்பதை 137 யுகங்களும் உணர முடிந்தது.

ரத்தம் கக்கி செத்திருக்கிறார்கள்.

அதனால்தான் கடைசி ஷாட் முடிந்ததும், பாண்டிராஜின் வாய்ஸ் ஓவர் அடிவயிற்றில் இருந்து பீறிட்டு எழுகிறது: “உங்க ரெண்டு பேரை வைச்சு படம் முடிக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு…”

எப்பேர்பட்ட திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களாக இருந்தாலும் – தொழிலை மதிக்காத மோசமான நடிகனை வைத்து படம் எடுக்க முற்பட்டால் இதுதான் கதி – என்ற பாடத்தை ‘இது நம்ம ஆளு’ குழுவினர் கற்றிருக்கிறார்கள். தமிழ் சினிமா உலகத்துக்கும் காண்பித்திருக்கிறார்கள்.

எல்லீஸ் ஆர்.டங்கன் காலத்திலேயே டிராலி ஷாட் வந்துவிட்டது. 1947ம் ஆண்டு பட்சிராஜா ஸ்டூடியோ சார்பில் தயாரிக்கப்பட்ட ‘கன்னிகா‘ படத்தில் இயக்குநர் ஸ்ரீராமுலு நாயுடு க்ரேனை பயன்படுத்தி இருக்கிறார்.

இப்படிப்பட்ட நீண்ட மரபை கொண்ட தமிழ் சினிமா வரலாற்றில் –

இந்தப் படத்தில் இதையெல்லாம் பயன்படுத்தி இருக்கிறார்களா என்று ஆராய வேண்டியிருக்கிறது. அந்தளவுக்கு பல்லிளிக்கிறது ஷாட் கம்போசிங்.

இரு கதாபாத்திரங்கள் உரையாடும் காம்பினேஷன் காட்சியில் –

உரையாடுபவரை ஃபோகஸ் செய்து மற்றவரை சஜஷனில் காட்டுவார்கள். அல்லது டிராலி / க்ரேன் வழியாக இருவரையும் படம் பிடிப்பார்கள். left / right / center என கேமராவை வைத்து ஷூட் செய்வார்கள். long / middle / close up ஷாட்ஸ் எல்லாம் இதனுடன் கலந்த இலக்கணங்கள்.

திரைமொழியின் பால பாடம் இது. இதற்கு மேல் ஷாட் கம்போஸிங் செய்வது அந்தந்த இயக்குநர் / ஒளிப்பதிவாளரின் திறமையை பொறுத்தது.

இந்தப் படத்தில் அமீபா அளவுக்குக்கூட இதையெல்லாம் பார்க்க முடியவில்லை.

இரு கேரக்டர்கள் பேசும்போது தனித்தனியாக ஷூட் செய்து –

ஒரேயொரு காம்பினேஷன் ஷாட்டை உடன் இணைத்து ஒப்பேற்றி இருக்கிறார்கள்.

இப்படி எடுப்பது சீரியல்களுக்கான குணம். ஒரே நாளில் இரண்டு, மூன்று சீரியல்களில் நடிகர்கள் நடிக்க வேண்டி இருப்பதாலும், ஒரு நாளைக்கு குறைந்தது 45 நிமிட footage ஷூட் செய்ய வேண்டும் என்ற நிர்பந்தத்தாலும் அப்படி செய்வார்கள்.

இயக்குநர் பாண்டிராஜும், ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியெமும் இப்படி தொலைக்காட்சி தொடர் பாணியில்தான் முழு படத்தையும் மார்பிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு எடுத்து முடித்திருக்கிறார்கள்.

காரணம் – சிம்பு.

எப்போது ஸ்பாட்டுக்கு வருவார் என்றே தெரியாத நிலையில் சக ஆர்டிஸ்ட்டை வரவழைத்துவிட்ட பாவத்துக்காக ‘உங்க வசனத்தை நீங்க பேசிட்டு போங்க…‘ என சொல்லியிருக்கிறார்கள்.

சூரி / ஜெயப்ரகாஷ் போன்றவர்கள் மட்டும் available artiste போல. கேமராவை ஸ்டாண்ட் போட்டு வைத்துவிட்டு சிம்புவுடன் அவர்களை அமர வைத்து, அல்லது நடக்கவிட்டு அல்லது அருகருகில் படுக்க வைத்து ஒப்பேற்றி இருக்கிறார்கள்.

ராஜஸ்தான் உணவகத்தில் ஆண்ட்ரியா அறிமுகமாகும் காட்சியே இப்படி சிங்கிள் கம்போஸிங் ஆகத்தான் இருக்கிறது.

நயன்தாரா?

கேட்கவே வேண்டாம். விரல் விட்டு எண்ணக் கூடிய ஷாட்ஸ் தான் காம்பினேஷன். மற்றவை எல்லாம் கேமராவை பார்த்து பேசும் மோனோ ஆக்டிங்தான்.

ஸ்பீல்பெர்க்கே வந்தாலும் சிம்புவை வைத்து இப்படித்தான் ஷூட் செய்ய முடியும் போல.

துண்டு துண்டாக ஸ்பாட்டுக்கு சிம்பு வந்திருப்பாரோ என்னவோ. அவ்வப்போது எடுத்ததை கோர்க்க முடியாமல் கோர்த்து… montages ஆக ஆங்காங்கே ஏதேதோ காரணங்களுக்காக எடுத்த ஷாட்ஸை ஒட்ட வைத்து… ஒரு படமாக மாற்ற படாதபட்டு தோற்றிருக்கிறார்கள்.

அலைபாயும் காட்சிகளும், சம்பந்தமே இல்லாமல் வந்து போகும் மேனரிசங்களும் பல முறை கதை திருத்தி திருத்தி எழுதப்பட்டிருப்பதை உணர்த்துகிறது.

தனது அனைத்துப் படங்களிலுமே செல்போனை ஒரு கதாபாத்திரமாக பாண்டிராஜ் பயன்படுத்தி இருப்பார்.

இந்தப் படத்திலும் செல்போன் வருகிறது. எப்படி தெரியுமா?

சக நடிகர்கள் வர லேட்டானால் சீரியல்களில், வந்த நடிகரை சாமி படங்கள் முன்னால் நிற்க வைத்து மூன்று நிமிட ஃபுட்டேஜ் கிடைக்கும் அளவுக்கு அதுவரைக்குமான கதைச் சுருக்கத்தை பேச வைத்து ஒப்பேற்றுவார்களே… அதுபோல.

இந்தப் பக்கம் தனியாக சிம்பு நகராமல் பேசுகிறார். அந்தப் பக்கம் நயன்தாராவோ அல்லது ஆண்ட்ரியாவோ – ஹியர் போனையோ அல்லது கழுத்துக்கு இடையில் கைபேசியை வைத்தோ –

பேசுகிறார்கள். பேசுகிறார்கள். பேசுகிறார்கள்.

‘அழகன்‘ படத்தில் முழு இரவும் மம்முட்டியும் பானுப்ரியாவும் லேண்ட் லைனில் பேசுவதை வெறும் மூன்று நிமிட பாடலாக, அழகாக கே.பாலசந்தர் எடுத்திருப்பார்.

இந்தப் படத்தில் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் வெறும் செல்போன் பேச்சுக்கள் மட்டுமே வருகின்றன.

இதனால் கதை நகர்கிறதா என்றால் தலைவலிதான் அதிகரிக்கிறது.

போலவே –

சிம்புவின் வீட்டை காண்பிப்பதற்கு முன்னால் ஒவ்வொரு முறையும் அடுக்குமாடி குடியிருப்பின் முன் பக்கத்தை காட்டுவது-

பகல் என்பதை உணர்த்த சூரிய உதயம் –

இரவை காட்ட சாலையெங்கும் மின் விளக்கு.

லைப்ரரியில் இருக்கும் இந்த ஸ்டாக் ஷாட்ஸை வைத்து ஒரு காட்சிக்கும் மறுகாட்சிக்குமான தொடர்பை ஏற்படுத்த படத்தொகுப்பாளர் முட்டி மோதியி்ருக்கிறார்.

இயக்குநர் ஸ்ரீதர் காலத்திலேயே இந்த பாணி காலாவதி ஆகிவிட்டது என்ற உண்மை நிச்சயம் அவரது உள்ளத்தை பொசுக்கி இருக்கும்.

‘இது நம்ம ஆளு‘க்காக உண்மையில் எழுதப்பட்ட கதையை (ஒரே ஜோடி வெவ்வேறு காரணங்களுக்காக மூன்று முறை திருமணம் செய்துகொள்கிறது – சரியாதான் கண்டுபிடிச்சிருக்கேனா?!) இதே தொழில்நுட்பக் கலைஞர்கள் வேறு நடிகரை வைத்து தாராளமாக எடுக்கலாம். நிச்சயம் அந்த படம் ஹிட் அடிக்கும்.

கதாசிரியரும் இயக்குநருமான பாண்டிராஜ் மீதும் ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியெம் மீதும் நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு பிறகும் தொழில் அக்கறை இல்லாத நடிகனை வைத்து ஒருபோதும் படம் எடுக்காதீர்கள்.

அதை தாங்கும் சக்தி நிச்சயம் ரசிகர்களான எங்களுக்கு இல்லை…

– கே.என்.சிவராமன்