பேய் மாமா – விமர்சனம்

நடிப்பு: யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரேகா, மொட்ட ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி

இயக்கம்: சக்தி சிதம்பரம்

இசை: ராஜ் ஆர்யன்

ஒளிப்பதிவு: எம்.வி.பன்னீர்செல்வம்

ஒரு பெரிய பங்களா. அதை விலைக்கு வாங்க வருபவர்களை, அதில் பேய் இருப்பதாக பயமுறுத்தி விரட்டிவிடுகிறார்கள் வில்லன்கள். இந்நிலையில், பேய் ஓட்டப்போவதாக பொய் சொல்லி தன் குடும்பத்துடன் பங்களாவுக்குள் நுழைகிறார் யோகிபாபு. அங்கே

எம்.எஸ்.பாஸ்கர், ரேகா, மொட்ட ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட சிலர் நிஜமாகவே  பேய்களாக  வசித்து வருகிறார்கள். அந்த பேய்கள் தாங்கள் வில்லன்களால் கொலையுண்டு பேயாக மாறிய பிளாஷ்பேக்கைச் சொல்லி, வில்லன்களை பழிவாங்க தங்களுக்கு உதவ வேண்டும் என யோகிபாபுவிடம் கோரிக்கை வைக்கின்றன. பேய்களின் கோரிக்கையை  யோகிபாபு ஏற்றாரா? வில்லன்களை பேய்கள் பழிவாங்கினவா? என்பது மீதிக்கதை.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் யோகிபாபு, தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார். ரஜினியின் சந்திரமுகி மற்றும் பேட்ட பட சாயலில் அறிமுகமாகிறார் யோகிபாபு. பல படங்களின் காட்சிகளை எடுத்து அதில் தன் பாணி டயலாக்கை சொல்லி நடித்திருக்கிறார். இது ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்துகிறது. மற்ற கதாபத்திரங்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

பேய் பங்களா கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஷக்தி சிதம்பரம். மற்ற படங்கள் போல் இப்படமும் வழக்கமான பேய் கதையாகவே இருக்கிறது. கதை மற்றும் காட்சிகளில் புதுமை இல்லை. வடிவேலு பேசிய டயலாக்குகளை எல்லாம் வைத்து பாடலாக உருவாக்கியுள்ளனர். இந்த பாடலை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. டி.வி. நிகழ்ச்சிகளை கிண்டல் செய்யும் காட்சிகள், யோகிபாபு பலரை திட்டும் காட்சிகள் கடுப்பை ஏற்படுத்துகிறது.

ராஜ் ஆர்யன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையும் ஓ.கே. ஒளிப்பதிவில் எம்.வி.பன்னீர்செல்வம் கூடுதல் கவனம் செலுத்துயிருக்கலாம்.

‘பேய் மாமா’ – சிரிப்புக் காட்டாத மாமா!