இணையதளம் – விமர்சனம்

ஒரு இணையதளம் இருக்கிறது. அது வெறும் இணையதளம் அல்ல; கொலைதளம். ஒரு மர்மநபர், தான் கொல்ல நினைக்கும் நபரை பிடித்து வந்து, வீடியோவில் படமாக்கி, தன் இணையதளத்தில் லைவாக ஒளிபரப்புகிறார். அதை பார்க்க அந்த இணையதளத்தை லாக்-இன் செய்யும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, பிணைக் கைதி உயிரிழக்கும் அபாயமும் அதிகரிக்கும் வகையில் அந்த இணையதளம் புரோகிராம் செய்யப்பட்டிருக்கிறது. இவ்விதம் மர்மநபர் வேறு எதுவும் செய்யாமலேயே, பார்வையாளர்களால், அவர்களுக்கு விஷ்யம் தெரியாமலேயே, பரிதாபமாக படுகொலை செய்யப்படுகிறார். இந்த ஆன்லைன் கொலைகளை தடுக்கவும், மர்மநபரை பிடிக்கவும் ஒரு போலீஸ் அதிகாரி, ஒரு சைபர் கிரைம் பெண் போலீஸ் அதிகாரி, ஒரு சைபர் கிரைம் போலீஸ் டெக்னீஷியன் ஆகிய மூவர் களம் இறக்கப்படுகிறார்கள். இது தான் ‘இணையதளம்’ படத்தின் கான்செப்ட்.

இந்த ஆன்லைன் கொலைகளுக்கு காரணமான மர்மநபர் யார்? அவர் ஏன் இப்படி செய்கிறார்? அவரை பிடிக்க களம் இறக்கப்பட்ட போலீஸ் துறையைச் சேர்ந்த மூவரும் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள்? இறுதியில், அவர்கள் மர்மநபரை பிடித்தாரா, இல்லையா? என்பது மீதிக்கதை.

போலீஸ் அதிகாரியாக நாயகன் கணேஷ் வெங்கட்ராம் நடித்திருக்கிறார். அவரது உயரத்துக்கும், கஞ்சி போட்டு அயர்ன் செய்யப்பட்டது போன்ற அவரது உடல் விறைப்புக்கும் பொருத்தமான கதாபாத்திரம். சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சைபர் கிரைம் பெண் போலீஸ் அதிகாரியாக வரும் ஸ்வேதா மேனன், முதிர்ச்சியான முகம் மற்றும் உடல்வாகுவுடன் அழகாக நடித்திருக்கிறார்.

படத்தின் இரண்டாவது நாயகனாக ‘சின்னத்திரை’ ஈரோடு மகேஷ் நடித்திருக்கிறார். சைபர் கிரைம் போலீஸ் டெக்னீஷ்யன் என்ற குணச்சித்திர கதாபாத்திரத்தில் வரும் அவருக்கு காதல் மற்றும் காமெடி காட்சிகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. தன்னால் இயன்ற அளவு கொடுத்த வேலையை ஒழுங்காக செய்ய முயன்றிருக்கிறார். அவரது கதாபாத்திரத்தின் முடிவு, பார்வையாளர்களின் அனுதாபத்தை அள்ளுகிறது.

வில்லியாக பழம்பெரும் நடிகை சுகன்யா வந்து அதிர்ச்சி கொடுக்கிறார். சில காட்சிகளே வந்தாலும் சாந்தம், கோபம், கொலைவெறி, கண்ணீர் என பல ரசங்களை நடிப்பில் பிழிந்தெடுத்து கொடுத்திருக்கிறார்.

கார்த்திக் ராஜாவின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம். அரோல் கரோலியின் இசை சுமார் ரகம்.

நவீன தொழில்நுட்ப யுகத்துக்கு பொருத்தமான “ஆன்லைன் கொலைகள்” என்ற க்ரைம் த்ரில்லர் கருவை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார்கள் அறிமுக இயக்குனர்களான சங்கர் – சுரேஷ். சைபர் கிரைம் குற்றவாளிகளைப் பிடிப்பது அத்தனை சுலபம் இல்லை என்று காட்டுவதற்காக, நாயகன் கணேஷ் வெங்கட்ராம், நாயகி ஸ்வேதா மேனன், இரண்டாவது நாயகன் ஈரோடு மகேஷ் ஆகிய மூவரும் படத்தின் பெரும்பகுதியில் வெறுமனே கையை பிசைந்துகொண்டு, தேமே என்று டிவி திரையை பார்த்துக்கொண்டே இருப்பது போல் காட்டியிருப்பது சிறப்பு. படம் பார்க்கும் நமக்குத் தான் அலுப்பு!

‘இணையதளம்’ – கான்செப்ட்டுக்காக பார்க்கலாம்!