சங்கிலி புங்கிலி கதவ தொற – விமர்சனம்

சொந்த வீடு வாங்கி அம்மாவை (ராதிகா சரத்குமார்) சந்தோஷப்படுத்த வேண்டும் என்று போராடுகிறார் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் வாசு (ஜீவா). பல தந்திரங்கள் செய்து அவர் வாங்கும் பழைய பங்களா வீட்டில் உறவினர்களுடன் குடியேறுகிறார். ஆனால், ஏற்கெனவே அங்கு குடும்பத்துடன் உட்கார்ந்திருக்கும் ஜம்பு (தம்பி ராமையா), அந்த வீட்டுக்கு உரிமை கொண்டாடுகிறார். அவரது பெண் ஸ்வேதாவை (ஸ்ரீதிவ்யா) ஜீவா காதலிக்கிறார்.

தம்பி ராமையாவின் குடும்பத்தை விரட்டுவதற்காக அந்த வீட்டில் பேய் இருப்பதாக ஜீவாவும், அவரது நண்பர் சூரணமும் (சூரி) நம்ப வைக்கிறார்கள். உண்மையிலேயே அங்கு ஒரு பேய் (ராதாரவி) வசிப்பது தெரிந்ததும் அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். பேய்க்குப் பயந்து வீட்டைவிட்டு வெளியேற மறுக்கும் ஜீவா, பேயிடமே சவால் விடுகிறார். சவாலில் வென்றது நாயகனா, பேயா? என்பதுதான் கதை.

திகிலையும், நகைச்சுவையையும் கலந்து கொடுக்க முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஐக். பங்களாவில் வசிப்பவர்களை அங்குள்ள பேய் மிரட்டுவதோடு படம் தொடங்குகிறது. அடுத்தடுத்த காட்சிகளில் ஜீவாவும், சூரியும் லூட்டி அடிக்கிறார்கள். பேய் இருப்பது தெரிந்ததும் வேகமெடுக்க வேண்டிய திரைக்கதை திரும்பத் திரும்ப ஒரே இடத்தைச் சுற்றி வருகிறது. காட்சிகளிலும் புதுமை இல்லை. பேய் இருப்பது போன்ற சூழலை ஏற்படுத்தி ஏமாற்றுவது, பிறகு நிஜ பேயைக் கண்டு இவர்களே மிரள்வது, பேயின் பின்னணி, மேக்கப் ஆகிய எதுவும் புதிதில்லை. பேய்க்கான காட்சியமைப்புகள், பேயைப் பின்னணியாகக் கொண்ட நகைச்சுவையில் பல படங்களின் சாயல்கள்.

பேயிடம் ஜீவா சவால் விடும் காட்சி, அதில் வரும் வசனங்கள் ரசிக்கும்படி இருக்கின்றன. ‘அண்ணாமலை’ பட ரஜினி ஸ்டைலில் பேயிடம் சவால் விடுகிறார் ஜீவா. பேயாக வருவது ராதாரவி என்பதால், இக்காட்சியின் சுவாரசியம் கூடுகிறது. சூரி, ஜீவா நகைச்சுவைக் கூட்டணியில் ஆங்காங்கே கலகலப்புக்கு உத்தரவாதம் உண்டு. தம்பி ராமையாவும் தேவதர்ஷினியும் பேசும் சில வசனங்கள் அருவருப்பூட்டுகின்றன.

காதல் காட்சிகளை ஏனோ தானோ என்று கையாண்டிருக்கிறார் இயக்குநர். தம்பி ராமையா அந்த வீட்டை ஏன் சொந்தம் கொண்டாடு கிறார் என்பதைச் சொல்லவில்லை. வாடகை வீட்டில் ராதிகாவும், ஜீவாவும் படும் அவதிகளின் சித்தரிப்பு அநியாயத்துக்கு மிகைப்படுத்தப்பட்டுள்ளது.

இப்படிப் பல சிக்கல்கள் இருந்தாலும், உறவுகள் கூடி சந்தோஷமாக வாழ்வதைப் பார்க்க விரும்பும் ஒரு பேயின் ஆசையைச் சொல்லியிருக்கும் விதம் கவர்கிறது. காதல் காட்சிகள் கைவிட்ட நிலையில் காமெடியில் அதிக மார்க் வாங்குகிறார் ஜீவா.

ஸ்ரீதிவ்யாவுக்கு இது மற்றுமொரு படம், அவ்வளவுதான்.

சூரி ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார்.

வீட்டைவிட்டு வெளியேற மறுக்கும் இடங்களில் தம்பி ராமையாவின் நடிப்பு கவனிக்க வைக்கிறது. ராதிகா நடிப்பு கச்சிதம். ராதாரவி நடிப்பு படத்துக்குப் பெரிய பலம். கோவை சரளா தன் பங்கை குறைவின்றி செய்திருக்கிறார்.

விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையில் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். சத்யனின் ஒளிப்பதிவு சிறப்பு.

பேய் உறையும் பங்களா என்னும் பின்னணியில் குடும்பச் சித்திரம் வரைய முயன்ற இயக்குநர், பழகிய பாதையிலேயே திரைக்கதையை அமைத்திருப்பது ஏமாற்றம் தருகிறது. ராதாரவியின் நடிப்பு, அவ்வப்போது தலைகாட்டும் கலகலப்பு ஆகியவை படத்துக்கு முட்டுக்கொடுத்துக் காப்பாற்றுகின்றன.

‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ – இற்றுப்போன பழைய கதவு!

.